வியாழன், 18 ஜூன், 2020

கொரோனா இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் பலி - உயிரிழப்பு அதிகரித்ததின் காரணம் என்ன? தினத்தந்தி ":  இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணம் என்ன என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. ஆரம்பம் முதலே பாதிப்பு அதிகரித்து வந்தாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பலி எண்ணிக்கை இந்தியாவில் குறைவாகவே இருந்து வந்தது. குறிப்பாக கடந்த 6 தினங்களாக இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 300 முதல் 400-க்குள் இருந்தது.
ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்துக்குள் 2,003 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 1,409 பேர் பலியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் 437 பேரும், தமிழகத்தில் 49 பேரும், குஜராத்தில் 28 பேரும், உத்தரபிரதேசம் மற்றும் அரியானாவில் தலா 18 பேரும், மத்தியபிரதேசத்தில் 11 பேரும், மேற்குவங்காளத்தில் 10 பேரும், ராஜஸ்தானில் 7 பேரும், கர்நாடகாவில் 5 பேரும், தெலுங்கானாவில் 4 பேரும், பீகார் சத்தீஸ்கார், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், பஞ்சாப், புதுச்சேரி மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவரும் 24 மணி நேரத்துக்குள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் புதிதாக உயிரிழந்தவர்களுடன் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை 5,537 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் இந்த எண்ணிக்கை 1,837 ஆக உள்ளது. குஜராத்தில் 1,533, தமிழகத்தில் 576, மேற்குவங்காளத்தில் 495, மத்தியபிரதேசத்தில் 476, உத்தரபிரதேசத்தில் 417, ராஜஸ்தானில் 308, தெலுங்கானாவில் 191, அரியானாவில் 118 பேரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பலியாகி இருக்கின்றனர்.
கர்நாடகாவில் 94, ஆந்திராவில் 88, பஞ்சாபில் 72, ஜம்மு காஷ்மீரில் 63, பீகாரில் 41, உத்தரகாண்டில் 25, கேரளாவில் 20, ஒடிசாவில் 11, சத்தீஸ்கார் மற்றும் ஜார்கண்டில் தலா 9, அசாம் மற்றும் இமாசல பிரதேசத்தில் தலா 8, சண்டிகார் மற்றும் புதுச்சேரில் தலா 6, திரிபுரா, லடாக் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரையும் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது.

24 மணி நேரத்தில் 2,003 பேர் பலியானதாக குறிப்பிட்டு இருந்தாலும், இந்த திடீர் உயர்வுக்கு காரணம் என்ன? என்பதையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் முதல் மற்றும் 3-வது இடங்களில் உள்ள மராட்டியம் மற்றும் டெல்லியில் கடந்த நாட்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் பலருடைய விவரங்கள் சில காரணங்களால் மாநில புள்ளிவிவர பட்டியலில் சேர்க்கப்படாமல் விடுபட்டு இருந்ததாகவும், அதனை நேற்றைய பாதிப்புடன் சேர்த்ததால்தான் மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் உயிரிழப்பு எண்ணிக்கை இவ்வளவு அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நோய்த்தொற்று ஆளான 10,641 பேருடன் சேர்த்து நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்து 65 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,86,935 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 1,55,227 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் 8 மாநிலங்களில் கொரோனா 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 445 ஆக உள்ளது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் புதிதாக பேருக்கு 2,174 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 50 ஆயிரத்து 193 ஆக அதிகரித்து இருக்கிறது. டெல்லியில் 44,688 பேர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். குஜராத்தில் 24,577 பேரும், உத்தரபிரதேசத்தில் 14,091 பேரும், ராஜஸ்தானில் 13,213 பேரும், மேற்குவங்காளத்தில் 11,909 பேரும், மத்தியபிரதேசத்தில் 11,083 பேரும் இந்த ஆட்கொல்லி வைரசினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் 7,530 பேரும், ஆந்திராவில் 6,841 பேரும், கேரளாவில் 2,622 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில் 5,406 பேருக்கும், புதுச்சேரியில் 216 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது

கருத்துகள் இல்லை: