அதற்குள் அந்தக் கார் உரிமையாளரின் சடலம் ஓடையில் மிதந்து அடுத்த அதிர்ச்சியை இறக்கியுள்ளது. வாயில் துணியுடன் தானேவிலுள்ள ஒரு ஓடையில் மிதந்துகொண்டிருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்று தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்குப் பின்பே தெரியவரும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒருபுறம் இவ்வாறு கூறினாலும் அவருக்கு நேர்ந்த சம்பவங்கள் அனைத்துமே கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளாக இருக்கின்றன.
காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரென். 47 வயதான இவரின் காரையே மர்ம நபர்கள் அம்பானிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்க பயன்படுத்தியிருக்கின்றனர். ஆட்டோமொபைல் தொழில் செய்துவரும் ஹிரென், பிப்ரவரி 17ஆம் தேதி தானேவிலிருந்து கிராபோர்ட் மார்க்கெட்டுக்கு தனது காரில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது காரில் கோளாறு ஏற்பட்டதால், விக்ரோலி என்ற இடத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரை நிறுத்தியிருக்கிறார். அதன்பின் வாடகை காரில் மார்க்கெட்டுக்குச் சென்றுள்ளார்.
மறுநாள் விக்ரோலியில் காரை எடுக்கச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் காணாமல் போனதைக் கண்டு அதிர்ந்த அவர் விக்ரோலி காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவுசெய்திருக்கிறார். இதுதொடர்பாக போலிஸார் விசாரணை மேற்கொண்டிருக்கும்போது தான் அவரின் கார் பிப்ரவரி 25ஆம் தேதி அம்பானியின் வீட்டிற்கு அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவங்கள் அனைத்தையுமே குற்ற வழக்குகளை விசாரிக்கும் பிரிவினரிடம் ஹிரென் கூறியிருக்கிறார்.
இச்சூழலில் அம்பானி வீட்டு அருகே நிறுத்தப்பட்ட வெடிகுண்டு கார் குறித்து விசாரிக்க வேண்டும் என ஒரு நபர் ஹிரெனுக்கு நேற்று முன்தினம் அழைத்திருக்கிறார். அவர் தன்னை தவ்தே என்ற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறார். இதுதொடர்பாக தனது மகனிடம் தெரிவித்துவிட்டு அந்நபரைச் சந்திக்க இரவு 8 மணிக்குச் சென்றிருக்கிறார். அதன்பின் 10 மணிக்கு மேல் ஹிரென் போனுக்கு அழைத்தபோது ஸ்விட்ச் ஆப் என்று வந்திருக்கிறது. நீண்ட நேரம் தேடியும் அவரைக் காணவில்லை என்பதால் தானே காவல் நிலையத்தில் ஹிரெனின் மகன் புகார் கொடுத்துள்ளார்.
இந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே நேற்று காலை கல்வா ஓடையில் ஒரு சடலம் மிதப்பதாக தானே போலிஸுக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்குசென்று பார்த்த பிறகு தான் அது ஹிரெனின் சடலம் என தெரியவந்துள்ளது. தற்போது பிரேத பரிசோதனைக்காக சத்ரபதி சிவாஜி மருத்துவமனையில் ஹிரெனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. ரிப்போர்ட் வந்த பிறகு தான் கொலையா? தற்கொலையா என்பது தெரியவரும். அதேசமயம் அம்பானிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான துப்பும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது இந்த வழக்கு மும்பை காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றக் கோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஹிரெனின் குடும்பத்தார், ஹிரென் தற்கொலை செய்பவர் அல்ல; அவரை யாரோ கொலை செய்திருக்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடிக்க காவல் துறை விசாரணை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக