அந்த ஒட்டுமொத்த கட்டுரையில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டால் திமுக சேதாரமடைந்திருப்பதாக எழுதியதை படித்தவுடன் சிரித்து விட்டேன்..
உங்கள் கட்டுரையில்
//திமுகவானது கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் சக்திக்கேற்ப தொகுதியை சற்று குறைத்து கொடுக்க முயன்றது தவறல்ல. ஆனால், அதை நடைமுறைப்படுத்திய விதம் பக்குவமற்றது.
இந்த வரிகளின் மூலம் திமுகவுடனான கூட்டணி கட்சிகளின் உறவை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றீர்கள். தொகுதி உடன்பாடென்பது இரு தரப்பிற்கும் பேச்சுவார்த்தை மூலமே நடக்கிறது..
உடன்பாட்டிற்கு பின்பான தலைவர்களின் பேட்டிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. விசிக தலைவரும், இஸ்லாமிய கட்சி பிரிதிநிதிகளும், கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் முத்தரசனும் எந்த இடத்திலும் தன்மான குறைவோ, தவறான அணுகுமுறை இருந்ததாகவே சொல்லவில்லை. ஆனால் உங்கள் பார்வையில் மட்டும் தவறாகப்பட்டிருக்கிறது. ஏனைனில் நீங்களும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் என்பதாலா?
//திமுகவை தன் அமைச்சரவையில் சேர்த்து முக்கிய பதவிகளை கொடுத்து அதிகாரத்தை பகிர்ந்து கொண்ட காங்கிரசின் இமேஜ் பொதுவெளியில் சரிவதற்கு திமுகவிற்காக வேலை பார்க்கும் ’டீம்’ செயல்பட்டால், அதை திமுக அனுமதித்து இருக்க கூடாது. ஆனால், நிலைமை என்னவென்றால் அந்த கார்ப்பரேட் நிறுவனம் சொல்லியபடி தான் திமுக நடந்து கொள்ள வேண்டும். தானாக சுயமாக எதையும் தீர்மானிக்க கூடாது என்று ஒப்பந்தமாம்!///
UPA மத்திய அமைச்சரவையில் திமுக ஒரு கூட்டணி கட்சி. அந்த அமைச்சரவையே ஒரு கூட்டணி மந்திரிசபை என்பதை அறிந்திருந்தால் இப்படி எழுதி இருக்க மாட்டீர்கள். விபிசிங் தான் திமுகவிற்கு மக்களவை உறுப்பினர் இல்லாவிட்டாலும் மந்திரிசபையில் இடம் கொடுத்தவர். UPA-1ல் 16 எம்பிக்களும், UPA-2ல் 18 எம்பிக்களும் திமுக சார்பில் வெற்றி பெற்று காங்கிரசை ஆதரித்ததால் தான் மந்திரி பதவிகள் கிடைத்தனவே தவிர வேறு என்ன காராணம் இருக்க முடியும். இங்கு ஒரு விசயத்தை குறிப்பிட விரும்புகிறேன், திமுக வரலாற்றில் கரும் புள்ளியாக, ஒட்டுமொத்த இந்திய பார்ப்பன-பனியா கூட்டத்தின் சதியால் 2G என்ற பொய்யான ஊழல் கட்டமைக்கப்பட்ட போது, காங்கிரசின் அணுகுமுறையும், திமுகவை, ஆ. ராசவை மோசமாக நடத்திய விதமும் உங்களை போன்றவர்கள் திட்டமிட்டு மறைத்தாலும், திமுக அதை நினைவில் நிறுத்தும். அந்த 2Gல் இருந்து ஆ.ராசாவும், திமுகவும் புடம் போட்ட தங்கமாக வெளிவந்து விட்டனர். ஆனால் காங்கிரஸ் தான் இன்னும் மீள முடியாமல் தேசிய அளவில் எதிர்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் பரிதாபமாக நிற்கிறது. சென்ற 2021 பாராளுமன்ற தேர்தலில் திமுக கண்ணியமாக 10 இடங்களை ஒதுக்கி, அதில் 9 இடங்களில் வெற்றியையும் பெற காங்கிரசிற்கு துணை நின்றதை மறந்து விட்டு பேசுவது தான் மூத்த ஊடகவியலாளரின் செயலா? இதே காங்கிரஸ் தான் இந்திய அளவில் மொத்தமே 45 இடங்களை (தமிழ்நாட்டின் 9 யையும் சேர்த்து) மட்டுமே வென்றது.. இவையெல்லாம் தான் கூட்டணி பங்கீட்டின் மிக முக்கியமான காரணிகள் என்பதே உண்மை.
இந்த நினைவூட்டல்களால் காங்கிரசுடனான கூட்டணிக்கு எந்த பங்கமும் வரப்போவதில்லை என்றும், காங்கிரஸ் இந்த கூட்டணியின் முக்கிய அங்கம் என்ற புரிதலும் எனக்குண்டு.
இந்த கட்டுரையிலேயே மிகப் பெரிய அபத்தம் என்பது
//தமிழகத்தில் முஸ்லீம்களின் சதவிகிதம் சுமார் 14% என்கிறார்கள். எஸ்.டி.பி.பி, தமிமுன் அன்சாரியின் மனித நேய மக்கள் ஜனநாயக கட்சி அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் ஒரு குடையின் கீழ் இணைத்து அவர்களுக்கு குறைந்தபட்சம் 7% சதவிகித தொகுதிகள் ஒதுக்கினாலே கூட மொத்தம் 17 தொகுதிகள் தர வேண்டும். சரி,அது முடியாது என்றால், 12 தொகுதிகளாவது தந்திருக்கலாம்! ஆனால், கொடுத்தது இது வரை ஐந்து தான்!//
சென்ற 2016சட்டசபை தேர்தலில் 9 இடங்களில் ஒன்றை வென்ற இஸ்லாமிய கட்சிகளின் பலத்தை அறிந்தும், திமுகவில் உள்ள இஸ்லாமியர்களுக்கான வாய்ப்புகளையும் அறிந்தே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது...
தமீமுன் அன்சாரிக்கு சீட் இல்லை என்ற உங்கள் அறச்சீற்றத்தை படித்தவுடன் சிரித்து விட்டேன். அவர் கடந்த ஐந்தாண்டுகளாக அதிமுகவின் எம்எல்ஏவாகவே தானே செயல்பட்டார். குறைந்தபட்சம் ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு கூட ராஜினாமா செய்யாமல் இருந்த ஒரு அதிமுக எம்எல்ஏக்கு சீட் கொடுக்கவில்லை என்ற உங்களின் விமர்சனம் ஏற்கத்தக்கதா? ஏன் கருணாஸ், தனியரசு போன்றவர்களுக்கும் திமுக சீட் கொடுக்கவில்லை என்று கேட்பீர்கள் போல?
பத்தாண்டுகளாக எதிர்கட்சியாக இருந்து, பணபலம், அதிகார பலம், ஒன்றிய, மாநில அரசுகளை எதிர்த்து, ஒரு பலமான கூட்டணியை கட்டி எழுப்பி தேர்தலை சந்திக்க இருக்கும் திமுகவின் செயல்பாடுகளையும், கள சூழலையும் கருத்தில் கொண்டு அரசியல் விமர்சனங்களை வைக்க வேண்டிய உங்களை போன்றோர், இப்படி ஒருதலைப்படசமாக திமுகவின் மீது சேற்றை வாரி இறைப்பது தான் அறமா?
ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன், நிச்சயமாக திமுக தலைமையிலான காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள், சிறுபான்மை இயக்கங்களின் கூட்டணியின் தலைவர்கள் தங்கள் நோக்கத்தில் தெளிவாக இருக்குன்றனர். இம்மாதிரியான கட்டுரைகளால் கூட்டணியின் பங்கீட்டில் சிக்கல் வராது. திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் தன் ஆளுமையை செலுத்தி வெற்றி பெறும் என்றும்,
உழைப்பின் மூலம் வரலாற்று சாதனை படைத்து, பாசிசத்தை கதறவைத்த ஸ்டாலின் என்ற கட்டுரையையும் மே 2 ந்தேதிக்கு பிறகு உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
நன்றி
பிலால் அலியார்
06/03/2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக