நேற்று இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்து முன்னணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடைகளை மீறி விநாயகர் சிலைகளை நிறுவுவோம் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்டு 31) தமிழக சட்டமன்றத்தில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்து கலைவாணர் அரங்கத்துக்கு வெளியே தர்ணா செய்தனர்.
அவர்களை கைது செய்து சாலையை க்ளியர் செய்த கொஞ்ச நேரத்தில் வாலாஜா சாலை மீண்டும் பரபரப்பானது. இன்று பகல் 12.30 மணியளவில் திடீரென வாலாஜா சாலையில் விநாயகர் சிலைகளைத் தூக்கிக் கொண்டு ஒரு குழுவினர் கூட்டமாக வர போலீசார் பதற்றம் அடைந்தனர்.
அவர்கள் கையில் விநாயகர் சிலைகளும், ‘மன்றாடிக் கேட்கிறோம் மண் கலைத் தொழிலைக் காப்பாற்று’ என்ற பதாகைகளும் இருந்தன.
சட்டமன்றத்தை நோக்கி வந்த அவர்கள் தமிழ்நாடு கைவினை காகிதக் கூழ் விநாயகர் சிலைகள், களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர் நல சங்கத்தினர்.
தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகள் தயாரிப்பது, விற்பனை செய்வது போன்றவற்றுக்கு தடைகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு ஏற்பட்ட தொழில் முடக்கம், பொருளாதர இழப்பு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில்...
கைவினைக் கலைஞர்கள், களிமண் பொம்மை தயாரிப்பாளர்களது நலன் காக்க நலவாரியம் அமைக்கப்பட வேண்டும். கொரோனாவால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்புக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். கடந்த ஆண்டைப் போல தொழில் செய்யும் தொழில் கூடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை இந்த அரசு கைவிட வேண்டும்.
நாங்கள் உற்பத்தி செய்யும் பொம்மைகள், கைவினை பொருட்களை அரசே கொள்முதல் செய்து நியாயமான விலை வழங்க வேண்டும்.
விநாயகர் சிலைகள் மற்றும் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் எங்கள் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
ஆகிய கோரிக்கைகளை முன் வைத்துதான் தமிழக சட்டமன்றத்தை நோக்கி திரண்டு வந்தார்கள் பொம்மைகள் தயாரிப்பாளர் சங்கத்தினர்.
மேலும் அவர்கள், “விநாயகர் சதுர்த்தி இல்லையென்றால் எங்களுக்கு வாழ்க்கை இல்லை. வழிகாட்டு நெறிமுறைகளோடு விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கொடுங்கள். எங்கள் வாழ்வாதாரம் சென்ற ஆண்டும் இல்லாத நிலையில் இந்த ஆண்டும் இல்லாமல் செய்துவிடாதீர்கள்” என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனாலும் எந்த அனுமதியும் இல்லாமல் சட்டமன்றத்தை நோக்கி விநாயகர் சிலைகளோடு ஊர்வலமாக பெண்கள், குழந்தைகள் சகிதம் அவர்கள் வந்ததால் அதிர்ந்துபோன போலீஸார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
அதிமுகவினர் போராட்டம், அடுத்து விநாயகர் சிலை ஊர்வலம் போன்றவற்றால் சட்டமன்றம் அமைந்திருக்கும் பகுதி பரபரப்பானது.
வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக