சனி, 9 டிசம்பர், 2023

நிவாரண தொகையை ரொக்கமாக கையில் தர தமிழ்நாடு அரசு தீர்மானம் .. பல இடங்களில் ஏ டி எம்கள் வேலை செய்யவில்லை

tamil.oneindia.com -  Vignesh Selvaraj :  நிவாரண தொகையை வங்கி கணக்கில் போட வேண்டாம்.. ரொக்கமாக கையில் தர தமிழக அரசு தீர்மானம் !
சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழையால் பாதிக்கப்பட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகையை ரேஷன் கடைகள் மூலம் தருவது ஏன் என்பது பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. வீடுகளில் வெள்ள நீர் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கையையே முடக்கிப் போட்டது.
மழை வெள்ள நிவாரணம்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
 தொடர்ந்து, மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும், இதர நிவாரண உதவித் தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மழை வெள்ளத்தில் தொலைந்து போன ரேசன் கார்டுகள்.. ரூ.6000 நிவாரணம் பெறுவது எப்படி
மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும். சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

எவ்வளவு?: பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7.410/-லிருந்து, ரூ.8,500/-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000 என்றிருந்ததை, ரூ.37,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000 என்றிருந்ததை, ரூ.4,000 உயர்த்தி வழங்கப்படும். சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 அந்தந்தப் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலமாக, நிவாரணத் தொகை ரொக்கமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு, “உரிமைத்தொகை” போல வங்கி கணக்கு மூலம் வழங்காமல் ரொக்கமாக நிவாரணத்தொகை தருவது பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை என புகார் வந்துள்ளதால் ரொக்கமாக நிவாரணம் வழங்கப்படுகிறது என்றும் பல ரேஷன் அட்டை தாரர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்பதாலும், வங்கி கணக்குகள் தொடங்கி நிவாரணம் தருவதற்கு கால தாமதம் ஏற்படும் என்பதாலும் நிவாரணத்தை ரொக்கமாக தர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu government has explained why it is giving cash relief to the victims of Michaung cyclone and heavy rains.

கருத்துகள் இல்லை: