திங்கள், 27 ஏப்ரல், 2015

அதிமுக தவிர்ந்த தமிழக கட்சிககள் பிரதமரையும் சோனியாவையும் சந்திக்கின்றன!

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், கர்நாடகா அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க, தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் முயற்சியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று இறங்கினார். இதற்காக, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா., தலைவர் வாசன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரை நேற்று ஒரே நாளில் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரின் கோபாலபுரம் இல்லத்தில், நேற்று காலை, 11:00 மணிக்கு விஜயகாந்த் சந்தித்து பேசினார். அப்போது, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினும் உடனிருந்தார்.கருணாநிதியை சந்தித்த பின், சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார் விஜயகாந்த். அங்கு அம்பேத்கர் பிறந்தநாள் விழா பற்றிய, ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அங்கு இருந்த, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நடிகை குஷ்பு ஆகியோரை விஜயகாந்த் சந்தித்து பேசினார்.
இதன்பின், இளங்கோவனும், விஜயகாந்தும் தனியாகவும் பேசினர். பின், தியாகராய நகரில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயம் சென்ற விஜயகாந்த், அங்கு மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார். தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா., அலுவலகத்திற்கு சென்ற அவர், அந்தக் கட்சியின் தலைவர் வாசனை சந்தித்து பேசினார். அவரை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ ஆகியோரையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, அனைத்து தலைவர்களின் சந்திப்புக்கு பின், விஜயகாந்த் அளித்த பேட்டி:எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, அனைத்து தலைவர்களின் சந்திப்புக்குப் பின், விஜயகாந்த் அளித்த பேட்டி:கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடியை சந்திக்க, மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் ஏற்பாடு செய்து தந்து உள்ளார். இன்று மதியம், 12:00 மணிக்கு பார்லிமென்ட் மைய மண்டபத்தில் பிரதமரை சந்திக்க உள்ளேன். அ.தி.மு.க.,வை தவிர, அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து சென்று பிரதமரிடம் வலியுறுத்த திட்டமிட்டுள்ளேன். ஏழை விவசாயிகளின் நலன் தொடர்பாக கருணாநிதியை சந்தித்து பேசினேன். செம்மரம் கடத்தல், நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதா, தமிழக மீனவர்கள் பிரச்னை, குடிநீர் தட்டுப்பாடு பற்றி, கருணாநிதியிடம் விவாதித்தேன். பிரதமர் மோடியை சந்திக்க, தி.மு.க., சார்பில் பிரதிநிதியை அனுப்பி வைக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டேன். அவரும் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார். வாசனும் ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். கட்சி பாகுபாடு பார்க்காமல், பிரதமரை சந்திக்க உள்ளோம். நான் முழு நேர அரசியல்வாதி. சினிமா நடிகர்களை அழைத்து செல்லும் திட்டம் இல்லை. பிரதமரை சந்திக்கும் பிரச்னையை, அரசியலாக்க வேண்டாம். பொது நலமாகப் பார்க்க வேண்டும். தமிழக மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக, அடுத்தடுத்த போராட்டங்கள் நடத்த இருக்கிறோம். இவ்வாறு, விஜயகாந்த் கூறினார்.

இளங்கோவன் கூறியதாவது: முதல்வர் பன்னீர்செல்வம், தன் கடமையில் இருந்து நழுவியதால், அவர் செய்ய வேண்டிய வேலையை, எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் செய்து கொண்டிருக்கிறார். அவரது முயற்சிக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும்.தமிழர்கள் நலனில், அக்கறை உள்ள அனைவரும் ஆதரவு அளிப்பர். இதற்கும் தேர்தல் கூட்டணிக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. தனி ஒரு ஆளாக சென்று பேசுவதை விட, எல்லாரும் ஒன்றுபட்டு, ஒரே குரலில் அழுத்தம் கொடுத்தால் தீர்வு கிடைக்கும்.பிரதமர் மோடியை சந்திக்க, விஜயகாந்துடன் தமிழக காங்., பொருளாளர் நாசே ராமச்சந்திரன் மற்றும் கோபண்ணா ஆகியோர் செல்வர்.இவ்வாறு, இளங்கோவன் கூறினார்.



தேர்தல் நேரத்தில்...:
த.மா.கா., தலைவர் வாசன் கூறியதாவது:காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை என, தமிழக மக்களின் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு, த.மா.கா., தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழக மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில், மத்திய, மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு, நல்ல முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும். கூட்டணிக்காக விஜயகாந்த் என்னை சந்திக்கவில்லை. ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கூட்டணியில் இருக்கின்றன. சில கட்சிகள் தனித்து செயல்படுகின்றன. எனவே, தேர்தல் நேரத்தில் தான், கூட்டணி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். பொதுப்பிரச்னையை அரசியலுக்கு அப்பாற்றப்டடதாக கருத வேண்டும். முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்தித்து காவிரி பிரச்னை குறித்து பேசியுள்ளார். விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசு நியாயமான முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு, வாசன் கூறினார்.



10 ஆண்டுகளுக்கு பின்... :
கடந்த, 2005ல், மதுரையில் மாநாடு நடத்தி, தே.மு.தி.க.,வை, விஜயகாந்த் துவங்கினார். இந்த விழாவிற்கான அழைப்பிதழை, கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று கருணாநிதியிடம் விஜயகாந்த் வழங்கினார். கோயம்பேட்டில் மேம்பாலம் கட்டுவதற்காக, விஜயகாந்தின் திருமண மண்டபத்தை இடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நேரத்தில், விஜயகாந்த் மீண்டும் கருணாநிதியை சந்தித்து, மேம்பால மாற்று திட்டம் குறித்து வலியுறுத்தினார். இச்சம்பவத்திற்கு பின், கருணாநிதியை விஜயகாந்த் நேரடியாக சந்தித்து பேசவில்லை. 'தினத்தந்தி' பத்திரிகையின் அதிபர் மறைவுக்கு, அஞ்சலி செலுத்த சென்றபோது, எதேச்சையாக இருவரும் சந்தித்து வணக்கம் தெரிவித்து கொண்டனர். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின், கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் விஜயகாந்த், நேற்று சந்தித்து பேசியுள்ளார்.



கம்யூ., தலைவர்களுடன் தொலைபேசியில் பேச்சு:
இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் ராமகிருஷ்ணன் ஆகியோரை சந்திக்கவும், விஜயகாந்த் திட்டமிட்டார். அவர்கள் இருவரும், திருப்பூர் மற்றும் வேளாங்கண்ணியில் நடந்த கட்சியின் மாநில நிர்வாகிகள் குழு கூட்டத்திற்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய விஜயகாந்த், பிரதமரை சந்திக்கும் திட்டம் குறித்து விவரித்தார். கட்சி பிரதிநிதிகளை டில்லிக்கு அனுப்பி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடப்பதால், பிரதமரை சந்திக்க வர இயலாது என, விஜயகாந்திடம் மார்க்.கம்யூ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொங்கு ஈஸ்வரன், ம.ம.க., ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம் ஆகியோருடனும் விஜயகாந்த், தொலைபேசியில் பேசியுள்ளார். இவர்கள், தங்கள் கட்சி நிர்வாகிகளை டில்லிக்கு அனுப்பி வைப்பதாக, விஜயகாந்திடம் உறுதி அளித்துள்ளனர். நேற்று மாலை, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவை, விஜயகாந்த் சந்தித்து பேசினார்.
பின், வைகோ கூறுகையில், ''கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதை, கட்சி, ஜாதி, மதம் ஆகிய எல்லைகளை கடந்து தடுக்க வேண்டும். அணை விவகாரத்தில், பிரதமர் நியாயமாக நடக்கவில்லை. கர்நாடகாவுக்கு மறைமுகமாக, மத்திய அரசு ஆதரவு தருகிறது. தமிழகத்தில் சூழ்ந்துள்ள அபாயத்தை தடுக்கும் முயற்சிக்கு ஆதரவு தருவோம்,'' என்றார்.



சோனியாவையும் சந்திக்க திட்டம் :
பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்திக்க, விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது: கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சி நடப்பதால், அந்தக் கட்சியின் தலைவரான சோனியாவையும் சந்திக்க திட்டமிட்டுள்ள விஜயகாந்த், அதற்கான அனுமதியை பெறும் முயற்சியில், ரகசியமாக ஈடுபட்டுள்ளார். அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இந்தத் தகவலை, அதன்பின் மற்ற கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்து, அவர்களையும் உடன் அழைத்துச் செல்ல உள்ளார். மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகளை நிறுத்தும்படி, முதல்வர் சித்தராமையாவை வலியுறுத்த வேண்டும் என, சோனியாவிடம் கேட்டுக் கொள்ள உள்ளார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர்.com
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: