திங்கள், 8 ஜனவரி, 2024

சபரிமலைக்கு வந்தா அடிப்பீங்களா.. ஐயப்ப பக்தர்களை பற்றி உங்களுக்கு தெரியாது.. தமிழிசை ஆவேசம்

tamil.samayam.com - ஜே. ஜாக்சன் சிங் :  கோவை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களை கேரள போலீஸார் சாமி தரிசனம் செய்யவிடாமல் தாக்குவதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் இந்து மத துவேசத்தை கடைப்பிடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சபரிமலையில் கார்த்திகை மாதம் மண்டல பூஜை ஆரம்பித்ததில் இருந்தே, அங்கு ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது. கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்தன.
ஆனாலும், ஐயப்பனை தரிசிப்பதற்காக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல மாநிலங்களில் இருந்து தினம் தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்கிறார்கள். கூட்டம் அதிக அளவில் இருப்பதால் ஐயப்பனை தரிசிக்க 10 மணிநேரத்திற்கும் மேல் ஆவதாக கூறப்படுகிறது.

அதே சமயத்தில், இப்படி காத்துக் கிடக்கும் பக்தர்களுக்காக தண்ணீர் வசதியை கூட இந்த முறை கேரள அரசு செய்து தரவில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், கடந்த சில தினங்களாக தமிழகத்தில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களை கேரள போலீஸார் கண்மூடித்தனமாக தாக்குவதாக பக்தர்கள் நேற்று கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்காமல் பாதியிலேயே விரதத்தை முடித்துக் கொண்டு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழிசை, "ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் தாக்கப்படுவது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. மதசசார்பின்மையை தாங்கள் கடைப்பிடிப்பதாக கூறிக்கொண்டு இந்து மத சார்புடைய துவேசத்தை தான் தமிழக முதல்வர் ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், சபரிமலைக்கு போயிட்டு சாமியை பார்க்க முடியாமல் பலர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். தண்ணீர் வசதியை கூட கேரள அரசு செய்து தரவில்லை என பக்தர்கள் கூறுகிறார்கள். கேரள அரசு என்ன நினைக்கிறது என்றால், நாம் சரியாக வசதியை செய்து தரவில்லை என்றால் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை குறையும் என நினைக்கிறது. ஆனால், ஐயப்ப பக்தர்களை பற்றி உங்களுக்கு தெரியாது. இன்னும் அவர்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கும். நீங்கள் (பினராயி விஜயன்) அவர்களுக்கு தேவையான வசதியை செய்து கொடுத்தே தீர வேண்டும்" என தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

கருத்துகள் இல்லை: