புதன், 23 செப்டம்பர், 2015

நரபலி பழனிசாமியிடம் குழைந்து குழைந்து காவலர்கள்: நீங்க எவ்வளவோ செஞ்சிருக்கீங்க ..சகாயம் குடைச்சல் தாங்க முடியல்ல சார் ...

அய்யா வாங்க... பார்த்து வாங்க!”
பி.ஆர்.பி-யிடம் போலீஸார் காட்டிய கரிசனம்கிரானைட் குவாரியில் நரபலி கொடுத்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு வராமல் தட்டிக்கழித்துவந்த பி.ஆர்.பி. ஒரு வழியாக, கடந்த 17-ம் தேதி அதாவது, விநாயகர் சதுர்த்தி அன்று கீழவளவு காவல் நிலையத்துக்கு வந்தார். அன்றைய தினம், கீழவளவு காவல் நிலையம் தலைகீழாக மாறியிருந்தது. மெயின்ரோடு மறிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. காவல் நிலையம் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவோடு இருந்தது. எல்லாம் பி.ஆர்.பி. விசாரணைக்கு வருகிறார் என்பதால்தான். பகல் 12 மணியளவில், தனது வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் புடைசூழ பி.ஆர்.பி. வந்தார். அங்கு அவருக்கு போலீஸ் அதிகாரிகள் கொடுத்த வரவேற்பையும், மரியாதையையும், கரிசனத்தையும் கண்டு அங்கிருந்த அனைவரும் திகைத்துப்போனார்கள்.
அவருக்காக காத்திருந்த எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார், ‘அய்யா வாங்க... பார்த்து வாங்க... பிரஸ்காரங்க எல்லாம் ஓரமா போங்க...’ என்று பி.ஆர்.பி-யை பவ்யமாக அழைத்துச்சென்றனர். பி.ஆர்.பி-க்காக மின்விசிறிக்குக் கீழே போடப்பட்டிருந்த சொகுசு நாற்காலியில் அவர் அமர்ந்தார். 10 அடிக்கு அப்பால் மேலூர் டி.எஸ்.பி மங்களேஸ்வரன், ஏ.டி.எஸ்.பி மாரியப்பன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அமர்ந்தனர். பி.ஆர்.பி-க்கு நேராக வீடியோ கேமராவை ஆன் செய்துவிட்டு, போலீஸ் வீடியோகிராபர் வெளியேறிவிட்டார்.
பி.ஆர்.பி. மீது என்னதான் அரசு நடவடிக்கை எடுத்தாலும், சகாயம் விசாரணை நடத்திவந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் பி.ஆர்.பி-யிடம் இன்றைக்கும் எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறியமுடிந்தது.
நரபலி தொடர்பாக, சேவற்கொடியோன் என்பவர் கொடுத்த புகாரை அடுத்து, சகாயம் ஐ.ஏ.எஸ்ஸின் உத்தரவின் பேரில் கடந்த 13-ம் தேதி நான்கு மனித சடலத்தின் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டன. அதைக்கண்டு தமிழகமே அதிர்ந்தது. அதைத் தொடர்ந்துதான், பி.ஆர்.பி. மற்றும் அவருடைய ஊழியர்கள் ஜோதிபாசு, பரமசிவம், ஐயப்பன் ஆகியோர் மீது கீழவளவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
விசாரணைக்கு வந்த பி.ஆர்.பி-யிடம் 40 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நரபலி புகார்களை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். அரசு அனுமதியுடன் கிரானைட் நிறுவனத்தை நடத்திவந்த தன் மீது பொய்யான புகார்கள் பதியப்பட்டதாகவும், இப்போது கொலைப்பழியை தன் மீது திணிப்பதாகவும் குமுறியிருக்கிறார். இரவு எட்டு மணிக்கு விசாரணை முடித்து அவரை அனுப்பினார்கள். கேமராமேனிடம் இருந்து மெமரி கார்டை போலீஸார் வாங்கிக்கொண்டனர். தன் உதவியாளர் வாங்கி வந்த மதிய உணவை பி.ஆர்.பி. சாப்பிடவில்லை. தண்ணீர் மட்டும் குடித்தார்.
சில போலீஸ் அதிகாரிகள் பி.ஆர்.பி-யிடம், “சார், தப்பா நினைச்சுக்காதீங்க. எங்களுக்கு வேற வழியில்லை. அதனால்தான் வழக்குப் போட்டோம். எங்களுக்கு எவ்வளவோ செஞ்சிருக்கீங்க. சகாயம் இம்சை தாங்கமுடியலை. ஹைகோர்ட்டும் கவனிச்சுட்டு இருக்கு. அதனாலதான் அன்னைக்கு எவ்வளவோ அவாய்ட் பண்ண முயற்சி செஞ்சோம். நினைச்சபடி எதுவும் செய்ய முடியாமப் போச்சு” என்று வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார்கள்.
பி.ஆர்.பி. விசாரணைக்கு வந்துசென்ற பரபரப்பு அடங்குவதற்குள் மதுரை கலெக்டருக்கும், எஸ்.பி-க்கும் சகாயம் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘ஏற்கெனவே தோண்டப்பட்ட சின்னமலம்பட்டியில் அதே இடத்தில் இன்னும் 10 அடிவரை தோண்டிப் பார்க்க வேண்டும்’’ என்று சொல்லியிருக்கிறார். எப்போதும் சகாயத்தின் கோரிக்கைகளை சாக்குப்போக்கு சொல்லி காலதாமதம்செய்யும் மாவட்ட நிர்வாகம், இதை உடனே ஏற்றுக்கொண்டு மறுநாளே தோண்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. ‘சகாயம் என்ன கேட்டாலும் செய்து கொடுங்கள்’ என்று தலைமைச் செயலகத்திலிருந்து வந்த கட்டளைதான் அதற்குக் காரணமாம்.
 ஏற்கெனவே ஒரு குழந்தையின் எலும்பு உட்பட நான்கு பேரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், 18-ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் தோண்டும் பணி தொடங்கியது. டி.ஆர்.ஓ. செந்தில்குமாரி, மேலூர் தாசில்தார் கிருஷ்ணன், டி.எஸ்.பி. மங்களேஸ்வரன், சகாயம் குழுவின் ஆல்பர்ட், ரிடையர்ட் எஸ்.பி. வேலு, ஆர்.டி.ஓ. ராஜாராம் ஆகியோரும் அங்கேயே முகாமிட்டனர். அன்றைய தினம் நீண்ட நேரத்துக்குப் பின் இரண்டு சடலத்தின் எலும்புகள் கிடைத்தன.
தமிழக அரசு தனக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்தால் குவாரி வழக்கு, நரபலி வழக்கு அனைத்துக்கும் சேர்த்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு கோர்ட்டுக்குச் செல்ல பி.ஆர்.பி. தரப்பு முடிவெடுத்துள்ளதாம். சி.பி.ஐ. விசாரித்தால் தன்னால் பயனடைந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை அம்பலப்படுத்திவிடலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்களாம்.
- செ.சல்மான், கே.சின்னதுரை
படங்கள் : எம்.விஜயகுமார், ஈ.ஜெ.நந்தகுமார் vikatan.com

கருத்துகள் இல்லை: