வெள்ளி, 14 அக்டோபர், 2022

”திருநங்கைகளின் கல்வி எந்த காரணத்திற்காகவும் தடைபடக்கூடாது” - - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மின்னம்பலம் : என் அம்மாவை திருநங்கைதான் பார்த்துக் கொள்கிறார்: அன்பில் மகேஷ்
”திருநங்கைகளின் கல்வி எந்த காரணத்திற்காகவும் தடைபடக்கூடாது” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் திருநங்கைகளின் முப்பெரும் விழா நிகழ்வு இன்று(அக்டோபர் 13) நடைபெற்றது.
இதில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாட நூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ”திருநங்கைகளுக்கு தனி நலவாரியத்தை ஏற்படுத்தியவர் கலைஞர்.

ஆண், பெண், திருநங்கைகள் என யாரையும் நான் பிரித்து பார்க்கவில்லை. ஆறறிவு படைத்த மனிதர்களாகத்தான் பார்க்கிறேன்.

என்னுடைய அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவரை பராமரிக்க பிசியோதெரபிஸ்ட் ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருவார்.

அவரின் பெயர் செல்வி. அவர் ஒரு திருநங்கை. அவர் இப்போது என் அம்மாவின் வளர்ப்பு மகளாக மாறிவிட்டார். அவர் வரவில்லை என்றால், என் அம்மா ஏங்கும் நிலை உருவாகியுள்ளது.

minister anbil mahesh

எதன் அடிப்படையில் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. எனது பெயரில் அர்த்தநாரீஸ்வரர் (மகேஷ்) இருப்பதால் அழைத்தார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நான் உங்களின் பாதியாகத்தான் நிற்கிறேன்.

திருநங்கைகளுக்கான கல்வி நிலை குறித்து நான் இங்கு தெரிந்துகொண்டேன். திருநங்கைகளுக்கான கல்வியியல் சூழலை உருவாக்குவது குறித்த யுனெஸ்கோவின் அறிக்கை குறித்து, அடுத்து நடக்கும் அலுவல் கூட்டத்தில் பேச இருக்கிறேன்.

2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நாட்டில் 4லட்சத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் இருந்தாலும்,  அவர்களது கல்வியறிவு 55சதவீதம்தான் இருக்கிறது.

தமிழகத்தில் 25,000க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இருக்கிறார்கள். அவர்களது கல்வி எந்த காரணத்திற்காகவும் தடைபடக்கூடாது.

புதிய மெட்ரோ பணி நிகழ்ச்சிக்கு என்னை  முதலமைச்சர் அழைத்தார். அவரிடம் நான், ’திருநங்கைகள் முப்பெரும் விழாவுக்கு செல்கிறேன்’ என்றதும் ’அதுதான் முக்கியம். அங்கு செல்லுங்கள்’ என்று அறிவுறுத்தினார்” என அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.

கலை.ரா

கருத்துகள் இல்லை: