தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மகளிர் உரிமைத் தொகை குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று விளக்கமளித்தார்.
முதலமைச்சர் பேசும்போது, “கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு அங்கீகரித்தால், ஆண்களை உள்ளடக்கிய இந்தச் சமூகமும் பெண்களுக்கான சமஉரிமையை வழங்கிடும் நிலை விரைவில் உருவாகிவிடும் என்று நமது அரசு உறுதியாக நம்புகிறது.
எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் ‘மகளிர் உரிமைத் தொகை’ என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது
இந்த ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டத்திற்காக, இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையொட்டி, எவ்வளவு பேர் பயன்பெறுவார்கள் என்று பலர் மனக்கணக்குப் போட்டு வருகிறார்கள்.
இந்த மகத்தான ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும் என்பதை இந்த மாமன்றத்தில் மிகுந்த பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர்
நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர்
சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர்
சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள்
விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
சமூகத்தின் சரிபாதியான பெண்களுக்குச் சமூக விடுதலை பெற்றுத் தந்தது திராவிட இயக்கம் என்றால், பொருளாதாரச் சமத்துவத்தை வழங்குவதுதான் திராவிட மாடல் அரசு என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வை சிறிதேனும் மாற்றிவிடும் என நம்பும் எந்தக் குடும்பத் தலைவியையும், மனிதநேய அடிப்படையிலான பெண் உரிமை காக்கக்கூடிய எனது தலைமையிலான திமுக அரசு கைவிட்டுவிடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக