ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

800க்கும் மேற்பட்டோர் கைது!.. தி.மு.க.,வினர் 30 இடங்களில் சாலை மறியல்


சட்டசபையில் ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து கடலுார் மாவட்டத்தில் தி.மு.க.,வினர் 30 இடங்களில் நடத்திய சாலை மறியலில் 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.தற்போது தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட இடைப்பாடி பழனிச்சாமி, தனது பலத்தை நிரூபிக்க சட்டசபையில் நேற்று ஒட்டெடுப்பு நடத்தப்பட்டது. மறைமுக ஓட்டெடுப்பு நடத்த தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் நடந்த அமளியில் தி.மு.க., எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டார்.
ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்தும், ரகசிய ஓட்டெடுப்பிற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர் தனபாலை கண்டித்தும் தி.மு.க., ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர்.கடலுார்: கடலுாரில் தி.மு.க., அலுவலகம் அருகே நகர செயலர் ராஜா தலைமையில் குணசேகர், சுந்தர், தமிழரசன், நடராஜன் உட்பட பலர் பாரதிசாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு, கடைகள் அடைக்கப்பட்டன.

அரை மணி நேரம் நடந்த மறியலுக்கு பின்னர் போலீசார், அவர்களை கைது செய்தனர். கண்ணாடி உடைப்பு: கடலுாரில் இருந்து பண்ருட்டி சென்ற அரசு பஸ்சை, அரசு மருத்துவமனை அருகே கல்வீசி தாக்கியதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பண்ருட்டி: நான்கு முனை சந்திப்பில் நகர செயலர் ராஜேந்திரன் தலைமையில் மறியலும்; எல்.என்.புரம் பாரதி நகரில் ஊராட்சி பிரதிநிதி செல்வம் தலைமையில் சபாநாயகர் தனபால் உருவ பொம்மையை எரித்தும், வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அண்ணாகிராத்தில் ஒன்றிய செயலர் ஆறுமுகம், பனிக்கன்குப்பம் வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தனபதி தலைமையிலும் மறியல் செய்தனர்.நடுவீரப்பட்டு: பஸ் நிறுத்தம் அருகே ஊராட்சி செயலர் ஞானசேகரன், கிளைச் செயலர் பன்னீர்செல்வம், சம்மந்தம், மோட்டார் தொழிலாளர் சங்க செயலர் ராமச்சந்திரன், குருராஜ், மாசிலாமணி உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் மறியல் செய்தனர்.கிள்ளை: சி.முட்லுார் புறவழிச்சாலையில் புவனகிரி ஒன்றிய செயலர் டாக்டர் மனோகர் தலைமையில், சி.முட்லுார் கிளைச் செயலர் தவப்புத்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் லட்சுமணன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் - கடலுார் புறவழிச்சாலையில் மறியல் செய்தனர்.

பரங்கிப்பேட்டை: பு.முட்லுாரில் மறியல் செய்த, ஒன்றிய செயலர் முத்துபெருமாள் தலைமையில் முன்னாள் பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் உட்பட 60க்கும் மேற்பட்டோரும்; புவனகிரியில் ஒன்றிய செயலர் மதியழகன், நகர செயலர் கந்தன் தலைமையிலும் மறியல் செய்தனர்.புவனகிரி: முன்னாள் ஒன்றிய செயலர் ஜெயராமன் தலைமையில் சேத்தியாத்தோப்பு நகர செயலர் பழனி மனோகரன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ராஜிவ்காந்தி சிலை அருகே மறியல் செய்தனர். திட்டக்குடி: நகர செயலர் பரமகுரு தலைமையில் மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலர் அமிர்தலிங்கம், நிர்வாகிகள் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

ராமநத்தத்தில் மாவட்ட பிரதிநிதி சேகர் தலைமையில் மறியல் நடந்தது.வடலுார்: நான்கு முனை சந்திப்பில் பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், குறிஞ்சிப்பாடி நகர செயலர் செங்கல்வராயன், தலைவர் ராமர், வடலுார் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமச்சந்திரன் உட்பட பலர் மறியலில் ஈடுபட்டனர். வடலுார், குறிஞ்சிப்பாடில் கடைகள் அடைக்கப்பட்டன.விருத்தாசலம்: கடைவீதியில் தி.மு.க., நகர செயலர் தண்டபாணி தலைமையிலும்; பாலக்கரையில் முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் தலைமையிலும் மறியலில் ஈடுபட்டனர்.

வேப்பூர்: தி.மு.க., மேற்கு மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி தலைமையில் வேப்பூர் கூட்டுரோட்டில், மறியலில் ஈடுபட்டனர். சிறுபாக்கம்: அடரியில், மங்களூர் முன்னாள் ஒன்றிய சேர்மன் சின்னசாமி தலைமையில் கடலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். மந்தாரக்குப்பம்: மாவட்ட துணைச் செயலர் ஞானமுத்து, ஒன்றிய செயலர் திருமாவளவன், நகர செயலர் சதாசிவம், துணைச் செயலர் நமச்சிவாயம் உட்பட பலர் பஸ் நிலையம் முன் சாலை மறியல் செய்தனர்.

பெண்ணாடம்: நல்லுார் தெற்கு ஒன்றிய பொருப்பாளர் கோதண்டபாணி தலைமையில் பழைய பஸ் நிலையத்தில் சாலை மறியல் நடந்தது. கருவேப்பிலங்குறிச்சியில், ஒன்றிய செயலர் வேல்முருகன் தலைமையில் மறியல் நடந்தது.ஸ்ரீமுஷ்ணம்: தி.மு.க., ஒன்றிய செயலர் தங்க ஆனந்தன் தலைமையில், கடைவீதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், கடைகள் அடைக்கப்பட்டன.

கம்மாபுரம்: சார் பதிவாளர் அலுவலகம் முன் சபாநாயகர் தனபால் உருவ பொம்மையை எரித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது. நெய்வேலி: ஆர்ச்கேட் எதிரில் சொரத்துார் ஊராட்சி செயலர் சபா பாலமுருகன் தலைமையிலான நெய்வேலி நகர தி.மு.க.,செயலர் பக்கிசாமி உட்பட 200க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் நடந்த மறியலில் 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப் பட் டனர். -நமது நிருபர்-   தினமலர்

கருத்துகள் இல்லை: