ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

ஜெயலலிதாவின் 15 ஆண்டுகள்.....நல்லா யோசிச்சு பாருங்க....போதை தெளியும்.

முதல் சறுக்கல்... மூன்றும் சறுக்கல்... 15 ஆண்டுகள் பதறவைத்த ஜெ.!ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான் காலம் மூன்று முறை வழங்கிய கொடைகளையும் உடைத்துப் போட்டுவிட்டார் ஜெயலலிதா! 1991-ம் ஆண்டு, முதல் வாய்ப்பாக வாய்த்தது முதலமைச்சர் நாற்காலி. அதிகாரத்துக்கு முதல்முறை வருபவர்களுக்கே இருக்கும் இயல்பான குணத்தால் அதை அனுபவித்தாரே தவிர, சாதனைகள் செய்யவில்லை. எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டமன்ற மகுடத்தை, அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்தார்கள். சட்ட மன்றத்துக்குள் தோழி சசிகலாவை அழைத்துச் சென்றதில் இருந்து சரிவு தொடங்கியது. அந்த மன்றத்துக்குள் சபாநாயகர் ஆசனம் என்பது முதலமைச்சருக்கு எல்லாம் மூத்தது. அதில் தானே உட்கார்ந்து, தன் அருகில் சசிகலாவை உட்காரவைத்து, சபையின் நாயகனையே தனது காலில் விழவைத்து, முதல் கோணல் முற்றிலும் கோணலாகத் தொடங்கிய ஆட்சி அது.


எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, இவரே எம்.ஜி.ஆராகப் பார்க்கப்பட்டார். இரட்டை இலை, மாயாஜால மந்திரக் கம்பளமாக மக்கள் மனதை மாற்றிவைத்திருந்தது. ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டு சிதைத்தது அனுதாப வாக்குகளை அள்ளிக்கொடுத்தது. இந்த மூன்றின் சக்தியால்தான், தாம் சக்தி படைத்தோம் என்ற புரிதல் இல்லாமல் மக்களாட்சியை மறந்து `ஜெ. ஆட்சி' நடத்திய காலம்தான் 1991-96 காலகட்டம்.

திரும்பிய பக்கம் எல்லாம் ஜெயலலிதாவின் வானுயர கட்அவுட்டுகள். விமான பைலட்டு களுக்கு சென்னையைக் கண்டுபிடிக்க எந்த ரேடாரும் தேவைப்படவில்லை. போயஸ் கார்டனில் இருந்து கோட்டைக்குக் கிளம்புகிறார் என்றால், முக்கால் மணி நேரத்துக்கு முன்னரே வாகனங்களை நிறுத்தி, ஓட்டுபோட்ட மக்களை வெயிலில் வறுத்தெடுத்தார்கள். மனிதத் தலைகள், எல்லா இடங்களிலும் காத்திருந்தன; காலில் விழுந்தன; கன்னத்தில் போட்டுக்கொண்டன. இவரே தன்னை அகிலாண்டேஸ்வரியாகவும் கன்னிமேரியாகவும் நினைத்துக்கொண்டார். அவர் நினைப்பதையே சுவரொட்டிகளாக ஒட்டினார்கள்.

ஜெயலலிதாவைப் பார்க்க முடியாது. அவர் என்ன நினைக்கிறார் என்பதை சசிகலாவின் உறவுகளே பொழிப்புரை வழங்கினார்கள். அவர் ஆட்டுவிக்கும் ஆட்டங்களுக்கு மந்திரிகள் ஆடினார்கள். தலை இருக்க வால் ஆடக் கூடாது. ஆனால் இங்கே தலை, தலைமறைவாக இருக்க... எல்லா வால்களும் ஆடின. அரசு கஜானாவில் இருந்து எடுத்து மக்களுக்கு நன்மைசெய்வது என்பது மாறி, அரசு கஜானாவைத் தன்வசப் படுத்துவது, கஜானாவுக்கு வரவேண்டியதை தன் பக்கம் திருப்புவது என்றானது. செத்த பிணத்தை எரிக்கும் வசதிக்கான சுடுகாட்டு மேற்கூரை போடுவதில் தொடங்கி, பள்ளி மாணவர்களுக்கு செருப்பு வழங்குவது வரை... எல்லாவற்றிலும் ஊழல், ஊழல், ஊழலோ ஊழல்!

அராஜகம், சர்வசாதாரணம். கவர்னர் சென்னாரெட்டியே திண்டிவனத்தில் திணறிப் போனார். திருச்சி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கப்பட்டார்.

டி.என்.சேஷனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வரவும் முடியவில்லை; தங்கியிருந்த விடுதிக்குள் போகவும் முடியவில்லை. வழக்குரைஞர் சண்முகசுந்தரம் வெட்டப்பட்டார். வழக்குரைஞர் விஜயன் மீது தாக்குதல். முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா எதற்காகவோ தாக்கப்பட்டார். சந்திரலேகா மீது ஆசிட் வீசியது அராஜகத்தின் உச்சம். சுப்பிரமணியன் சுவாமிக்கு நடந்தது அசிங்கத்தின் உச்சம். தமிழ்நாட்டு அரசியலில் மாறாத வடுக்களாக இவை மாறின.
சசிகலாவின் அக்கா மகன் வி.என்.சுதாகரனை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்து, கோடிக்கணக்கான ரூபாய் செலவில் இந்தியாவே பிரமிக்கத்தக்க திருமணத்தை நடத்தினார். இன்று அது குறித்த உச்ச நீதிமன்ற விசாரணையும் இந்தியாவே பிரமிக்கத்தக்க வகையில் நடந்துகொண்டிருக்கிறது.

ஊழலும் அராஜகமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளாகக் கொழுகொழுவென வளர்ந்தன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் எதிர்க்கட்சிகளே இல்லாத சபையை அமைத்த ஜெயலலிதா,
1996-ம் ஆண்டு தேர்தலில், தானே இல்லாத சபை அமையவும் காரணம் ஆனார். 234-ல் 4 இடங்களில் மட்டுமே அ.தி.மு.க வென்றது. ஜெயலலிதாவே தோற்றுப்போனார். 1991-ம் ஆண்டில் கிடைத்த மாபெரும் வெற்றிக்கு இவர் காரணம் அல்ல; ஆனால், 1996-ம் ஆண்டில் அடைந்த மாபெரும் தோல்விக்கு இவர் மட்டுமே காரணம்.

வழக்கம்போல் சசிகலா மீது பழியைப்போட்டு, அவரைத் தள்ளிவைத்தார் ஜெயலலிதா. `நான் நம்பியவர்கள் எனக்குத் துரோகம் செய்து விட்டார்கள்' என்று சொல்லிக்கொண்டார். தான் மாறிவிட்டதாகச் சொன்னார். சுவாமியின் வீட்டுக்கே போனார். வைகோவின் அலுவலகத் துக்குப் போனார். பாரதிய ஜனதாவுடன் கைகோத்தார். இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் (1998, 1999) ஓரளவு வெற்றி கிடைத்தது. 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எல்லா கட்சிகளையும் சரிசமமாக மதித்து தனது கூட்டணிக்குள் சேர்த்துக்கொண்டதன் மூலமாக வெற்றியைத் தொட்டார். இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் மீதும் இவரது சகாக்கள் மீதும் 40-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் பாய்ச்சப்பட்டு, மூன்று தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஜெயலலிதாவே கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் 28 நாட்கள் வைக்கப்பட்டார்.

இந்த (1996-2001) ஐந்து ஆண்டுகால அவஸ்தை, ஜெயலலிதாவின் மனதை மாற்றிப் புதுப்பித் திருக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். இல்லை. அந்த அவஸ்தைக்குப் பழிவாங்கவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார். பாலம் கட்டுவதில் ஊழல் நடந்ததாகச் சொல்லி, நள்ளிரவில் கருணாநிதியின் கழுத்தைப் பிடித்துத் தூக்கிய காட்சி... அடுத்து ஜெயலலிதா என்னென்ன செய்யப்போகிறாரோ என்ற அச்சத்தை விதைத்தது. தி.மு.க ஊர்வலத்தில் போலீஸ்காரர்களை முன்னே நிறுத்தி, ரௌடிகளை பின்னே நிறுத்தி நடத்திய தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உள்பட பலரது மண்டைகள் உடைந்தன. இவர்கள் எதையும் செய்யக்கூடியவர்கள் என்ற பீதி கிளம்பியது.

போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களை பேசிச் சமாளிக்க மனம் இல்லாமல், இரண்டு லட்சம் பேரை டிஸ்மிஸ் செய்து... டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களுக்குப் பதிலாக புதிய ஆட்களை வேலைக்கு எடுத்து... `சர்க்கஸ் ரிங் மாஸ்டரைப்'போல சாட்டைகொண்டு அடித்து... (இது ஜெயலலிதாவின் வார்த்தைகள் - 9.5.2002 சட்டமன்றத்தில் பேசியது!) ஆடித் தீர்த்தார். லட்சக்கணக்கானவர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்ததன் மூலமாக தன்னை, தன்னால்கூட கன்ட்ரோல் செய்ய முடியாது என்பதைக் காட்டினார்.
விடுதலைப்புலிகளின் தீவிர எதிர்ப்பாளராக மாறி, வைகோ, நெடுமாறன், சுப.வீரபாண்டியன், சாகுல் ஹமீது, தாயப்பன் போன்றோரை `பொடா' சட்டத்தில் கைதுசெய்து பல மாதங்கள் சிறையில் அடைத்தார். தான் தைரியமான பெண் எனக் காட்டிக்கொள்ள தனது கையையே கீறிக்கொள்ளத்தான் இது பயன்பட்டது. இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவந்தார். `2,000 ரூபாய் கொடுத்து மதமாற்றம் செய்கிறார்கள்' எனக் கொச்சைப்படுத்தினார். பல்லாயிரக்கணக்கான சிறுதெய்வங்களுக்கு ஆடு, கோழி பலியிட்டு வணங்குவது பல நூற்றாண்டு காலமாக வழக்கத்தில் இருப்பது. ஆடு, கோழி பலியிடக் கூடாது என்று தடை செய்வதன் மூலமாக ஒற்றைப் பெருந்தெய்வத்தை நோக்கி மக்களை வதைக்கும் காரியத்தைச் செய்தார். அந்த ஒற்றைப் பெருந்தெய்வமாக தன்னையே சித்திரித்துக்கொள்ளும் தன்முனைப்பே தூக்கலாகத் தெரிந்தது.

`ராஜீவ் காந்தியைக் கொன்ற விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுடன் சோனியா கூட்டணி வைத்துள்ளார். அவர் இத்தாலிக்காரர் என்பதால், இந்தியப் பற்று இருக்காது. அதை எதிர்பார்க்க முடியாது. ஆனால், பதிபக்தியாவது இருக்க வேண்டாமா?' (13.3.2004) என்று அதிதீவிர விடுதலைப்புலி எதிர்ப்பாளராக தன்னைக் காட்டிக்கொண்ட ஜெயலலிதா, புலித்தோழன் வைகோவை இரண்டே ஆண்டுகளில் தனது கூட்டணிக்குள் சேர்த்துக்கொண்டார். அந்தத் தேர்தலில் (2006) தோல்வி அடைந்தார். தனக்கு இனி எதிர்காலம் இல்லை என்று சட்ட மன்றத்துக்கே வராமல் முடங்கிக்கிடந்தார். கறுப்பு எம்.ஜி.ஆர் என்று கிளம்பிய விஜயகாந்த், அ.தி.மு.க-வின் வாக்குவங்கியை மெள்ள அறுவடை செய்யவிருக்கிறார் என்பது தெரிந்ததும் அவர் மீது பாயத் தொடங்கினார் ஜெயலலிதா.

`இரவு-பகல் என்ற வித்தியாசம்கூட இன்றி, தினந்தோறும் குடிபோதையில் மிதந்து வருபவர்களுக்கும், மாண்புமிக்க வரலாற்றுப் பெருமை மிகுந்த சட்டமன்றப் பேரவைக் குள்ளேயே மது அருந்திவிட்டு வெட்கம் இல்லாமல் வருகிற குடிகாரர்களுக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் புனித திருநாமத்தை உச்சரிக்கக்கூட தகுதி இல்லை. நான் யாரைப் பற்றி சொல்கிறேன் என்று சம்பந்தப் பட்டவர்களுக்குத் தெரியும்' (நமது எம்.ஜி.ஆர் 24.10.2006) என்று ஜெயலலிதா சொல்ல... அதற்கு விஜயகாந்த் வேறு மாதிரியான பதிலைச் சொன்னார். அப்படிப் பட்ட விஜயகாந்துக்கு 41 இடங்களைக் கொடுத்து 2011-ம் ஆண்டு தேர்தலில் கூட்டுவைத்து வென்றார் ஜெயலலிதா. இது (2011) அவருக்கு மூன்றாவதாக வந்த வாய்ப்பு.

இரண்டு முறை பெரும் விபத்தைச் சந்தித்தவர்கள், அப்புறம் மிக மிக எச்சரிக்கையாக இருப்பார்கள். உண்மைதான், ரொம்பவே எச்சரிக்கையாகவே இருந்துவிட்டார் ஜெயலலிதா. வாகனத்தை ஆன் செய்துவிட்டு ஸ்டீயரிங் பிடித்தபடி அப்படியே உட்கார்ந்து விட்டார். முதல் ஓர் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டங்களில் கழிந்தது. அடுத்த ஓர் ஆண்டு பெங்களூரூ விசாரணையில் தொடர்ந்தது. சிறை, மேல்முறையீடு, யாகம், கோயில், பூஜை-புனஸ்காரங்களில் அடுத்த ஓர் ஆண்டு முடிந்தது. உடல்நலம் குறைந்தது. அதில் மனநலமும் சேர்ந்தது. கடந்த மூன்று மாதங்களில் அவசர அவசரமாக தினமும் ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்துவிட்டு... இதோ ஹெலிகாப்டரில் ஏறி... நான்காவது வாய்ப்புக்காகப் பறக்க ஆரம்பித்து விட்டார். செயல்படலாம் என்று நினைத்த நேரத்தில் உடலும் மனமும் ஒத்துழைக்கவில்லை. ஜெயலலிதாவுக்குப் புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமானால், `நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது'.
தி.மு.க வாகனத்துக்கு 100 ஸ்டீயரிங்குகள். ஆளாளுக்கு வண்டியைத் திருப்பி கருணாநிதியையே கசக்கிப்பிழிவார்கள். ஆனால், ஜெயலலிதாவுக்கு அந்த அவஸ்தை இல்லை. அவரால், அ.தி.மு.க-வை மிகத் திறம்பட செலுத்தியிருக்க முடியும். ஆனால், மூன்று முறையும் கோட்டைவிட்டுவிட்டார். கோபுரத்தைப் பார்த்ததும் கன்னத்தில் போட்டுக்கொள்வது மாதிரி இரட்டை இலையைப் பார்த்ததும் வாக்கு குத்தத் தயாரான லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்துக்கு நியாயம் செய்யாமல், ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்கு சாதகமானதாக கட்சியையும் ஆட்சியையும் கொண்டு செல்லத்தான் அவருக்கு வாக்குகள் வாரி இறைக்கப்பட்டனவா?

`மக்களால் நான்; மக்களுக்காக நான்' என்கிறார் ஜெயலலிதா. `மக்களால் நான்' என்பது உண்மை. `மக்களுக்காக நான்' என்பது உண்மையா?விகடன்.com

கருத்துகள் இல்லை: