கலைஞர் செய்திகள் - விக்னேஷ் செல்வராஜ்: ‘லேமினேட்’ செய்து பாதுகாக்கப்பட வேண்டியது மு.க.ஸ்டாலினின் அரசியல் என பிரபல தெலுங்கு தொலைக்காட்சி புகழாரம் சூட்டியுள்ளது.
10TV என்பது, புகழ்பெற்ற தெலுங்கு செய்தித் தொலைக்காட்சி. அதன் 'Clearcut’ எனும் நிகழ்ச்சியில், இந்த வாரம் தமிழக அரசியலையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் குறித்துப் பேசினார்கள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்களிடம் காட்சிக்கெளியராக விளங்குவதையும், அணுகுதற்கு ஆரவாரமற்றவராக இருப்பதையும், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் மக்களின் நலன்கள் குறித்தே சிந்தித்துச் செயல்படுவதையும் வெகுவாகப் புகழ்ந்து, ஒரு வீடியோ செய்தித் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்கள்.
தெலுங்கில் இடம்பெற்ற இக்காட்சித் தொகுப்பினை - அவர்கள் வழங்கிய அதே எளிய மொழி வடிவில் வழங்குகிறோம்.
நிகழ்ச்சியை அதன் நெறியாளர் இப்படித் தொடங்குகிறார்:
நேயர்களே! நீங்கள் லேமினேட் செய்த சான்றிதழ்களைப் பார்த்திருப்பீர்கள். லேமினேட் செய்த ஐ.டி. அடையாள அட்டைகளைப் பார்த்திருப்பீர்கள். லேமினேட் செய்த புகைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். இவைகளைப் போல லேமினேட் செய்து பாதுகாக்கப்பட வேண்டிய தரமான அரசியல் இருக்கிறது. அதை நீங்கள் தமிழ்நாட்டில் பார்க்கலாம்.கொடுத்த வாக்குறுதிகளை மறந்த முதலமைச்சர்கள் பலரைப் பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு இடையில், முன்மாதிரியாக விளங்கும் முதலமைச்சராக உயர்ந்துவருகிறார் மு.க.ஸ்டாலின்.
சாலையில் விரைந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு முதலமைச்சர், தெருவோரம் நின்றுகொண்டு உதவி கேட்கும் ஓர் எளிய பெண்மணிக்காக வாகனத்தை நிறுத்தி அவரது குறைகளைக் கேட்கிற ஒரு முதலமைச்சரைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்தான் மு.க.ஸ்டாலின்.
இப்போதைய அரசியல்வாதிகள் சிறிய செயலைக் கூடப் பெரிதாக ஊதிப்பெருக்கி விளம்பரம் செய்து கொள்வார்கள். ஆனால் மு.க.ஸ்டாலின் விளம்பரப்பிரியர் அல்ல. தனது அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் அவர் குறியாக இருக்கிறார். மக்கள் அனைவருக்கும் உணவுப்பொருள் சென்றடைய வேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோளாக இருக்கிறது. மாற்றுக் கட்சியினருக்கும், மற்ற முதல்வர்களுக்கும் அவர் முன் மாதிரியாக விளங்குகிறார்.
கடந்த ஆட்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட பைகளில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவின் படமும் பழனிச்சாமியின் படமும் இருந்தன. அந்தப் படத்தை அகற்றவேண்டாம் என்று சொல்லிவிட்டார். மக்களின் வரிப்பணத்தை ஏன் விரயமாக்க வேண்டும் என்பது அவர் கேள்வி.
எதிர்க்கட்சித் தலைவர்களின் படங்கள் அச்சிட்ட பைகள் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. அதிசயம்தான். ஆனால் தமிழ் நாட்டில் நடக்கிறது.
அனைத்துக் கல்லூரிகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்திருக்கிறார் இந்த முதலமைச்சர்.
இந்தியா முழுக்க பெட்ரோல் விலை அதிகமாகி வரும்போது தமிழகத்தில் அதன் விலையைக் குறைத்திருக்கிறார் இந்த முதல்வர்.
‘அம்மா உணவகம்’ ஜெயலலிதா அரசால் தொடங்கப்பட்டது. அங்கே இருக்கும் ஜெயலலிதா, பழனிச்சாமி படங்களை அகற்ற வேண்டாம் என்று சொல்லிவிட்டார் இந்த அதிசய முதலமைச்சர்.
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து, ஒன்றிய அரசுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது தமிழக அரசு.
கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், தமிழக அரசு மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்கிறது.
“அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு படித்தவர்கள் கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும்!” என்று ஆணையிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதை எதிர்த்தவர்களிடம், “நீங்கள் 50 லட்சம் பணம் கட்டித் தனியார் கல்லூரிகளில் படித்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என்று பதில் கூறியுள்ளார். அவரது துணிவும் நல்லெண்ணமும்தான் இன்று தமிழகத்திலும் - தமிழகத்திற்கு வெளியிலும் பேச்சாக இருக்கிறது.
சட்டப்பேரவையில் தன்னைப் புகழ்ந்து பேசும் உறுப்பினர்களை அவர் கண்டிக்கிறார். “அவையின் நேரத்தை வீணாக்காதீர்கள்” என்று எச்சரிக்கிறார்.
‘ பரத் எனும் நான்' என்ற படத்தில் மகேஷ்பாபு சொல்வார்: 'முதலமைச்சர் என்பது பதவி அல்ல அது ஒரு பொறுப்பு, அதன் மூலம் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும்.' அப்படியான கடமை உணர்வுடன் செயலாற்றி வருகிறார் மு.க.ஸ்டாலின்.
நிகழ்ச்சியின் நிறைவாக ஆந்திராவின் புகழ்பெற்ற பேராசிரியர் நாகேஸ்வரரின் நேர்காணல் இடம்பெறுகிறது. பேராசிரியர் சொல்கிறார் :
“ஜெயலலிதாவின் படங்களை அம்மா உணவகங்களிலிருந்து அகற்றவேண்டாம்” என்று சொன்னதில், மு.க.ஸ்டாலினின் பெருந்தன்மை வெளிப்படுகிறது. அவரிடத்தில் காழ்ப்புணர்ச்சி இல்லை.
இரண்டாவதாக - தன்னைப் பற்றி யாரும் புகழ்ந்து பேசவேண்டாம் என்று தனது கட்சிக்காரர்களையே கேட்டுக்கொண்டது, அவரது எளிமையைக் காட்டுகிறது.
மு.க.ஸ்டாலின், அர்த்த சாஸ்திரத்தில் கூறியபடி, அரசை சீரிய தலைமைப் பண்போடு வழி நடத்திச் செல்கிறார்.
மூன்றாவதாக - தேர்தல் காலத்தில் மட்டும் வெளித்தெரியும் சராசரி அரசியல்வாதிகள் மத்தியில் எப்பொழுதும் மக்களுடன் மக்களாக நிற்கிறார். அது இவரை மக்களின் தலைவனாக மாற்றியிருக்கிறது”- என்று சொல்லி முடிக்கிறார் பேராசிரியர் நாகேஸ்வரர்.
இவ்வாறு அந்த செய்தித்தொகுப்பினை ‘10TV ’ தெலுங்கு தொலைக்காட்சி நிறைவுசெய்துள்ளது.
நன்றி: முரசொலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக