ஞாயிறு, 5 நவம்பர், 2017

ப்ளூ வேல்: தற்கொலைக்காக சென்னை வந்த இளைஞர்!

ப்ளூ வேல்: தற்கொலைக்காக சென்னை வந்த இளைஞர்!minnambalam : ப்ளூ வேல் கேம் விளையாடி தற்கொலை செய்துகொள்ள சென்னை வந்த 17 வயது இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளைஞர் ப்ளூ வேல் விளையாட்டை விளையாடிவந்துள்ளார். அவர் பி.ஏ., முதலாமாண்டு படித்துவந்துள்ளார். அந்த விளையாட்டின் அட்மின் அவரை ரயிலில் சென்னைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி, அந்த இளைஞர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சென்னைக்கு புறப்பட்டுள்ளார். இது குறித்து டெல்லி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாருக்கு இளைஞரின் புகைப்படத்தை அனுப்பித் தகவல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, வடகிழக்கில் இருந்து வரும் அனைத்து ரயில்களையும் சோதனையிட ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகன் தலைமையில் ஒரு சிறப்புக் குழு உருவாக்கப்பட்டது.
சனிக்கிழமை (நவம்பர் 4) மாலை, சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆய்வாளர் மோகன் மற்றும் அவரது குழு சோதனையிட்டதில்,அந்த இளைஞரைக் கண்டுபிடித்தனர். போலீசாரைப் பார்த்தவுடன் இளைஞர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். பின்னர், அவர் ப்ளூ வேல் விளையாட்டின் அட்மின் தன்னை சென்னைக்குச் செல்ல சொன்னதாகத் தெரிவித்தார்.
அவரின் கையில் வைத்திருந்த நோட்டைப் பார்க்கும்போது, தற்கொலை செய்துகொள்வதற்கான பல்வேறு வழிகள் எழுதப்பட்டிருந்தன. தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொள்ளுதல், ரயிலில் விழுதல், தன்னை தானே கத்தியால் குத்திக்கொள்ளுதல் போன்ற வழிமுறைகள் எழுதப்பட்டிருந்தன. இளைஞர் ஒருவிதமான குழப்ப மனநிலையில் இருப்பதாகத் தோன்றியது.
இதையடுத்து, போலீசார் அவரின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்து சென்னைக்கு வரவழைத்தனர். இளைஞருக்குக் குழந்தை நலன் குழு கவுன்சிலிங் கொடுத்த பிறகு, பெற்றோருடன் செல்ல அனுமதிக்கப்படுவார் என ஆய்வாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: