மாலைமலர் : ‘சற்றே குறைப்போம்' திட்டத்தின் கீழ் சர்க்கரை, உப்பு, எண்ணெய் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன். துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரத்த சிவப்பணுக்கள் உறைநிலை சேமிப்பு அலகு ஏற்படுத்தப்படும். ‘சற்றே குறைப்போம்' திட்டத்தின் கீழ் சர்க்கரை, உப்பு, எண்ணெய் பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். டெல்டா பிளஸ் குறித்து அறிய ரூ.4 கோடியில் சென்னையில் மரபணு பகுப்பாய்வு கூடம் அமைக்கப்படும்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் ரூ.258 கோடி செலவில் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். 25 அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும். கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ குழு வாகனங்கள் இயக்கப்படும்.
15வது நிதி ஆணையம் தமிழ்நாட்டின் மருத்துவத் துறை மேம்பாட்டிற்கு வரும் 5 ஆண்டுகளுக்கு பரிந்துரைத்துள்ள ரூ.4280 கோடி நிதியில், வட்டார அளவிலான மற்றும் நகர்ப்புற மருத்துவமனைகள் கட்டப்படும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு நோய் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும், இந்த நிதியின்கீழ் இம்மையங்கள் நலவாழ்வு மையங்களாக மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக