புதன், 27 ஏப்ரல், 2016

கும்பகோணம் வேட்பாளரை கூப்பிய கையுடன் குப்புற கவிழ்த்த அதிமுக தலைமை


தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்..’ விரக்தியான தருணங்களில், தங்களின் சோகத்தை ஒரு பொருட்டாகவே கருதாமல், நம்மைச் சுற்றியிருப்போர் நடந்து கொள்ளும் போது, இந்தப் பழமொழியை உணர முடியும். ‘அந்த தொகுதியில் அந்த வேட்பாளரை மாற்றியது அந்த கட்சி; இந்த தொகுதியில் இந்த வேட்பாளரை மாற்றியிருக்கிறது இந்த கட்சி..’ என்பதையெல்லாம் வெறும் செய்தியாக படித்து விட்டு பக்கங்களைப் புரட்டுவோம். அதே நேரத்தில்,  வேட்பாளர் மாற்றத்தால் நொந்து போய் இருக்கும் அந்த முன்னாள் வேட்பாளரின் மன வலியை ஒரு விஷயமாகவே நாம் எடுத்துக் கொள்ள மாட்டோம்.  அவருடைய சோகத்தை   ‘அட,  இதெல்லாம் அந்த வேட்பாளரின் கவலை.. நமக்கென்ன?  அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..’ என்று காமெடியாகவும்  பார்த்துப் பழகி விட்டோம். ‘வேட்பாளர் மாற்றம்! அதிர்ச்சியில் இருவர் மரணம்! ஒருவர் உயிருக்கு போராட்டம்!’ என்று 10 நாட்களுக்கு முன் படித்ததெல்லாம் பழைய செய்தி ஆகி விடும். மறந்தும் போய்விடும்.

 இந்த முறை எம்.எல்.ஏ. ஆகிவிடலாம்’ என்ற நம்பிக்கையோடு, மக்களை நேரில் சந்தித்து, பூரித்த முகமும் பெருமிதமுமாக, கை கூப்பி ஒரு வேட்பாளர் வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கும் போது “அண்ணே.. மனச திடப்படுத்திக்கங்க..   இப்ப நீங்க வேட்பாளர் இல்ல.. உங்கள தூக்கிட்டாங்க.. உங்களுக்கு பதில் இன்னாரை வேட்பாளரா அறிவிச்சிருச்சு கட்சி.. இப்ப எனக்கு  போன்ல வந்த தகவலை  உங்ககிட்ட சொல்லுறேன்..” என்று ஒருவர் சொன்னால், அந்த வேட்பாளரின் மனது என்ன பாடுபட்டிருக்கும்?  பிரச்சார ஸ்பாட்டில் அவரது ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? அது போன்ற ஒரு வேட்பாளரின் பரிதவிப்பை  இந்த காணொளியில் காணலாம்.

அந்த வேட்பாளர் வேறு யாருமல்ல.. கும்பகோணம் தொகுதியின் எக்ஸ். எம்.எல்.ஏ.வும் அதிமுக நகர செயலாளருமான ராம. ராமநாதன் தான். ஸ்ரீபெட்டி காளியம்மன் கோவில் அருகே, ஜீப்பில் சென்றபடி வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார் அவர். “போடுங்கம்மா ஓட்டு.. ரெட்ட இலையை பார்த்து.. குடந்தை நகரை மாவட்ட தலைநகராக்குவார் ராமநாதன்.. இவர் படித்தவர்.. பண்பாளர்.. வழக்கறிஞர்.. இத்தனைக்கும் மேலாக புரட்சித் தலைவி அம்மாவின் விசுவாசம் மிக்க தொண்டன்..”  என்று அவருக்காக அலறியது  ஜீப்பில் கட்டப்பட்டிருந்த ஒலி பெருக்கி. ராமநாதனும் பூரிப்பும் புன்னகையுமாக வாக்காளர்களை வணங்கி வாக்கு கேட்டபடி வந்தார். அப்போதுதான், ராமநாதனுக்குப் பதிலாக,  கும்பகோணம் தொகுதியின் அதிமுக வேட்பாளராக கும்பகோணம் நகராட்சி தலைவர் ரத்னா சேகர் அறிவிக்கப்பட்ட விபரம் அவருக்கு சொல்லப்படுகிறது. ‘இனி நான் என்ன செய்வேன்?’ என்ற பரிதவிப்புடன், அதுவரை கூப்பியிருந்த கைகளைக் கூட விலக்க மறந்து,   ஜீப்பிலிருந்து இறங்கி திசை தெரியாமல்  ஓடுகிறார்.

இது போன்ற நிலைமை யாருக்கும் வரக் கூடாது. எந்த ஒரு வேட்பாளரையும் நன்கு ஆலோசித்த பிறகு அறிவித்திருந்தால்,  மாற்றத்துக்கு அவசியம் இல்லாமல் போயிருக்குமே! புகார்களுக்கும் போராட்டத்துக்கும் மதிப்பளித்து, இஷ்டத்துக்கும் வேட்பாளர்களை  கட்சிகள் மாற்றி கொண்டிருக்கின்றன.  வேட்பாளர் தேர்வில் முதலில் தடுமாற்றம் அடைந்தது யார் குற்றம்? இதற்காக, வேட்பாளர் மாற்றத்தினால் பாதிக்கப்பட்டவர் அந்தக் கட்சியின் தலைமையை  தண்டித்து விட முடியுமா? தன்னைப் போலவே,  கட்சித் தலைமையும் சோகத்துக்கு ஆளாக வேண்டும் என்ற மனக்குமுறல் அவரையும் அறியாமல் ஏற்படும் அல்லவா? அந்த முன்னாள் வேட்பாளரின் ஆற்றாமையும் ஆதங்கமும் கட்சியை பாதிக்குமா? இல்லையா? வேட்பாளர் தேர்வில் முதலில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட கட்சித் தலைமை தவறை உணரும் காலம் வருமா? வராதா?

இது போன்ற  கேள்விகளுக்கு மட்டுமல்ல. அரசியல் கட்சிகளால் தங்களின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு, ஓராயிரம் கேள்விகளை மனதுக்குள் புதைத்து பொறுமிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.  இவை அத்தனைக்கும் பதிலோ, தீர்வோ,  வாக்காளர்களின் விரல்களில்தான்  இருக்கிறது. -சி.என்.இராமகிருஷ்ணன் nakkeeran,in

கருத்துகள் இல்லை: