ஞாயிறு, 3 டிசம்பர், 2023

மிக்ஜாம்.. சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை!

 tamil.oneindia.com - Vigneshkumar :சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை உள்ளிட்ட பல்வேறு வடமாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வரும் காலங்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் முக்கிய அலர்ட்டை வெளியிட்டுள்ளது.
Cyclone Michaung Very heavy rain predicted in Chennai and neighbor districts chennai meteorological dept
வானிலை மையம்: அதன்படி சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று (02-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (03-12-2023) காலை 0530 மணி அளவில் 'மிக்ஜாம்' புயலாக வலுப்பெற்று, 1130 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.



இது சென்னைக்குத் தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 380 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

பலத்த காற்று: இது வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

உங்க மொபைல் மழைநீரில் நனைந்தால்.. உடனே இதை செய்யுங்கள் போதும்! அரிசியில் போட்டால் சுத்தமா யூஸ் இல்லைஉங்க மொபைல் மழைநீரில் நனைந்தால்.. உடனே இதை செய்யுங்கள் போதும்! அரிசியில் போட்டால் சுத்தமா யூஸ் இல்லை

இன்று மழை எங்கே: இதனால் இன்று (டிச. 3) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

கனமழை கன்பார்ம்: அதேபோல நாளை (டிச .4) வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் (டிச.5) தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் நாட்கள்: வரும் டிச.6ஆம் தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் டிச.7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தரைக்காற்று எச்சரிக்கை: இன்று (டிச. 3) திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை டிச.4ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 150 மிமீ மழை பெய்துள்ளது.. அதேபோல ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 130 மிமீ, தென்காசி (தென்காசி) 110 மிமீ, மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 100 மிமீ மழை பெய்துள்ளது. இவை மட்டுமின்றி பெரும்பாலான இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் நல்ல மழை பெய்துள்ளது.

கருத்துகள் இல்லை: