வியாழன், 24 செப்டம்பர், 2015

விஷ்ணு பிரியாவின் தோழி டி.எஸ்.பி மகேஸ்வரி புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல்: தற்கொலை செய்து கொண்ட தலித் டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின் தோழியும், கீழக்கரை டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி, புதுச்சேரியில் உள்ள, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயரதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் மருத்துவ விடுப்பில் சென்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பி.,யாக இருந்த விஷ்ணுபிரியா, கடந்த18ம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷ்ணு பிரியாவின் தற்கொலை குறித்து, அவரது தோழியும், ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி டி.எஸ்.பி.,யுமான மகேஸ்வரி, காவல் துறை அதிகாரிகள் மீது, சரமாரியாக குற்றஞ்சாட்டினார். மருத்துவமனையில் விஷ்ணு பிரியாவின் உடலைப் பார்த்து கதறி அழுத அவர், காவல்துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டினார். விஷ்ணு பிரியா காவல்துறையை மிகவும் நேசித்தார். அவர் பணம் எதுவும் வாங்காமல் செயல்பட்ட நேர்மையான அதிகாரி. மிகவும் திறமையான அதிகாரியும் ஆவார். தனிப்பட்ட முறையில் எனக்கு அவரை கடந்த 6 ஆண்டுகளாக தெரியும். நானும் அவரும் மிகவும் நெருங்கிய தோழிகள். தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எல்லாம் விஷ்ணு பிரியா கோழை கிடையாது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் என்னிடம்தான் கடைசியாக பேசினார். அவர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு சென்றுவிட்டு வந்து என்னிடம் சுமார் மதியம் 2.48 மணியளவில் பேசினார். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென எஸ்.பி. லைனில் வருவதாக கூறிவிட்டு லைனை விஷ்ணு பிரியா துண்டித்துவிட்டார். அதன்பின் அவரது தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவருக்கு வாழ்க்கையில் எந்தவித பிரச்னையும் இல்லை. போலீஸ் சொல்வதெல்லாம் சுத்த பொய். இதை சொல்வதால் என் வேலைகூட போகலாம். அதனால் எனக்கு பிரச்னை ஏதும் இல்லை. கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவருக்கு எல்லா மட்டத்தில் இருந்தும் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். அவருடைய தற்கொலைக்கு எஸ்.பி., டி.ஐ.ஜி. போன்ற உயரதிகாரிகள்தான் முழுக்க முழுக்க காரணம்.காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், கோகுல்ராஜ் வழக்கில் தேடப்படும் குற்றவாளியான யுவராஜ் தரப்பில் இருந்தும் அவருக்கு அச்சுறுத்தல் இருந்துள்ளது. குறிப்பாக காவல்துறையினர், குற்றவாளிகள் அல்லாத 3 பேர் மீது குண்டாஸ் போட சொல்லி விஷ்ணு பிரியாவை வற்புறுத்தி உள்ளனர். இப்படி செய்ய எனக்கு உடன்பாடு இல்லை என்று அவர் என்னிடமே பலமுறை சொல்லி இருக்கிறார். நானும் ஒரு டி.எஸ்.பி. என்கிற முறையில் இதுபோன்ற அச்சுறுத்தல்களை தினமும் சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன். குறிப்பாக, காவல்துறையில் பெண்களுக்கு இதுமாதிரியான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருகிறது. விஷ்ணு பிரியா எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், 'போலீஸ் வேலையை நான் உயிராக நினைக்கிறேன். ஆனால் அதற்கு நான் தகுதியானவள் இல்லை' என்பதுபோல் எழுதி இருக்கிறார் என்று காவல்துறை சார்பில் சொல்கிறார்கள். ஆனால் அவர் முழுக்க முழுக்க தகுதியானவர்தான். அவரை இந்த நிலைக்கு தள்ளியவர்கள் உயரதிகாரிகள் தான். இது தொடர்பாக முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் என்னைப்போன்ற பெண் காவலர்கள் பயமில்லாமல் பணியாற்ற முடியும். மேலும் இதுபோன்ற உயிரிழப்புக்களை தடுக்கவும் முடியும். இதற்காக என் வேலை போனாலும் பரவாயில்லை' எனவும் கூறினார் மகேஸ்வரி. மகேஸ்வரியின் ஆவேசமான குற்றச்சாட்டு, போலீசார் மத்தியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க இருந்த நிலையில், திடீரென மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார் மகேஸ்வரி. புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவனையில், நேற்று, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மகேஸ்வரிக்கு, அறுவை சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு என்ன பிரச்னை, எதற்காக சிகிச்சை அளிக்கப்படுகிறது என, எந்த விவரத்தையும், மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை

Read more at: tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: