ஞாயிறு, 26 மார்ச், 2023

தலைமை நீதிபதி சந்திரசூட் : சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு பதில்

 bbc.com  : மு.க.ஸ்டாலின் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் கோரிக்கை: சமூக நீதி அடிப்படையில் நியமனம் குறித்து என்ன சொன்னார்கள்?
மதுரை மாவட்ட உயர்நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலவர் மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்,
 சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறவேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்.
வழக்காடு மொழி குறித்த கோரிக்கைக்கு மேடையில் பதில் கூறிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இந்தியாவின் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 348வது பிரிவு கூறுவதால், தமிழை வழக்காடு மொழியாக உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்துவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படலாம் என்று தெரிவித்தார்.



தமிழ் மொழியை வழக்காடு மொழியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன், உச்சநீதிமன்ற கிளை சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் கொண்டு வர வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அடிப்படையிலான பணி நியமனம் பின்பற்றப்படவேண்டும் என்றும் அடிக்கல்நாட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் ஆகியோரிடமும் கோரிக்கைகளை முன்வைத்தார்.

முன்னதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு ரிமோட் மூலம் அடிக்கல் நாட்டினார். அதனை அடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றை காணொளி காட்சிகள் மூலம் திறந்து வைத்தனர்.

அடிக்கல்நாட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். மேலும், கடந்த ஒரு வருடத்தில், தமிழ்நாட்டில், பல்வேறு நீதிமன்ற வளாகங்கள் அமைக்க ரூ.106 கோடி செலவிடப்பட்டது என்றும் பட்டியல் இன மக்களின் வழக்குகளை கையாள நான்கு புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.

முதல்வரின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்த நீதிபதி சந்திரசூட், வழக்காடு மொழியாக தமிழ் மொழியை உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டத்திருத்தம் தேவைப்படலாம் என்று தெரிவித்தார். ''டெல்லியில் உச்சநீதிமன்றம் இருந்தாலும், இந்த நீதிமன்றம் இந்தியா முழுமைக்குமான நீதிமன்றமாக இருக்கவேண்டும் என்பதை நான் பலமுறை சொல்லிவருகிறேன்.

தற்போது இணையவழியாக நீதிமன்றம் செயல்படும் வசதி இருப்பதால், உச்சநீதிமன்றம் டெல்லியிலிருந்தாலும், மதுரை மேலூர், விருதுநகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஒரு வழக்குரைஞர் இணைய வழியில் உச்சநீதிமன்ற நீதிபதியிடம் முறையிடமுடியும்.

உச்சநீதிமன்ற வழக்குகளை இணைய வழியாகப் பார்ப்பதற்கு வசதி ஏற்படுத்தியுள்ளதால், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டம் பயிலும் மாணவர்கள் தங்களது ஊர்களிலிருந்தபடியே உடனடியாக இவற்றைப் பார்க்கமுடியும்,'' என்றார்.

நீதிபதிகள் நியமனம்

அடுத்ததாக, நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அடிப்படையில் நியமனம் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றுவருகின்றது என்றும், அதற்காக ஆறு நபர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்ததாக, இந்திய அளவில் சட்டம் படித்து வழக்குரைஞர்களாக பணியாற்றும் நபர்களில் ஆண்-பெண் விகிதத்தில் பெரும் வேறுபாடு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதோடு, இந்தியாவில் பல நீதிமன்றங்களில் பெண் வழக்குரைஞர்கள் மற்றும் பெண் நீதிபதிகளுக்கு முறையான கழிவறை வசதிகள்கூட இல்லை என்றார். நவீன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள இந்த காலத்தில், பெண்களுக்குத் தேவையான வசதிகளை நீதிமன்ற வளாகங்களில் ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும், குழந்தைகளைப் பராமரிக்கும் மையங்களும் நீதிமன்றங்களில் அமைக்கப்படவேண்டும் என்றும் கூறினார்.

இளம் வழக்குரைஞர்களுக்கு மிகவும் குறைந்த சம்பளம் அளிக்கும் முறை இந்த காலத்திலும் நிலவுவதாக கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், ஒரு சிலர் ரூ.5,000 முதல் ரூ,12,000தான் மாத சம்பளமாக பெறுகிறார்கள் என்றார்.

''இளம் வழக்குரைஞர்கள் நம்மிடம் கற்பதற்காக சில ஆண்டுகள் வேலைபார்ப்பதால், குறைந்த சம்பளம் கொடுக்கலாம் என்ற எண்ணத்தை சிலர் இன்றும் வைத்திருக்கிறார்கள். இதனை மாற்றிக்கொள்ளவேண்டும். இந்த காலத்து இளைஞர்களிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய உள்ளன.

என்னிடம் கிளர்க்காக பணியாற்றும் ஐந்து இளம் வழக்குரைஞர்களில் ஒருவர் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண். சட்டத்துறை பின்னணி எதுவும் இல்லை, அவர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர், ஆனால் இதுபோன்ற இளைஞர்கள் வேகமாக கற்பதோடு, வேறு கோணங்களிலிருந்து நீதிமன்ற செயல்பாடுகளை அணுகுகிறார்கள். அதனால், இளம் வழக்குரைஞர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும்,'' என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்ததாக, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் பிரிண்ட் செய்யப்படும்போது, அவை சிறிய எழுத்துகளில், நெருக்கமான வரிசைகளில் இருப்பதாகவும், வாட்டர்மார்க் உள்ள தாளில் பிரிண்ட் செய்யப்படுவதால், பார்வைமாற்றுதிறனாளிகள் தீர்ப்பை படிப்பதற்குச் சிரமம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

முன்னதாக பேசிய மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிற மாநிலங்களைக் காட்டிலும், தமிழ்நாட்டில் நீதித்துறை உள்கட்டமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது என்றார். கடந்த பட்ஜெட்டில் இந்தியாவில் இ-கோர்ட்டுகள் திட்டத்திற்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது 'ஒரு கேம் சேஞ்சராக' இருக்கும் என்றார்.

''இந்தியாவில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. தற்போதைய கணக்குப்படி சுமார் 4 கோடியே 90 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு முடிவுக்குள் 6 கோடியாக அதிகரிக்கும் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 10 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கும் என்றும் மூத்த நீதிபதிகள் என்னிடம் சொல்கிறார்கள். இந்த எண்ணிக்கை மிகவும் கவலை தருவதாக உள்ளது.

இதுபோன்று வழக்குகள் தேங்குவதற்கு நீதிமன்றங்களில் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் போவதும் ஒரு காரணம். அதேநேரம், தற்போது, இணையவழி நீதிமன்றம்(இ-கோர்ட்) என்ற முறை மேம்படுத்தப்படுவதால், இந்த நிலுவை வழக்குகள் குறையும் என்று நம்புகிறோம்,'' என்று தெரிவித்தார் கிரண் ரிஜிஜு.

கருத்துகள் இல்லை: