tamil.oneindia.com - Veerakumar : சென்னை: தலை முதல் கால் வரை ஆணாதிக்க மனோபாவம் கொப்பளிக்கும் மற்றொரு நபரால் தமிழகத்தில் மற்றொரு இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த கொலை சம்பவம், தமிழகத்தை மட்டுமல்லாது நாடு முழுவதையும் உலுக்கி போட்டுள்ளது.
பெண்ணை பின்தொடரும் ஸ்டாக்கிங் (Stalking) சினிமாவில் ஹீரோயிசமாக காட்டப்படுவதுதான் இதுபோன்ற "மனநிலை பிறழ்வுக்கு" பெரும் காரணம் என்ற நீண்டகால குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் நடைபெற்ற படுகொலை.
20 வயது இளம்பெண் சத்யா, பரங்கிமலை ரயில்வே நிலையத்தில் வேகமாக வந்த ரயில் முன்பாக வெறி கொண்ட ஒரு வாலிபரால் தள்ளி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை
கிழக்கு தாம்பரம் ஸ்வேதா கொலை
இப்படித்தான் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி சென்னை மாநகர போக்குவரத்து கழக டிரைவர் மதியழகன் என்பவரின் மகள் ஸ்வேதா கிழக்கு தாம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் ராமச்சந்திரன் என்ற வாலிபரால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். பிறகு அவரும் தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஆனால் மருத்துவமனையில் சேர்த்து பிழைத்துக் கொண்டார். இருவரும் காதலித்ததாகவும் பிறகு சுவேதா அந்த காதலை விட்டு விலக நினைத்ததாகவும் இதற்காகதான் கொலை செய்ததாகவும் அந்த கொலையாளி வாக்குமூலம் அளித்தார்.
பெண்களுக்கு உரிமையில்லை
சமீபகாலத்தில் சென்னையை உலுக்கிய இந்த மூன்று இளம்பெண்கள் படுகொலைகளும் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். "பெண்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை நாங்கள் தரமாட்டோம்.." என்ற ஆணாதிக்க கொப்பளிப்பின் வெளிப்பாடுதான் கொலை செய்துவிட்டு சிறை செல்ல கூட தயங்காத மனநிலைக்கு காரணம். இது போன்ற ஆணாதிக்க மனநிலைக்கு தமிழ் திரைப்படங்கள் தீனி போட்டு வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்பது நீண்டகாலமாக சமூக செயல்பாட்டாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. ஒரு பெண்ணை சந்தித்து காதலை சொன்ன பிறகும் அவர் அதை ஏற்காவிட்டால் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து கொண்டிருந்தால் அந்த பெண் காதலுக்கு சம்மதம் தெரிவித்து விடுவார் என்பது போன்ற காட்சி அமைப்புகள் பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் வைக்கப்பட்டு, அதுதான், காதல் என்று கற்பிதம் செய்யப்பட்டு விட்டது.
தனுஷ் கதாபாத்திரம்
தனுஷ் நடித்த, "திருவிளையாடல் ஆரம்பம்" திரைப்படத்தின் கதாநாயகி ஸ்ரேயா, தனுஷின் காதலை ஏற்க மறுப்பார். ஆனால் "என்னைலாம் பார்த்தவுடன் பிடிக்காது.. பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும்.." என்று, சாக்ரடீசும் சொல்ல மறந்துவிட்ட, உலகின் மிகப் பெரிய தத்துவ உரையாடலை முன்வைத்து.. கதாநாயகியை பின் தொடர்ந்து தொல்லை செய்வார் "கதாநாயகன்." இப்படி தொல்லை செய்யாதே என்று தட்டிக் கேட்கும் கதாநாயகியின் அண்ணன் கதாபாத்திரம்தான் இதில் வில்லன் பாத்திரம் என்பது கொடுமையின் உச்சம். இந்த படம் போதிப்பது என்ன? காதலை ஒருவர் ஏற்க மறுத்தால் திரும்ப திரும்ப நமது முகத்தை காட்டிக் கொண்டே இருக்கவேண்டும்.. பார்க்க பார்க்க பிடித்துவிடும் என்பது தான். ஆனால் நிஜ வாழ்க்கையில் இது அருவருப்பாக தான் பெண்களால் பார்க்கப்படும் என்பதை சொல்லிக் கொடுக்க எந்த படமும் வெளியாகவில்லை.
ரெமோ சிவகார்த்திகேயன்
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை தனக்கு பிடித்து விட்டது என்பதற்காக பின்தொடர்ந்து பெண் வேடத்தில் கூட சென்று காதலில் விழ வைக்கும் கதாநாயகன் பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் ரெமோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு அப்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில்தான் சமீபத்தில் வெளியான டான் திரைப்படத்தில் அதை ஈடுகட்டும் வகையில் வசனம் பேசியிருப்பார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் அவர் வாழ்த்துகளுக்கு உரியவர். ஏனெனில், "இது ஷார்ட்ஸ் அல்ல ஜட்டி .." என்று அசின் அணிந்து இருந்த ஆடையை பார்த்து, ஆடை கட்டுப்பாடுக்கு கிளாஸ் எடுத்து வசனம் பேசிய விஜய், "சிங்கப் பெண்ணே எழுந்து வா.." என்று பாடும் அளவுக்கு காலத்துக்கு தக்கபடி தன்னை மாற்றிக் கொண்டார். அந்த மாற்றம்தான் அவசர தேவையாக உள்ளது.
சிவாஜி படத்தில் ரஜினிகாந்த்
இவர்களாவது இளம் நடிகர்கள்.. ஆனால் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த், சிவாஜி திரைப்படத்தில் இந்த வேலையைத்தான் பார்த்திருப்பார். "வாங்க பழகலாம்.." என்று தன்னை பிடிக்காத ஒரு குடும்பத்தின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தொல்லை செய்வது அவரது கதாபாத்திரம். காட்சிகளை பார்ப்பதற்கு காமெடி போல் தெரிந்தாலும் ஸ்ரேயா கதாபாத்திர குடும்ப உறுப்பினர்கள் பார்வையில் இருந்து பார்த்தால் இது எவ்வளவு பெரிய வில்லத்தனம், எவ்வளவு பெரிய தொல்லை? இங்கும் ஆணாதிக்கம்தான் அடிநாதமாக இருந்திருக்கும்.
எது ஆண்மைத்தனம்?
நான் காதலை சொன்னேன், அவர் ஏற்க மறுத்தார் மறந்து ஒதுங்கினேன்.. அல்லது நாங்கள் காதலித்தோம், அவருக்கு என்னை பிடிக்கவில்லை. எனவே பிரியப்போவதாக சொன்னார். நான் சரி என்றேன் என்பதுதானே யதார்த்த நிலையாக இருக்கவேண்டும். இதைத்தானே திரைப்படங்கள் காட்ட வேண்டும். ஆனால் பெண்ணுக்கு முடிவெடுக்கும் சுதந்திரம் இல்லை என்பதுபோலவே காட்சிகள் கட்டமைக்கப்படுகின்றன. அது முன்னணி ஹீரோக்களால் முன்மொழியப்பட்டது. இதை பார்க்கும் இளம் ஆண் சமுதாயம், பெண் என்பவள் தனது விளையாட்டு பொம்மை என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறது. பிரிந்துவிடுகிறேன் என்று சொன்னால் போதும் உயிரையே பிரித்தெடுக்கும் கொடூரர்களாக மாறிவிடுகிறார்கள். பெண்ணின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து விலகி செல்வதுதான் ஆண்மைத் தனம் என்ற அடிப்படையை இவர்களுக்கு கற்றுக் கொடுக்கப் போகும் கதாநாயகர்களையும், திரைப்படங்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறது இந்த தமிழ்ச் சமூகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக