திங்கள், 11 டிசம்பர், 2023

அப்பல்லோவில் துரை தயாநிதி- முழு கலைஞர் குடும்பமும் மருத்துவமனையில் .. விபரம்

minnambalam.com - Kavi :  அப்பல்லோவில் குவிந்த கலைஞர் குடும்பம்! ஆபரேஷன்… வெண்டிலேட்டர்… துரை தயாநிதியின் ஹெல்த் கண்டிஷன்!
வைஃபை ஆன் செய்ததும் மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும், ’அழகிரியின் மகன் துரை தயாநிதி ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்கிறது?’ என்ற கேள்வி இன்பாக்சில் வந்திருந்தது.
இதுகுறித்து திமுக உயர் மட்ட வட்டாரங்களில் விசாரித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“டிசம்பர் 6 ஆம் தேதி தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார் துரை தயாநிதி. நண்பரின் வீட்டிலேயே தங்கியவரை அடுத்த நாள் காலையில் நண்பர்கள் எழுப்பியிருக்கிறார்கள்.
அவர் எழுந்திருக்காததால், துரையின் மனைவிக்கு போன் செய்து சொல்லியிருக்கிறார்கள்.


பக்கத்தில்தான் வீடு என்பதால் அவர் விரைவாகச் சென்று பார்த்திருக்கிறார். அப்போதுதான் துரை தயாநிதி கீழே விழுந்திருப்பதும் மயக்கத்தில் இருப்பதும் தெரிந்திருக்கிறது.
உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மருத்துவர்கள் பரிசோதித்து அதிகாலை 3 மணிக்கு மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

உடனடியாக மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். தகவல் அறிந்து அன்று, டிசம்பர் 7 பகல் முதலமைச்சர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.

நான்காம் தளத்தில் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த துரை தயாநிதியின் ஹெல்த் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். தனது அண்ணன் மு.க. அழகிரியிடமும் பேசினார்.

தகவல் அறிந்து அழகிரி மதுரையில் இருந்து சென்னை புறப்பட்டு வருவதற்குள் மருத்துவ அவசரம் கருதி துரை தயாநிதிக்கு மூன்று மணி நேரத்துக்கு மேலாக அறுவை சிகிச்சை செய்தனர் மருத்துவர்கள். துரை தயாநிதியின் உடல் நலன் பற்றி அறிய வெள்ள பாதிப்பு தொடர்பான தனது பணி நெருக்கடிகள் இருந்தபோதும் முதலமைச்சர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கே சென்று விசாரித்தார். தொடர்ந்து மருத்துவர்களிடம் பேசி வருகிறார்.

முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் துரை தயாநிதிக்கு சிகிச்சை அளிக்க ஒவ்வொரு துறையிலும் ஸ்பெஷலிஸ்ட்டுகளை கொண்ட டாக்டர்ஸ் டீம் ஒன்றை அமர்த்தியிருக்கிறார்கள் அப்பல்லோ நிர்வாகத்தினர்.

இதேபோல அமைச்சர் உதயநிதி அவரது குடும்பத்தினர், செல்வி, முரசொலி செல்வம் குடும்பத்தினர், மு.க. தமிழரசு குடும்பத்தினர், கனிமொழி குடும்பத்தினர், கலாநிதி மாறன் -தயாநிதி மாறன் குடும்பத்தினர், மு.க.முத்து குடும்பத்தினர் என ஒட்டுமொத்த கலைஞர் குடும்பமே அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து அழகிரிக்கும் காந்தி அழகிரிக்கும் பக்க துணையாக இருக்கிறார்கள்.

கலாநிதிமாறன் தனது பல்வேறு பணிகளை எல்லாம் விட்டுவிட்டு சுமார் நான்கு மணி நேரம் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அழகிரியுடன் பேசிச் சென்றிருக்கிறார். ஏற்கனவே கலாநிதிமாறன் நிர்வகிக்கும் செய்தித் தாளில் வெளியான சர்வே முடிவால்தான் மதுரையில் நாளேடு அலுவலகம் மீதான தாக்குதல் நடந்து திமுகவிலும் மிகப்பெரிய அளவு எதிரொலித்தது. அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்படும் வரை சென்றது. இதெல்லாம் பழைய கதை.

ஆபரேஷன் முடிந்த சில மணி நேரங்களில் துரை தயாநிதி கண் விழித்துப் பார்த்திருக்கிறார். ஆனாலும் அவருக்கு சில மருந்துகளைக் கொடுத்து மீண்டும் தூங்க வைத்த மருத்துவர்கள் அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தினார்கள்.

இதுகுறித்து மருத்துவ வட்டாரங்களில் விசாரித்தபோது, ’மேஜர் ஆபரேஷன்கள் உட்பட எல்லா ஆபரேஷன்களிலும் ஆபரேஷன் செய்யும்போது காட்டுகிற நுட்பம், கவனத்துக்கு இணையாக ஆபரேஷனுக்கு பிறகும் காட்ட வேண்டும். அந்த வகையில் மேஜர் ஆபரேஷன் என்பதால் உடலின் மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளில் ஏற்படும் தாக்கத்தை நுட்பமாக கவனிக்க வேண்டும்.

துரை தயாநிதிக்கு ஏற்கனவே ஹை பிரஷர் இருந்துள்ளது. மேலும் அவருக்கு இதயத்தில் பிளாக் இருந்துள்ளது. இந்த மருத்துவ சூழலில் ஆபரேஷனுக்கு பிறகான அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு சப்போர்ட் ஆக வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார் துரை தயாநிதி’ என்கிறார்கள்.

இதற்கிடையே மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி, முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்ளிட்ட தென் மாவட்ட அரசியல் புள்ளிகளும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அழகிரி மகனின் உடல் நலன் விசாரித்துக் கொண்டே இருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: