செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

மாநகராட்சி + உள்ளூராட்சிகளில் திமுக சூறாவளி அதிர்ச்சியில் அதிமுக பஜாக.... கொங்கு மண்டலத்தையும் கைப்பற்றியுள்ளோம்: மகிழ்ச்சியில் ஸ்டாலின்

 மின்னம்பலம் : இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 21 மாநகராட்சிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.
200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் திமுக 140 வார்டுகளிலும், காங்கிரஸ் 8 வார்டுகளிலும், அதிமுக 13 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கிறது.
100 வார்டுகளை கொண்ட மதுரையில் திமுக 51 வார்டுகளிலும், அதிமுக 12 வார்டுகளிலும், காங்கிரஸ் 5 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
100 வார்டுகளை கொண்ட அதிமுகவின் கோட்டையான கோவையில் திமுக 35 வார்டுகளிலும், அதிமுக - 3, சிபிஐ-1. சிபிஐ (எம்)-3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
சேலத்தில் திமுக 29 இடத்தையும், அதிமுக 4 இடத்தையும் கைப்பற்றியுள்ளன.



55 வார்டுகளை கொண்ட நெல்லையில் அதிமுக 3 இடங்களிலும் திமுக 32 இடங்களிலும் உள்ளன.

48 வார்டுகளை கொண்ட கரூரில் திமுக 42, அதிமுக 2, காங்கிரஸ்1, சிபிஐ(எம்) 1 இடத்தையும் பிடித்துள்ளது.

இவ்வாறு 21 மாநகராட்சிகளிலும் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி திமுக முன்னிலையில் உள்ளது.

மாநகராட்சி வார்டு உறுப்பினர்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் படி, 1374 மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 1091க்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 4 இடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு இடத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக 134 இடங்களையும், பாஜக 15 இடங்களையும், சிபிஐ 8 இடங்களையும், சி.பி.ஐ(எம்) 21 இடங்களையும், திமுக 765 இடங்களையும், காங்கிரஸ் 60 இடங்களையும், மற்றவை 92 இடங்களையும் பிடித்துள்ளன.

நகராட்சி வார்டு உறுப்பினர்

3843 இடங்களில் 3752க்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு இடத்துக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 621 இடங்களை அதிமுக பிடித்துள்ளது. பாஜக 56, சிபிஐ 19, சி.பி.ஐ(எம்) 40, தே.மு.தி.க 12, திமுக 2309, காங்கிரஸ் 147, மற்றவை 553 இடங்களையும் பிடித்துள்ளன.

பேரூராட்சி வார்டு உறுப்பினர்

7621 இடங்களில் 7603 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 4 இடங்களுக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதிமுக 1207,பாஜக 230, சிபிஐ 26, சி.பி.ஐ(எம்)-101, தேமுதிக 23, திமுக 4388, காங்கிரஸ் 367, மற்றவை 1259 இடங்களையும் பிடித்துள்ளன.

தேர்தல் முடிவு வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் திமுக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தேர்தல் முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள அதிமுகவினர், பல்வேறு இடங்களிலும் திமுக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

-பிரியா

மின்னம்பலம் :  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை வகிக்கும் நிலையில் இது திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதோடு கொங்கு மண்டலத்தை கைப்பற்றியதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்றது. இதில் பெருவாரியான இடங்களில் திமுக முன்னிலை வகிக்கும் நிலையில் அக்கட்சியினர் சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

"நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணி வெற்றியைப் பெற்றுள்ளது. வெற்றியைக் கொடுத்த தமிழக மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

9மாத திமுக ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றிதழ் ஆக இந்த வெற்றியைப் பார்க்கிறேன். திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரமாக இந்த வெற்றியைப் பார்க்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்தால் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்கள் என்று மக்கள் நம்பி உள்ளார்கள்.

திமுக மீதான மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவோம். இந்த வெற்றியை கண்டு நான் கர்வம் கொள்ள வில்லை. மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியைத் தான் நான் கொண்டுள்ளேன்.

திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணி தேர்தல் கூட்டணி, அல்ல கொள்கை கூட்டணி.

நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் நாம் தொடர் வெற்றியை பெற்றுள்ளோம். கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பிரச்சாரமும் இந்த வெற்றிக்குக் காரணமாகும்.

உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது ஒரு சமூக நீதி புரட்சியாகும். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதே திமுகவின் குறிக்கோள். இந்த 50 சதவிகித இட ஒதுக்கீட்டால் சமூகத்தில் சரிபாதி பெண்கள் பொறுப்புகளுக்கு வந்திருக்கிறார்கள். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்றவர்கள் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும். மக்கள் உங்கள் மீது புகார் கூறாத அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும். உங்களை நான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பேன்.

இந்த வெற்றியை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம், அமைதியாகக் கொண்டாட வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கலைஞரின் நினைவிடத்திற்குச் சென்றேன். அப்போது எங்களுக்கு வாக்களிக்காதவர்கள் வருத்தப்படும் வகையில் செயல்படுவேன் என்று கூறியிருந்தேன். அந்த அடிப்படையில்தான் செயல்படுகிறேன். அதனால்தான் அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படுகின்ற கொங்கு மண்டலத்திலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம்.

சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி ஏற்பில் பங்கேற்பது குறித்து முடிவு செய்வேன். பாஜகவின் வெற்றி குறித்து தற்போது எதுவும் கூற முடியாது ”என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மெரினாவில் உள்ள கலைஞர், அண்ணா நினைவிடத்துக்குச் சென்ற முதல்வர் மலர்தூவி மரியாதை செலுத்தினார் . அவருடன், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், உதயநிதி எம்.எல்.ஏ உள்ளிட்டோரும் சென்றனர்.

-பிரியா

கருத்துகள் இல்லை: