திங்கள், 15 ஜூன், 2020

வெளிநாட்டு பொருள் இறக்குமதியை நிறுத்த முடிவு: ராஜ்நாத் சிங்

இறக்குமதியை நிறுத்த முடிவு: ராஜ்நாத் சிங்மின்னம்பலம் : இந்தியா இறக்குமதியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மத்திய அரசின் ஆறு ஆண்டுக்கால சாதனைகளை விளக்கும் வகையில் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக பாஜக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று (ஜூன் 14) நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் ஜன் சம்வாத் நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியிலிருந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ராஜ்நாத் சிங், “வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று நமது அரசு முடிவு செய்துள்ளது. நாம் மற்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யும் நாடு என்று அறியப்படக் கூடாது. இந்தியா ஓர் ஏற்றுமதி நாடாக அறியப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

“இந்திய - சீன எல்லை விவகாரம் நீண்ட காலமாக நிலவி வருகிறது. இதை விரைவில் தீர்க்க வேண்டும். கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. எல்லை பிரச்சினையை விரைவில் தீர்க்கும் பொருட்டிலான பேச்சுவார்த்தையைத் தொடர இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன” என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங்,
மோடியின் ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. இந்தியாவின் மதிப்பு கூடியது. கொரோனா வைரஸ் தொற்றைக் கையாளும் விதம் குறித்து பலரும் விமர்சிக்கலாம்; ஆனால் உலகச் சுகாதார அமைப்பு போன்றவை நம்மைப் பாராட்டுகின்றன. ஊரடங்கு மட்டும் செய்யவில்லை எனில் நம் நிலையை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றும் கூறினார்.
மேலும், “ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியே பிரதானம் என்ற செய்தியை நம் அரசு தெளிவாகத் தெரிவித்து விட்டது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370ஆம் பிரிவு மோடியின் தைரியத்தினால் நீக்கப்பட்டது. முன்பெல்லாம் போராட்டங்களின்போது ஐஎஸ் தீவிரவாதக் கொடிகள் அங்கு பறக்கும் இப்போது காஷ்மீரில் மூவர்ணக்கொடி பறக்கிறது” என்று பெருமிதமும் தெரிவித்தார்.
எழில்

கருத்துகள் இல்லை: