மின்னம்பலம் : சென்னை 176ஆவது வார்டு அதிமுக வேட்பாளருக்குத் தொடர்புடைய இடங்களில் ரவுடிகள் பிம்பத்திலிருந்த கொத்தனார் உள்ளிட்ட கூலியாட்கள் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேட்பாளர் தேர்வு, மனு பரிசீலனை, பிரச்சாரம், பறக்கும் படை சோதனை, வாக்குப்பதிவு என கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக இருந்த உள்ளாட்சித் தேர்தல் களம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் உள்ளாட்சித் தேர்தலில் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதால் வேட்பாளர்களை மிக கவனமாகத் தேர்வு செய்தது அதிமுக.
வேளச்சேரி 176ஆவது வார்டில் போட்டியிடுவதற்காக அதிமுகவைச் சேர்ந்த எம்.ஏ.மூர்த்தி சீட் கேட்டதற்கு, அந்த மாவட்ட செயலாளர் அசோக் மறுத்திருக்கிறார். இதனால், நேரடியாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி சீட் வாங்கினார். ‘எனக்கு கட்சி சார்பில் பணமெல்லாம் செலவு செய்ய வேண்டாம். அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துக் காட்டுகிறேன்’ எனக் கூறி சீட் கேட்டு பெற்றார் எம்.ஏ.மூர்த்தி.
அதோடு திமுக தரப்பில் அந்த வார்டில் ஓட்டுக்கு 500 ரூபாய் வரை செலவு செய்த நிலையில் மூர்த்தி ஏறத்தாழ 2000 ரூபாய் வரை செலவு செய்ததாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற சமயத்தில் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடைபெறும் சூழலில், மூர்த்தி கூலிப்படைகளை அழைத்து வந்து வைத்திருப்பதாக அவருக்கு எதிராக அதிமுகவினர் சிலரே காவல்துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில், கிண்டி ஏ.சி புகழ்வேந்தன் தலைமையில் போலீசார் மூர்த்திக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது கட்சி அலுவலகத்திலிருந்து 17 பேரும், ரியஸ் எஸ்டேட் அலுவலகத்திலிருந்து 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஒருவர், ‘நான் பெயிண்ட் வேலை செய்கிறேன். எனக்கு 2000 ரூபாய் தருவதாகக் கூறி அழைத்து வந்தனர். நான் ரவுடி எல்லாம் இல்லை” என்று கதறியுள்ளார்.
மற்றொருவர், “நான் கொத்து வேலைக்குச் செல்கிறேன். ரவுடிகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை. சும்மா வந்து நில்லு என்றார்கள். வந்தேன்” என்று கூறியுள்ளார்.
இப்படி போலீசார் நடத்திய விசாரணையில் , மூர்த்தி கொத்தனார், பெயிண்டர் ஆகியோர்களை அழைத்து வந்து அடியாட்கள் போன்று பிம்பத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, 27 பேரையும் போலீசார் ரிமாண்ட் செய்துள்ளனர்.
-வணங்காமுடி, பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக