சனி, 15 அக்டோபர், 2022

”ரிசைன் பண்ணிடுவேன்”- அமைச்சர்களுக்கு ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை!

 மின்னம்பலம -Aara  :  வைஃபை ஆன் செய்ததும்  ஃபேஸ்புக் மெசஞ்சரில், ‘ஸ்டாலின் பொதுக்குழு பேச்சு ஆளுங்கட்சியான திமுகவுக்குள்ளும், எதிர்க்கட்சிகளிடையேயும், ஏன் திரைத்துறையிலும் கூட பேசப்பட்டு வருகிறதே…” என்ற தகவல் வந்து விழ, அதற்கு பதிலாக ஒரு எமோஜியை அனுப்பிவிட்டு தனது மெசேஜை டைப் செய்ய  ஆரம்பித்தது வாட்ஸ் அப்.
“திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசிய பேச்சு அரசியல் கட்சிகள் மத்தியில் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் பேசுபொருளாகிவிட்டது.
மின்னம்பலம் சார்பில் மக்களிடையே  கருத்து கேட்கப்பட்டபோது கூட அமைச்சர்களின் தான் தோன்றித் தனமான கருத்துகளுக்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள். பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியது கட்சிகள் தாண்டி மக்கள் மத்தியிலும்  விவாதமாகியிருக்கிறது.
அமைச்சர் துரைமுருகனும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியிலுள்ள பொன்னை கிராம ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆய்வு செய்யச் சென்றனர்.
அப்போது துரைமுருகன் அங்கிருந்த சீனியர் டாக்டர்களிடம் எரிந்து விழுந்தார்.  மருத்துவ கட்டடங்கள் பழுதாகியிருப்பதற்கு மருத்துவர்களே காரணம் என்றும், பாம்புக்கடி மருந்து இல்லாமையை காரணம் காட்டியும் டாக்டர்களை கன்னியாகுமரிக்கு தூக்கியடியுங்கள் என்று சொன்னார்.
அதுவும் அவர் அன்று மருத்துவர்களிடம்  நடந்துகொண்ட அணுகுமுறை வீடியோ காட்சிகளாக பரவியது.
அதுமட்டுமல்ல… ஆய்வுக்குப் பின் துரைமுருகனும், மாசுவும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தனர்.



தொடர்ந்து ஐம்பது வருடங்களாக எம்.எல்.ஏ.வாக இருக்கும் துரைமுருகன் தனது தொகுதியின் நிலையை ஏதோ எதிர்க்கட்சிக்காரர் போல பேட்டி கொடுத்ததையும் ஸ்டாலின் பார்த்திருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் இந்த பிரச்சினையை  முதல்வர் வரை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

மக்கள் பிரதிநிதிகளின் தவறுக்கு அரசு மருத்துவர்களை இடம் மாற்றுவது தகுமா என்ற  விஷயத்தையும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசிய முதல்வர், அந்த மருத்துவர்களை இடமாற்றல் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

மேலும் துரைமுருகனையும் தொடர்பு கொண்டு, ‘என்னண்ணே… உங்க தொகுதி மேலயே உங்களுக்கு என்ன கோபம்?
உங்க பேச்சு ரொம்ப வருத்தமா இருக்குண்ணே’ என்று சொல்லியிருக்கிறார்.
இதேபோல அமைச்சர் பொன்முடியின் ஓசி பேச்சுக்கும் அவரை அழைத்த ஸ்டாலின், எச்சரித்திருக்கிறார்.   

கலைஞர் இதேபோல சில அமைச்சர்கள் மீது கோபப்பட்டால் அந்த அமைச்சர்களை தன் கோபம் தீரும் வரை தன் காரில் ஏறிக்கொள்ள அனுமதிக்க மாட்டார். 2006-11 ஆட்சிக் காலத்தில் துரைமுருகன் இலாகா மாற்றலுக்குக் காரணமான ஒரு விவகாரத்தில் கூட துரைமுருகன் மீது கடும் கோபம் கொண்டு தன் காரில் மூன்று மாதமாக ஏற்றிக் கொள்ளவில்லை கலைஞர்.

அதே அணுகுமுறையை இப்போது ஸ்டாலினும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார். சில நாட்களாகவே  சிற்சில அமைச்சர்களை தன் காரில் ஏறி பின் இருக்கையில் அமர்ந்து கொள்ள தொடர்ச்சியாக அனுமதிக்கவில்லை  முதல்வர் ஸ்டாலின்.

இந்த கோபம் இன்று  (அக்டோபர் 14) நடந்த அமைச்சரவை கூட்டம் வரையிலும் எதிரொலித்திருக்கிறது.
காரணம் அவ்வளவு சொல்லியும் நிதியமைச்சர் பிடிஆர்  நேற்று மதுரையில்  கட்சிப் பிரச்சினையை வெளியில் போட்டு  உடைத்திருக்கிறார். நான் யாருக்கும் அடிமை இல்லை என்றும் பேசியிருக்கிறார்.

அப்படியென்றால் மற்ற அமைச்சர்கள் எல்லாம் யாருக்கோ அடிமையாக இருக்கிறார்களா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் பிடிஆர்.
இதனால் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கோபமாகியிருக்கிறார்.

அமைச்சரவை கூட்டத்தின்போது  சில சர்ச்சை அமைச்சர்களை அழைத்த முதல்வர் ஸ்டாலின், ‘பொதுக்குழுக்கு முன்னாடியும் சொல்லிட்டேன். பொதுக்குழுவுலயும் சொல்லிவிட்டேன். பொதுக்குழுவுக்கு பிறகும் அறிக்கை விட்டு எச்சரித்துவிட்டேன்.

இனியும் நீங்க இப்படியே பண்ணிக்கிட்டிருந்தீங்கன்னா நான் ரிசைன் பண்ணிட்டு போவா… நீங்க ரிசைன் பண்ணிட்டு போயிடறீங்களா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அந்த அமைச்சர்கள் முகத்தில் ஈயாடவில்லை” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: