வெள்ளி, 1 செப்டம்பர், 2023

இலங்கை யாழ்ப்பாண பூர்வீக தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் அதிபரானார்!

 tamil.asianetnews.com  - Ansgar R  :   சிங்கப்பூர் அதிபராகிறார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர்  தர்மன் சண்முகரத்னம் கனகரத்தினம்!
சிங்கப்பூரின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்கெடுப்பு இன்று செப்டம்பர் 1ம் தேதி துவங்கி நடந்து முடிந்தது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட திரு  தர்மன் சண்முகரத்தினம் முன்னிலையில் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் தற்பொழுது அதிபராக பணி செய்து வரும் 68 வயது பெண்மணியான ஹலீமா யாக்கோப் அவர்களின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில், சிங்கப்பூரின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் கடந்த சில நாட்களாகவே முழு வீச்சில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்த அதிபர் தேர்தலில் பங்கேற்க மூன்று பேர் தகுதி பெற்றனர், GIC நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி இங் கொக் சொங் (Ng Kok Song), சிங்கப்பூரின் முன்னாள் மூத்த அமைச்சர் (சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர்) தர்மன் சண்முகரத்தினம் மற்றும், NTUC Income நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டான் கின் லியென் (Tan Kin Lian) ஆகியோர் ஆவர்.

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் 2023 : அதிபர் ஹலிமா, பிரதமர் லீ வாக்களிப்பு!
இந்த மூவரும் கடந்த சில வாரங்களாக பொதுமக்களை சந்தித்து தங்களுடைய அதிபர் தேர்தலுக்கான வாக்குகளை சேகரிக்க துவங்கினர். அப்போது சிங்கப்பூரின் உட்லன்ஸில் உள்ள கம்போங் அட்மிரல்டி உணவக அங்காடியில் பொதுமக்களை சந்தித்து பேசிய அதிபர் வேட்பாளர் டான் கின் லியென், அதிபர் தேர்தலில் முன்னாள் அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் தனக்கு ஒரு கடுமையான போட்டியாளராக விளங்குவார் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் சிங்கப்பூரை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து விஷயங்களிலும் தன்னுடைய முன் அனுபவம் உதவும் என்று தான் கருவுவதாகவும் மக்களிடம் அவர் கூறினார். இதேபோல மூன்று வேட்பாளர்களும் மக்களை பொதுவெளியில் சந்தித்து பேசினார்.

இன்று நடந்த வாக்கெடுப்பு
இந்நிலையில் இன்று சிங்கப்பூரின் அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், அன்னாசிப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட   தர்மன் சண்முகரத்தினம் சுமார் 70 சதவிகித வாக்குகள் பற்று முன்னிலையில் உள்ளார். அவரோடு போட்டியிட்ட GIC நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி இங் கொக் சொங் 16 சதவிகித வாக்குகளையும், NTUC Income நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டான் கின் லியென் 14 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஆகவே பலமடங்கு முன்னிலையில் உள்ள தர்மன் தான் சிங்கப்பூரின் அடுத்த அதிபராக பதிவியேற்பார் என்று செய்திகள் வெளியாகிவருகின்றது.

கருத்துகள் இல்லை: