ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

மதுரை வாக்குச்சாவடி ஹிஜாப் - பாஜக முகவருக்கு சிறை!

 மின்னம்பலம் : மதுரையில் வாக்கு செலுத்த வந்த இஸ்லாமிய பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறி பிரச்சினை செய்த பாஜக பூத் முகவர் கிரிராஜனை மார்ச் 4 ஆம் தேதிவரை சிறையில் அடைக்க மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. இதையடுத்து வருகிற 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த நகராட்சியில் 8வது வார்டில் அல்அமீன் உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தார்.

அப்போது, அங்கிருந்த பாஜக பூத் முகவர் கிரிராஜன், முகம் தெரியும்படி ஹிஜாப்பை கழற்றிவிட்டு வாக்களிக்கும்படி அந்த பெண்ணிடம் கூறினார். இதற்கு அங்கிருந்த மற்ற கட்சி முகவர்கள் மற்றும் அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அங்கிருந்த அலுவலர்கள் “நீங்கள் அந்த பெண்ணின் முகத்தை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினர். அதற்கு பாஜக முகவர், “அராஜகம் நடக்கிறது, இதை ஏற்றுக்கொள்ள முடியாது. முகத்தை காட்டாமல் அனுமதிப்பது, கள்ளஓட்டு போட அனுமதிப்பதற்கு சமம், அவர் கள்ள ஓட்டுப்போட வந்தாரா?” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அங்கிருந்த மற்ற கட்சி முகவர்கள் மற்றும் அலுவலர்கள் வாக்குச் சாவடியிலிருந்து வெளியேறினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் வந்து, அவரை வலுக்கட்டாயமாக வாக்குச்சாவடியை விட்டு வெளியேற்றினர். இதனால் அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக பாஜக முகவராக உஷா என்பவர் நியமனம் செய்யப்பட்ட பின்பு, மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து தேர்தல் ஆணையர் பழனிக்குமாரும் விளக்கமளித்திருந்தார்.

இதுதொடர்பாக மேலூர் எட்டாவது வார்டு வாக்குச்சாவடி செயல் அலுவலர் நேதாஜி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்படி, பாஜக முகவர் கிரிராஜன் மீது மதத்தின் உணர்வை புண்படுத்துதல், மற்றொரு மதத்தைச் சேர்ந்தவரை இழிவுபடுத்தும்படி பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்ந்து மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிமன்ற நடுவர் ஜெயந்தி நடந்த விவரங்கள் குறித்து விசாரித்தார். அதனைத் தொடர்ந்து பாஜக முகவர் கிரிராஜனை மார்ச் 4ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் மேலூர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி மேலூர் கிளைச் சிறையில் கிரிராஜன் அடைக்கப்பட்டார்.

சட்ட விரோதமாக பாஜகவின் முகவரை வெளியேற்றிய அதிகாரிகளை தேர்தல் ஆணையம் தண்டிக்க வேண்டும் என்று பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்திருந்தார்.

-வினிதா

கருத்துகள் இல்லை: