வெள்ளி, 29 ஏப்ரல், 2016

பர்கூர் .ஆட்டோ அரசு பேருந்து மோதல் 6 பேர் பலி

பர்கூர் அருகே ஷேர் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதில் ஏற்பட்ட விபத்துபர்கூர் அருகே ஷேர் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஒரு பெண் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து ஜெகதேவி நோக்கி நேற்று இரவு ஷேர்ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை, ஜெகதேவியைச் சேர்ந்த ஓட்டுநர் பிரகாஷ்(50) ஓட்டிச் சென்றார். ஆட்டோவில் 11 பயணிகள் இருந்தனர்.
ஜெகதேவியிலிருந்து பர்கூர் நோக்கி அரசு நகரப் பேருந்து தடம் எண் 15 சென்று கொண்டிருந்தது. அப்போது, ஜி.நாகமங்கலம் அடுத்த அக்ரஹாரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு வளைவில், ஆட்டோவும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், ஆட்டோவில் பயணம் செய்த ஜெகதேவியைச் சேர்ந்த ராணி(50), கார்த்திக், மாடரஅள்ளியைச் சேர்ந்த சகாயராஜ்(45) மற்றும் பெயர் விலாசம் தெரியாத 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், ஆட்டோவில் இடிபாடுகளுக்கு சிக்கியிருந்த ஜெகதேவியை சேர்ந்த காசி(65), காளியப்பன்(60), குட்டியப்பா(40), கண்ணம்பள்ளி ரேணுகா(32), தென்கரைக்கோட்டையை சேர்ந்த அப்துல்கயுப்(18), இவரது தம்பி மகபூப்பாஷா(16) ஆகிய 6 பேரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கும், பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், தருமபுரியில் இருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்துல்கயுப் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி திருநாவுக்கரசு, டிஎஸ்பி ஈஸ்வரமூர்த்தி, பர்கூர் இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். இதே போல் விபத்தில் காயமடைந்தவர்களை, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் முகமதுஅஸ்லாம், டிஎஸ்பி கண்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதுகுறித்து பர்கூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் ஜெகதேவி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஷேர்ஆட்டோக்கள் இயக்குவதற்கு அனுமதி இல்லை. இருப்பினும் எவ்வித அனுமதி பெறாமல் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகிறது. குறிப்பாக, ஷேர் ஆட்டோக்களில் 5 பேருக்கு மேல் ஏற்றக்கூடாது. ஆனால், பெரும்பாலான ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட அளவினை காட்டிலும், கூடுதல் வருமானத்திற்காக அதிக ஆட்கள் ஏற்றிச் செல்கின்றனர். இதனை போக்குவரத்து அலுவலர்களும், காவல்துறையும் கண்டு கொள்வதில்லை. விபத்து நிகழும் சமயங்களில் மட்டும் கணக்கிற்காக ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு செய்தவாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: