ஆனால், எல்லா வரலாற்று மனிதர்களின் வாழ்விலும் அவர்களது எழுச்சியான பக்கங்களைப் போலவே, சங்கடமான பக்கங்களும் இருக்கும்.
தமது எழுச்சிமிகு விடுதலைப் போராட்டப் பாடல்களால் பெரிதும் அறியப்பட்ட சுப்ரமணிய பாரதியின் வரலாற்றிலும், அப்படி ஒரு பக்கம் உண்டு.
பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகாணத்தில் இருந்து புதுவைக்கு சென்ற பாரதியார் 1908 முதல் 1918 வரை 10 ஆண்டுகாலம் புதுவையில் வாழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில் எழுச்சிமிகுந்த பாடல்கள் பலவற்றையும் அவர் எழுதியுள்ளார். முதல் உலகப் போர் முடிந்த நிலையில், புதுவையில் இருந்து சென்னை மாகாணத்துக்குள் நுழைய முயன்ற பாரதியாரை கடலூர் அருகே கைது செய்து கேப்பர் மலை சிறைச்சாலையில் அடைத்தது பிரிட்டீஷ் இந்திய போலீஸ்.
இதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு வாரத்துக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாரதியார் சிறை நிலைமைகளைத் தாங்க முடியாமல் தம்மை விடுதலை செய்ய வலியுறுத்தி மெட்ராஸ் மாகாண ஆளுநர் பென்ட்லண்ட் என்பவருக்கு மிகப் பணிவான ஒரு வேண்டுகோள் கடிதத்தை எழுதினார்.
இந்தக் கடிதம் பாரதி குறித்த சித்திரத்தை மாற்றிவிடும் மொழியில் அமைந்திருக்கும். ஒருபுறம் இந்தக் கடிதத்துக்காக சிலர் பாரதியை விமர்சித்தாலும், பாரதி ஆர்வலர்கள் அவரை அவரது சூழ்நிலையில் வைத்துப் புரிந்துகொள்ள முயல்கிறார்கள்.
எந்த சூழ்நிலையில் பாரதி இந்தக் கடிதத்தை எழுத நேர்ந்தது என்பது குறித்து ஆய்வாளர்கள் சிலர் தங்கள் கருத்துகளை முன்வைக்கிறார்கள்.
கடிதத்தில் என்ன எழுதி இருந்தார்?
‘காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ என்ற தலைப்பில் பாரதியின் படைப்புகளை 12 தொகுதிகளாக தொகுத்துள்ளார் சீனி.விஸ்வநாதன். இந்த நூலில் பாரதி எழுதிய அந்த ஆங்கிலக் கடிதம் இடம் பெற்றுள்ளது. சென்னை ஆவணக் காப்பகத்தில் இருந்து பெற்ற அரசு ஆணை நகலின் அடிப்படையில் அவர் இந்தக் கடித வாசகத்தை தந்துள்ளார்.
அந்த ஆங்கிலக் கடிதத்தின் தமிழாக்கம் இதோ:
ஓம் சக்தி
28 நவம்பர் 1918
பெறுநர்,
மாட்சிமைதாங்கிய பெண்ட்லன்ட் பிரபு,
கவர்னர்,
புனித ஜார்ஜ் கோட்டை,
சி.சுப்ரமணிய பாரதியின் பணிவான விண்ணப்பம்.
மாட்சிமைதாங்கிய பிரபுவுக்கு இது இனிதாக இருக்கட்டும்.
புதுச்சேரியில் இருந்து என் சொந்த மாவட்டமான திருநெல்வேலி செல்லும் வழியில் கடலூரில் நான் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது.
எனது விஸ்வாசத்தைத் தெரிவித்து பல வாக்குறுதிகள் அளித்த பிறகு என்னை நேரில் சந்தித்து உரையாட மாட்சிமை தாங்கிய பிரபுவின் அரசு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்-டி.ஜ.ஜி. (சி.ஐ.டி.) அவர்களை புதுவைக்கு அனுப்பியது மாட்சிமைதாங்கிய தங்களுக்கு நினைவிருக்கும்.
அந்த உரையாடலின்போது அரசாங்கம் தொடர்பான எனது அணுகுமுறையில் முழுவதும் திருப்தி அடைந்த டி.ஐ.ஜி. அவர்கள், முற்றிலும் போர்க்காலத்தைக் கணக்கில் கொண்டு, மெட்ராஸ் மாகாணத்தின் ஏதாவது இரண்டு மாவட்டத்தில் காவலில் இருக்க விருப்பமா என்று என்னிடம் கேட்டார்.
அந்த யோசனைக்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை.
ஏனெனில், அரசியலை முற்றிலும் விட்டொழிப்பதாக நான் அறிவித்த பிறகு, போர் நடந்துகொண்டிருக்கும்போதுகூட, என் நகர்வுகளைத் தடுப்பதற்கான காரணம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இப்போதோ போர் முடிந்துவிட்டது. அதிலும் நேச அணியினர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்நிலையில் அமைதியான ஒரு குடிமகனாக பிரிட்டிஷ் இந்தியாவில் குடியமர்ந்து வாழ்வதற்கு எனக்கு எந்த சங்கடங்களும் நேராது என்று முழுவதும் நம்பி புதுச்சேரியில் இருந்து கிளம்பி வந்தேன். என் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நான் கைது செய்யப்பட்டு கடலூர் மாவட்டச் சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளேன். இந்தச் சிறை நிலைமையை நீளமாக விவரித்து மாட்சிமைதாங்கிய பிரபுவுக்கு சோர்வை ஏற்படுத்த விரும்பவில்லை.
ஆனால், இந்தச் சிறை நிலைமைகள் என்னைப் போன்ற பிறப்பும், அந்தஸ்தும் உடைய ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியாதவை மட்டுமல்ல, என் உடல் நலனுக்கு அபாயத்தை விளைவிக்கும் சாத்தியங்களையும் கொண்டுள்ளவையும்கூட.
மாட்சிமைதாங்கிய உங்களுக்கு மீண்டும் ஒரு முறை உறுதி அளிக்கிறேன்: அரசியலின் அனைத்து வடிவங்களில் இருந்தும் விலகிவிட்டேன். பிரிட்டிஷ் அரசுக்கு விஸ்வாசமாகவும், சட்டத்தை மதிப்பவனாகவும் எப்போதும் இருப்பேன். எனவே என்னை உடனடியாக விடுவிக்க உத்தரவிடும்படி மாட்சிமை தாங்கிய தங்களிடம் யாசிக்கிறேன். மாட்சிமை தாங்கிய தங்களுக்கு கடவுள் நீண்ட மகிழ்ச்சியான ஆயுளை வழங்கட்டும்.
மாட்சிமை தாங்கிய தங்களின் மிகப் பணிவுள்ள வேலைக்காரனாக இருக்கவேண்டுமென யாசிக்கிறேன்.
-சி.சுப்ரமணிய பாரதி
பாரதி ஏன் இப்படி எழுதினார்?
பாரதியை எழுச்சிமிக்க கவிஞராக அறிந்த யாருக்கும் இந்தக் கடிதம் அதிர்ச்சியை அளிக்கும். இந்தக் கடிதம் குறித்து விசாரித்தபோது,
'பாரதியின் தமிழியச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவரும், 'மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு - உண்மைகளும் புனைவுகளும்' என்ற நூலை எழுதியவரும் தமிழ்ப் பேராசிரியருமான சொ.ஏழுமலை பிபிசி தமிழிடம் விளக்கினார்.
"உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே பாரதியார் புதுச்சேரியை விட்டு வெளியேறித் தமிழகம் வரத் தயாராக இருந்தார். அதற்கான பேச்சு வார்த்தையை ஆங்கில அரசு அதிகாரிகளுடன் மேற்கொண்டார்.
அப்பொழுது போர் முடியும் வரை வந்தால் கைது செய்யப்படலாம் என்பதால் சென்னை மாகாணம் வருவதைத் தள்ளிப் போட்டார். போர் முடிந்துவிட்ட நிலையில் கைது செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் சென்றவரை, பிரிட்டீஷ் இந்தியப் போலீசார் கைது செய்ததுடன், அவரது தகுதியைக் கருதாது துன்பப்படுத்தினார்கள். ஆங்கில அரசுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக உறுதி தந்து தன்னை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டு தன்னை ஆங்கில அரசின் சேவகன் என்று கூறும் அளவுக்குப் பாரதியார் அந்த நேரத்தில் கொள்கை தளர்ந்து காணப்பட்டார் என்பதை இந்தக் கடிதத்தின் மூலம் அறிய முடிகிறது" என்று கூறினார் ஏழுமலை.
பாரதி கைது செய்யப்பட்டபோது என்ன நடந்தது?
“1918 நவம்பர் 20ஆம் தேதி கடலூரில் பாரதியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்பு அந்த செய்தி வெளியே பரவுகிறது. 24 ஆம் தேதி சுதேசி மித்ரன் பத்திரிக்கை 6வது பக்கத்தில் சிறிய செய்தியாக இதனை வெளியிடுகிறது. சுதேசி மித்ரன் ஆசிரியர் ஏ.ரெங்கசாமி கடலூரில் இருக்கும் தனது இரண்டு நண்பர்களுடன் பேசி பாரதியாரை ஜாமினில் எடுக்கும் முயற்சியைச் செய்கிறார்.
அப்போது அங்கிருந்த மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டை சந்தித்து விடுதலைக்காக கோரிக்கை வைக்கின்றனர். தனக்கு இந்த அதிகாரம் இல்லை, மெட்ராஸ் ஆளுநருக்கு மட்டுமே இந்த அதிகாரம் உள்ளது என்றார் மாஜிஸ்திரேட்.
முதல் உலகப்போர்க் காலத்தில் அயல் நாட்டினர் யாரும் பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் வரக்கூடாது என்று கூறி இந்தியப் பிரவேச சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் அடிப்படையில் அயல் நாட்டிலிருந்து யார் வந்தாலும் எந்த பிணை ஏதும் வழங்க முடியாதபடி கைது செய்யலாம். அதன் அடிப்படையில்தான் பாரதி கைது செய்யப்பட்டார். ஆகவே பாரதியாரை விடுதலை செய்வது பற்றி மெட்ராஸ் ஆளுநர் தான் முடிவெடுக்க முடியும் என்று மாஜிஸ்ட்ரேட் விளக்கமளித்தார்.
அதன் பிறகுதான் பாரதியார் 1918 நவம்பர் 28ஆம் தேதி மெட்ராஸ் ஆளுநருக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதம் ஆளுநருக்கு சென்ற பிறகு சுதேசி மித்ரன் பத்திரிக்கை ஆசிரியர் ரெங்கசாமி, அனிபெஸண்ட் அம்மையார், நீதிபதி மணி அய்யர் அனைவரும் சென்று ஆளுநரைச் சந்தித்து பாரதியை விடுதலை செய்யும்படி கோரிக்கை வைக்கின்றனர். அப்போது பாரதியை விடுதலை செய்ய முயற்சி எடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார்” என்கிறார் முனைவர் ஏழுமலை.
"பிறகு கடலூர் சிறையில் இருக்கும் பாரதியைச் சந்தித்து அவர் எந்த மனநிலையில் இருக்கிறார். அவர் நிபந்தனைகளுக்கு உட்பட்டுவாரா என்பதை அறிந்துகொள்ள மெட்ராஸ் டி.ஐ.ஜி ஹானிங்டன் என்பவரைக் அனுப்பி வைத்தார் ஆளுநர்.
அவர் கடலூர் சிறையிலிருந்த பாரதியாரைச் சந்தித்த போது என்ன உரையாடல் நிகழ்ந்தது என்பது பற்றித் தெரியாது. ஆனால் பாரதியார் கடலூர் சிறையிலிருந்து விடுதலையான பிறகு சுதேசி மித்ரன் பத்திரிக்கை ஆசிரியர் ரெங்கசாமி உட்பட இரண்டு மூன்று பேருக்குக் கடிதம் எழுதுகிறார். அதில், கடிதத்தின் வாயிலாக நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், பாரதியார் தென்காசி, குற்றாலம் இந்த இரண்டு பகுதியில் மட்டுமே வாழ வேண்டும். சென்னைக்குப் போகக்கூடாது.
இரண்டாவதாக அரசுக்கு எதிராக கட்டுரைகள், கவிதைகளை எழுதக்கூடாது. மூன்றாவதாக எழுதக்கூடிய கட்டுரைகள் அனைத்தையும் அங்கிருக்கும் காவல் துறையினர் அல்லது மாஜிஸ்ட்ரேடிம் காட்டிவிட்டுத் தான் வெளியிட வேண்டும் என்று ஹானிங்டன் பாரதியாரிடம் கூறியுள்ளார். அதை பாரதியாரும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
அவர் ஏற்ற காரணத்தினால் தான் ஹானிங்டன் சென்னை சென்று மேலும் பாரதியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பதையும் ஆளுநரிடம் சொல்கிறார். அதன்பிறகு 1918 டிசம்பர் 14ஆம் தேதி மாலை பாரதியார் விடுதலை செய்யப்படுகிறார்," என்றார் ஏழுமலை.
பாரதியார் புதுச்சேரியிலிருந்த சமயத்தில் முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது ஆளுநருக்கு சென்னை மாகாணம் வருவது தொடர்பாக நிறைய கடிதங்கள் எழுதியுள்ளார் பாரதியார். ஆனால் அவற்றுக்குப் பதில் வரவில்லை.
குறிப்பாக அந்த சூழலில் யார் வந்தாலும் கைது செய்வது என்ற முடிவில் பிரிட்டீஷார் இருந்தனர் என்றும், போர் முடிந்தபிறகே பிரிட்டீஷ் இந்திய எல்லைக்குள் வெளியில் இருந்து வருகிறவர்களை விட முடியும் என்ற முடிவில் அவர்கள் இருந்தனர் என்றும் கூறுகிறார் ஏழுமலய்.
இப்படி ஒரு கடிதம் எழுதும் நிலை ஏன் ஏற்பட்டது?
"முதலாம் உலகப்போர் முடிவு பெற்றதைத் தொடர்ந்து தமிழக எல்லைகள் செல்ல தடை இருக்காது என்று நினைத்துத் தான் அவர் திருநெல்வேலி புறப்படுகிறார். ஆனால் அவர் கைது செய்யப்பட்டார்.
பாரதியார் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவரால் சிறையில் நீண்ட நாட்கள் இருக்க முடியவில்லை. தன்னால் சிறையில் இருக்க முடியாது என்று மனம் நொந்துதான் தான் அந்த கடிதத்தைக் கொடுக்கிறார். அவர் புதுச்சேரியில் வாழ்ந்த இறுதி நாட்களில் கொடிய வறுமையால் மிகவும் அதிகமாக கஷ்டப்பட்டுள்ளார். புதுவையில் வாழ முடியாது என்று முடிவு செய்து தன்னால் தனது குடும்பத்தினர் அனைவரும் வாடுவதை உணர்ந்துதான் திருநெல்வேலி செல்லும் முடிவை அவர் எடுத்தார். இறுதியில் குடும்பத்திற்காக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் கூட அந்த கடிதத்தை எழுதியிருக்கலாம். ஆனால் சிறையில் இருந்து விடுதலையான பிறகு, முற்றிலுமாக அவர் தமது இயல்பை விட்டுவிடவில்லை. அதன் பிறகும், அவர் ஆங்கிலேயரை எதிர்த்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார்” என்கிறார் ஏழுமலை.
‘விடுதலைக்குப் பாடுபடவே அப்படி செய்தார்’
பாரதி சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சென்றதும், புதுச்சேரியில் இருந்து சென்னை மாகாணம் செல்ல முயன்றதும், சிறையில் இருந்து வெளிவர ஆளுநருக்கு அவர் கடிதம் எழுதியதும், அனைத்துமே தன்னுடைய விடுதலைப் போராட்டம் நின்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான் என்கிறார் புதுச்சேரி மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகம் மற்றும் ஆய்வு மையத்தின் பணி நிறைவு பெற்ற ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் பொறுப்பாளர் முனைவர் நாக.செங்கமலத்தாயார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பிரிட்டிஷ் அரசாங்கம் பத்திரிகைகளை ஒடுக்கியதுபோல புதுச்சேரியிலும் புதிய பத்திரிக்கை அடக்குமுறை சட்டம் கொண்டு வந்தது பிரஞ்சு அரசு. இதனால், புதுச்சேரியில் பாரதி நடத்தி வந்த அனைத்து பத்திரிகைகளும் தடை செய்யப்பட்டன. தொடர்ந்து பத்திரிகை நடத்த முடியாத சூழ்நிலையில்தான் அவர் சென்னை மாகாணத்துக்குள் வர நினைத்தார் பாரதி. மனைவி செல்லம்மாள் வலியுறுத்தியதால்தான் அவர் அவர் சென்னை மாகாணத்துக்குள் வர முயன்றார் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பாரதியார் சென்னையிலிருந்து புதுச்சேரி சென்றதையே அவர் பயந்து ஓடி சென்றார் என்று எழுதினர். அவர், சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லக் காரணம், சிறை சென்று விட்டால் தன்னால் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்று அவர் உணர்ந்ததுதான். அவர் அரசியல் ஆசான்களாக கருதிய வ.உ.சி. திலகர் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே வெளியில் இருந்து சுதந்திர வேட்கையை உண்டாக்கும் பொறுப்பு தமக்கு இருப்பதாக அவர் கருதினார். அதனால் புதுவை சென்றார்," என்கிறார் செங்கமலத்தாயார்.
இதே உணர்வோடுதான் அவர் சிறையில் இருந்து வெளியில் வரவும் விரும்பினார் என்றார் அவர்.
"அது மன்னிப்பு கடிதம் இல்லை, வேண்டுகோள் கடிதம்"
பாரதியின் கடிதத்தை தமது விடுதலைக்காக அவர் கையாண்ட உத்தியாகத்தான் பார்க்கவேண்டும், அதை இழிவாகப் பார்க்கவேண்டியதில்லை என்கிறார் புதுவை அருங்காட்சியகத்தின் நிறுவனரும், காப்பாளருமான அ.அறிவன்.
"1918ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி தன்னுடைய மனைவி, மற்றும் மைத்துனருடன் புதுச்சேரியிலிருந்து திருநெல்வேலி புறப்படுவதற்காகக் கடலூர் வழியாக செல்ல முயன்றார் பாரதியார்.
அப்போது அதிகாலை நேரத்தில் மெட்ராஸ் பிரசிடென்சி காவல் துறையால் கைது செய்யப்படுகிறார். அவரது மனைவி மைத்துனர் ஆகியோர் கைது செய்யப்படவில்லை.
இவரை அழைத்துச் சென்று மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் நிறுத்துகின்றனர். சடகோபாச்சாரியார் மற்றும் நடராஜாய்யர் இருவரும் பாரதிக்காக ஆஜராகி பிணை கேட்கின்றனர். ஆனால் பிணை வழங்கப்பட வில்லை.
இதனால் பாரதி சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார். அதன் பின் சிறையிலிருந்த பாரதி 8ஆவது நாள் ஒரு வேண்டுகோள் கடிதத்தை வைக்கிறார். இந்த கடிதம் இயல்பானது ஆனால் இதனை மிகைப்படுத்தி மன்னிப்பு கடிதம் என்று சொல்கிறார்கள். ஆனால் அது மன்னிப்பு கடிதம் இல்லை," என்கிறார் அறிவன்.
அடிப்படையாக தனது வாழ்நாளைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்று நினைத்த ஒரு இலக்கியவாதியின் உணர்வுதான் இது என்று கூறுகிறார் அவர்.
“இந்த சிறை விடுதலைக்குப் பிறகு குடும்ப வாழ்க்கைக்கு போகிறார் பாரதியார். மனைவி ஊரான கடயத்தில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அவர் வாழ்ந்த 39 ஆண்டுகளில் அந்த இரண்டு ஆண்டுகள்தான் அவர் தமக்காக வாழ்ந்த வாழ்க்கை. மீதம் 37 ஆண்டுகளும் மிகப்பெரிய போராட்டம் தான். அந்த இரண்டு ஆண்டுகளிலும் வறுமை மற்றும் வாழ்வியல் போராட்டத்தையும் சந்தித்துள்ளார்," என தெவிக்கிறார் அறிவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக