மின்னம்பலம் : சென்னையில் திமுக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டதாக அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. இந்தச் சூழலில் உச்சக்கட்டமாக நேற்று திமுக நிர்வாகி மதன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லவன் சாலை காந்தி நகரில் நேற்று இரவு சமீபத்தில் மறைந்த திமுக நிர்வாகியின் புகைப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 32 வயதுடைய திமுக நிர்வாகியான மதன் அங்கே சாலையில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் மதனைச் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்ய முயன்றனர்.
உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மதன் ஓடிய நிலையிலும் விடாமல் துரத்திய அந்தக் கும்பல் கை, கால்கள், மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பித்துவிட்டது.
இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த மதன் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தால் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள அந்தப் பகுதியில் நேற்று இரவு பெரும் பதற்றம் நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவல்லிக்கேணி காவல் துறை உதவி ஆணையர் பாஸ்கரன் தலைமையிலான போலீஸார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இந்தக் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தேர்தல் முன்பகை காரணமாக இந்தக் கொலை நடைபெற்றதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் அதிமுகவிலிருந்து திமுகவில் மதன் இணைந்தது தெரியவந்துள்ளது. மாநகராட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளார். இந்தச் சூழலில் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் தேர்தல் முன்பகை காரணமா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி திமுக நிர்வாகி மடிப்பாக்கம் செல்வம் கொலை செய்யப்பட்டார். இந்தச் சூழலில் ஒரு மாத இடைவெளிகூட இல்லாமல் மற்றொரு திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
-பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக