tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: சென்னை மாநகரை மிக்ஜாம் புயல் பதம் பார்த்து விட்டு சென்ற நிலையில், தற்போது எங்கு பார்த்தாலும் வெள்ள நீராக சூழ்ந்துள்ளது.
தற்பொது மழை குறைந்துவிட்ட நிலையில் மழை நீரை வெளியேற்ற சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
மக்களின் இயல்பு வாழ்க்கையை அப்படியே முடக்கிப்போட்டது இந்த மிக்ஜாம் புயல்.
தற்போது மிக்ஜாம் புயல் சென்னையை கடந்துவிட்டபோது நள்ளிரவு வரை நீடிக்கலாம் என்றும், தற்போதில் இருந்தே மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
எனினும் தற்போது இந்த புயல் சென்னையை கடந்து சென்று, சென்னைக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 130 கி.மீ தொலைவில் நிலைகொண்டு இருப்பதால் இனி மழை குறையும் என்று தெரிவித்தது. அதன்படி தற்போதைய 1 மணி நிலவரப்படி சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யவில்லை. மழை குறைய தொடங்கியது. ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்தது.
இதேபோல் அடுத்த ஒரு வாரத்திற்கு வடகிழக்கு பருவமழையை தீவிரப்படுத்தக்கூடிய சாதகமாண சூழல்கள் இல்லை என்றும் மழை பெய்வதவற்கான சூழல் மிக குறைவாகத்தான் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போது இந்த புயல் சென்னைக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 130 கி.மீ தொலைவில் நிலைகொண்டு இருப்பதாகவும், ஆந்திராவின் நெல்லூரை புயல் நெருங்கி கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தது.
12 கிமீ வேகத்தில் தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி நகரும் மிக்ஜாம் புயல், நாளை முற்பகல் நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும். ஆந்திரா நெல்லூர் தென்கிழக்கில் 50 கிமீ தொலைவில் மிக்ஜாம் புயல் நிலைகொண்டுள்ளது என்றும் இனி சென்னையில் மழை குறைந்துவிடும் என்றும் தெரிவித்து இருந்தது. வானிலை மையம் அறிவித்தப்படியே நள்ளிரவில் சென்னையில் மழை குறைய தொடங்கியது.
இந்த நிலையில், சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* முக்கிய சாலைகளில் விழுந்துள்ள மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. உள்பகுதியில் விழுந்த மரங்கள் இன்று காலை நேரத்திற்குள் அகற்றப்படும்.
* வெள்ள நீரை வடிய வைப்பதற்காக நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் இருந்து ராட்சத பம்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அதிக திறன் கொண்ட அந்த பம்புகளால் தண்ணீரை கூடுதல் வேகத்தில் வெளியேற்ற முடியும்.
* தற்போது முதன்மை பணியாக, முக்கிய சாலைகளில் தண்ணீரை அகற்றி போக்குவரத்தை சீர் செய்வது, தாழ்வான பகுதிகளில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவது தான். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக