செவ்வாய், 26 ஏப்ரல், 2016

நிச்சயம் முதல்வராக வருவேன்: சொல்கிறார் விஜயகாந்த்

ஆண்டிபட்டி: “முதல்வர் ஜெ.,- - கருணாநிதி என இருவருமே எனக்கு விரோதிகள் தான்,”என, ஆண்டிபட்டியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். ஆண்டிபட்டியில் தே.மு.தி.க., வேட்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி(ஆண்டிபட்டி), வீரபத்திரன்(போடி), த.மா.கா., ராமச்சந்திரன்(கம்பம்) ஆகியோரை ஆதரித்து அவர் பேசியதாவது: தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தல் என்று கூறுகின்றனர். இதில் தர்மம் என்பது நாங்கள்தான். தமிழகத்தில் தி.மு.க.,- அ.தி.மு.க., இருவரும் மாறி மாறி ஏன் கொள்ளை அடிக்க வேண்டும். புதிய கட்சி ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது. மக்கள் நினைப்பதை நான் செய்துமுடிப்பேன். நீங்கள்தான் என்னை முதல்வர் என்று சொல்கிறீர்கள். முதல்வராக வருவாரா, வரமாட்டாரா என்று சந்தேகப்படுகிறார்கள். நிச்சயம் முதல்வராக வருவேன்.

முல்லை பெரியாறு அணைக்காக நானும் போராட்டம் நடத்தினேன். அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றமே முடிவு செய்தது. இதில் அரசியல் கட்சிகள் நான் நீ என்று ஏன் போட்டி போட வேண்டும். கடந்த தேர்தலில் முதல்வர் ஜெ., தமிழகத்தை மின்மிகைமாநிலம் ஆக்குவேன் என்றார். ஆனால் ஆக்கவில்லை. அனைத்து இடத்திலும் லஞ்சம் அதிகரித்து விட்டது. ஸ்டாலினிடம் விரும்பத்தகாத குணங்களே அதிகம் உள்ளது. மதுரை சென்று பேச வேண்டும். இங்கிருந்து செல்ல ஒன்றரை மணி நேரமாவது ஆகும்.அங்கு 10 நிமிடமாவது பேச வேண்டும். 10 மணிக்கு மேல் பேசினால் நீதிமன்றத்திற்கு< இழுத்து விடுவர். பின்னர் கைது, பிடிவாரன்ட் போடுவர். ஏற்கனவே தி.மு.க.,- அ.தி.மு.க.,வினரால் பல இன்னல்களை அனுபவித்துள்ளேன். ஜெ.,- கருணாநிதி என இருவருமே எனக்கு விரோதிகள்தான். தே.மு.தி.க.,த.மா.கா., மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள், என்றார்.

கருத்துகள் இல்லை: