வெள்ளி, 16 டிசம்பர், 2022

நடமாடும் மயானம்’ - ஒரு மணி நேரத்தில் சாம்பல் தருகிறோம்…’ – இருப்பிடம் நோக்கி வரும் வண்டி.. ஈரோடு

நக்கீரன்   ; கிராமம் முதல் நகரம் வரை இன்றளவும் இறந்தவர்கள் உடலைப் புதைக்க அல்லது எரியூட்ட சுடுகாடு பிரச்சனை என்பது தொடர்ந்து நீடித்தே வருகிறது.
குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினர் உடலை அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை என்ற போராட்டமும் தொடரத்தான் செய்கிறது.
எங்கள் ஊரில் சுடுகாடே இல்லையென்றும், மயானத்திற்கு இறந்தவர் உடலைக் கொண்டு செல்ல வழியே இல்லை என்றும், செத்தும் கூட நிம்மதி இல்லங்க என பல்வேறு அமைப்பினர் போராடுவதும் தொடர்கிறது.


இந்த விஞ்ஞான உலகம் எல்லாவற்றிற்கும் வழிவகை செய்து அதற்கான கண்டுபிடிப்புகளையும் கொடுத்து வருகிறது.
அப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான ஒரு செயல்பாடுதான் இறந்தவர் உடலை எரியூட்ட இருப்பிடம் நோக்கி வருகிற நடமாடும் எரியூட்டும் தகன வாகனம்.
தமிழகத்தில் முதன் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தும் விழா 14 ந் தேதி மாலை ஈரோட்டில் நடந்தது.

இந்நிகழ்வில் ‘ஆத்மா அறக்கட்டளை’ நிர்வாகிகள் வி.ராஜமாணிக்கம், சகாதேவன், இளங்குமரன், அக்னி ஸ்டீல் தங்கவேல், செங்குந்தர் பள்ளி சிவானந்தம், ஆகியோர் பங்கேற்று, நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை துவக்கி வைத்தனர்.
இதுகுறித்து ஆத்மா அறக்கட்டளை நிர்வாகிகள் கூறும்போது, ‘ஈரோடு போன்ற நகரங்களில் மின் மயானம் உள்ளது.
அதுபோல கிராமங்களிலும் மின் மயானத்தின் சேவை செய்ய நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

கிராமப்புறங்களில் எரியூட்டுவதற்கு விறகு அல்லது சாண வரட்டி மூலம் உடலைத் தகனம் செய்ய ரூபாய் 15 ஆயிரம் வரை செலவாகும். அது மட்டுமல்லாது உடலைத் தகனம் செய்ய சுமார் 8 மணி நேரம் அல்லது ஒருநாள் தேவைப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் என பலரும் வெளியூர்களில் பல்வேறு வேலைகளில் உள்ளார்கள்.
இயந்திரத்தனமாக இந்த காலகட்டத்திற்குத் தகுந்தாற்போல் எல்லோரும் பழைய வழக்கங்களை மாற்றி வருகிறார்கள்.

அதில் முக்கியமானது இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்பது போய் இன்னைக்கு செத்தா இன்னைக்கே பால் என்ற நிலை வந்துவிட்டது.
அதற்கு ஏதுவாகத்தான் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் எரியூட்டும் தகன வாகனம்.
இதன் மூலம் இறந்தவர் உடலை எரியூட்டி ஒரு மணி நேரத்தில் அவரின் குடும்பத்தினரிடம் அஸ்தி (சாம்பல்) வழங்கப்படும்.

நடமாடும் எரியூட்டும் தகன வாகனம், ஈரோடு ஆத்மா அறக்கட்டளை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி குறிப்பிட்ட ஊருக்கு அனுப்பி வைக்கப்படும்.

முழுக்க முழுக்க இவை கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி மட்டுமே தகனம் செய்யப்படும். இந்த வாகனம் ஈரோடு மாநகராட்சிக்கு வெளியே குடியிருப்பு பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் விவசாய நிலத்தில் மட்டும் நிறுத்தி எரியூட்டப்படும்.

இந்த வாகனத்தின் சேவையைப் பெற கட்டணமாக நாங்கள் ரூபாய் 500 செலுத்த வேண்டுமென நிர்ணயித்துள்ளோம்.
இந்த நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை முறைப்படி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

பதிவு செய்யும் நபர்கள் கட்டாயம் உடல் அடக்கத்திற்குத் தேவையான உறுதிமொழி படிவம், அடையாள அட்டை, தேவையான ஆவணங்கள் வழங்க வேண்டும்” என்றனர்.
உயிர் உருவாகி உயிர்ப்பித்து 60, 70, 90 என ஆண்டுக்கணக்கில் வாழும் மனித உடல் இறப்புக்குப் பிறகு ஒரு மணி நேரத்தில் சாம்பலாகி இறந்த நாளே பால் ஊற்றும் நிலை வந்துவிட்டது மனிதர்களே…!

கருத்துகள் இல்லை: