Prasanna Venkatesh - GoodReturns Tamil : தமிழ்நாட்டில் புதிதாகத் தொழில் துவங்க வேண்டும் எனத் திட்டமிடும் அனைத்து பெரு நிறுவனங்களுக்குத் தற்போது ஓசூர் விருப்பமான இடமாக மாறியுள்ளது. கடந்த 2 வருடத்தில் டாடா மற்றும் ஓலா ஆகிய இரு பெரிய நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலையை ஓசூரில் அமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சிறிதும் பெரிதுமாகப் பல நிறுவனங்கள் ஓசூரைத் தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஓசூரில் வர்த்தக வளர்ச்சிக்காகவும், புதிய நிறுவனங்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் சுமார் 4000 ஏக்கர் நிலத்தை வாங்க முடிவு செய்து அதற்கான பணிகளை வேக வேகமாகச் செய்து வருகிறது..
4000 ஏக்கர் நிலம் - ஓசூரில் இதுவரை தமிழ்நாடு அரசு சுமார் 1000 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், மீதமுள்ள 3000 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றும் பணிகளைச் செய்து வருகிறது. முதலீட்டாளர்களைத் தொழில் துவங்க அழைக்கும் போது அரசிடம் போதுமான நில இருப்பு இருந்தால் மட்டுமே முதலீட்டை விரைவாக ஈர்க்க முடியும்.
ஆனால் நில உரிமையாளர்களிடம் இருந்து நிலத்தை வாங்குவது என்பது சாதாரணக் காரியம் இல்லை, இதனால் தமிழ்நாடு அரசு அடுத்த 3000 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றுவதில் பெறுமளவிலான சவால்களும் தாமதமும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
முதலீட்டாளர்களுக்கு ஓசூரின் பருவநிலை, பெங்களூருக்கு அருகில் இருப்பதாலும், MSME-க்கான சிறப்பான தளம் இருக்கும் காரணத்தால் மிகவும் பிடித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஓசூர் மிகவும் விருப்பமான நகரமாக மாறியுள்ளது.
ஒருபக்கம் தலைநகரான சென்னை மிகவும் கடுமையான நெரிசலையும், டிராபிக், சரக்கு போக்குவரத்து, மழைவெள்ளம் எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் உற்பத்தி நிறுவனங்கள் சென்னைக்கு மாற்று இடமாக ஓசூரையும், ஐடி நிறுவனங்கள் சென்னைக்கு மாற்று இடமாக கோயம்புத்தூரையும் ஏற்றுக்கொண்டு உள்ளது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் பணியில் ஓசூரில் சிறந்து விளங்கும் நிலையில் தற்போது டாடா மற்றும் தைவான் நாட்டின் டெல்கா எலக்ட்ரானிக்ஸ் வருகை மூலம் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறைக்கும் ஓசூர் முக்கிய இடமாக மாறியுள்ளது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் தனது எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்காக ஏற்கனவே ஓசூரில் 1200 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஓசூரில் ஏற்கனவே ஆட்டோமொபைல் துறையில் அசோக் லேலண்ட் உட்படப் பல நிறுவனங்கள் உள்ளது, இதோடு உற்பத்தித் துறையில் சிறிதும் பெரிதுமாகப் பல MSME நிறுவனங்கள் உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக