இந்த குழந்தையை சித்ரவதை செய்த துளசி என்ற பெண் தனது கணவரையும் குழந்தைகளையும் கடந்த 40 நாட்களுக்கு முன்பே பிரிந்து தனது தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், குழந்தையை துளசி சித்ரவதை செய்யும் காணொளி வைரலான நிலையில், செஞ்சி அனைத்து மகளிர் நிலைய காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படையினர் துளசியை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி அருகே உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
அங்கிருந்து சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு இன்று அதிகாலை சுமார் 5 மணிக்கு துளசி அழைத்து வரப்பட்டார். அவரிடம் தனிப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பெற்ற குழந்தையை சித்ரவதை செய்யும் அளவுக்கு துணிந்த துளசி, மன ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அரிய விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில், அவருக்கு மனநல கோளாறு இல்லை என்று மருத்துவர்கள் சான்று அளித்துள்ளனர்.
இதையடுத்து செஞ்சி குற்றவியல் நீதிமன்றத்தில் துளசியை சத்தியமங்கலம் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் உத்தரவிட்டார்.
முன்னதாக, காவல் துறை விசாரணையில் துளசி குறைப் பிரசவத்தில் தனக்கு குழந்தை பிறந்ததால் தன்னுடைய அழகை இழந்து விட்டதாக கூறி இளைய மகனை அடித்து சித்ரவதை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னையில் உள்ள தனது நண்பர் ஒருவரின் தூண்டுதலின் பேரிலேயே அவர் இப்படி செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவனிடம் பிபிசி தமிழ் பேசியது.
அப்போது அவர், "இந்த பெண்ணின் கணவர் வடிவழகன் சென்னையில் சிறிது காலம் வேலை செய்தபோது, பெருங்குளத்தூர் பகுதியில் அவருடன் துளசி குடியிருந்துள்ளார். அப்போது மிஸ்டு கால் (missed call) மூலமாக பிரேம்குமார் என்ற நபருடன் துளசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு சமயத்தில் இந்த பெண்ணின் 4 வயது பெரிய மகன் உன்னைப் போன்று அழகாக இருப்பதாகவும், இரண்டாவது மகன் உனது கணவர் போன்று இருப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அந்த சென்னை நபர் பேசியுள்ளார்.
மேலும் இளைய மகனை அடித்து வீடியோ எடுத்து அனுப்பும்படியும், அப்போது தான் உன்னைத் திருமணம் செய்துகொள்வதாகவும் அந்த சென்னை நபர் கூறியிருக்கிறார். அதற்கு இணங்க இளைய மகனை அடித்து அந்த வீடியோவை பிரேம்குமாருக்கு துளசி அனுப்பியுள்ளார். உன் கணவனை பிரிந்து தாயார் வீட்டிற்கு சென்றதும் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் அந்த நபர் கூறியுள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் கடந்த ஒரு வருடத்தில் நடந்தவை.
குழந்தை காயம்படும் போதெல்லாம் கட்டிலிலிருந்து கீழே விழுந்துவிட்டதாகவும், விளையாடும்போது கீழே விழுந்ததாகவும் காரணம் சொல்லி குழந்தையின் தந்தையை ஏமாற்றியுள்ளார் துளசி. ஒவ்வொரு முறையும் குழந்தைக்கு காயம் ஏற்படும் போதெல்லாம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்," என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
"இதற்கிடையே கடந்த 40 நாட்களுக்கு முன்பு இந்த பெண்ணிற்கும், சென்னையை சேர்ந்த பிரேம்குமார் என்ற வேறொரு நபருடன் பழக்கம் இருப்பது கணவருக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து துளசி தனது தாய்வீட்டிலேயே இருக்க அவரது கணவர் கூறியிருக்கிறார்.
பின்னர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குடும்பத்தில் உள்ள முக்கிய உறவினர்களுடன் சித்தூரில் உள்ள பெண்ணின் வீட்டிற்குச் சென்று விவாகரத்து பத்திரத்தில் அவரது கணவர் கையொப்பம் வாங்கி வந்துள்ளார். அப்போது, தான் கொடுத்திருந்த அலைபேசியையும் அவர் வாங்கி வந்துள்ளார். அந்த அலைபேசியில்தான் குழந்தையை துளசி அடித்து சித்ரவதை செய்யும் காணொளியைப் வடிவழகன் பார்த்திருக்கிறார். அந்த காணொளியே சமூக வலைதளத்தில் பரவியது," என்று கூறினார் இளங்கோவன்.
மேலும் துளசி காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், "எனக்கு இளைய மகனைப் பிடிக்காது, பெரிய பிள்ளையைத் தான் பிடிக்கும். இளைய மகனை ஏழு மாத குறைப் பிரசவத்தில் அறுவை சிகிச்சை செய்து பெற்றதால் எனது அழகு குறைந்து விட்டது என்று கூறியுள்ளார். இந்த காரணத்தினாலேயே துளசி குழந்தையை அடித்து சித்ரவதை செய்ய தூண்டியிருக்கிறது என்று காவல் அதிகாரி இளங்கோவன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக