வெள்ளி, 9 ஜனவரி, 2015

அமைதியான தேர்தல் அசத்தலான மாறுதல்! இலங்கை மிகப்பெரிய ஜனநாயக புரட்சியை நடத்தி காட்டியுள்ளது!


இலங்கை அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனா 51.28% வாக்குகள் பெற்று ராஜபக்சவை வீழ்த்தி வெற்றி பெற்றார் என்று தேர்தல் ஆணையர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கையின் 7-வது அதிபர் தேர்தலில் 62,17,162 (51.28%) வாக்குகளைப் பெற்று சிறிசேனா வெற்றி பெற, ராஜபக்ச 57,68,090 வாக்குகளை (47.58%) மட்டுமே பெற்று தோல்வி கண்டார். இதன்படி இலங்கையின் அதிபராக சிறிசேனா தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இலங்கை அதிபராக மைதிர்பால சிறிசேனா வெள்ளிக்கிழமை மாலை கொழும்புவில் பதவியேற்கவுள்ளார் என்று எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்தார். இலங்கை மக்களுக்கு மைத்ரிபால சிறிசேனா நன்றி> இலங்கை அதிபர் தேர்தலில் தனக்கு ஆதரவளித்து வெற்றிப் பெறச் செய்த மக்களுக்கு தனது நன்றியைப் பதிவு செய்துள்ளார் மைத்ரிபால சிறிசேனா.
தனது அதிகாரபூர்வ இணைய தளத்தில் தேர்தல் முடிவு குறித்து கருத்தை வெளியிட்டிருக்கும் மைத்திரிபால சிறிசேன, "என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். கருணையுடனான மைத்ரி யுகத்தை நோக்கி செல்வோம்" என்று கூறியிருக்கிறார்.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இந்த கருத்து பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.


ராஜபக்சவுக்கும் சிறிசேனா நன்றி

மேலும் சிறிசேனா, தேர்தலை நியாயமான முறையில் நடத்த ராஜபக்ச வழிவகை செய்ததால்தான் தான் அதிபராக முடிந்துள்ளது என்று ராஜபக்சவுக்கு பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், தேர்தலில் ஜனநாயக முறைப்படி மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ராஜபக்ச ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்ச
தேர்தல் முடிவுகள் முழுமயாக வெளிவருவதற்கு முன்பே வெள்ளிக்கிழமை அதிகாலையில், ராஜபக்ச தனது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டார். மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய அதிபரிடம் ஒப்படைப்படைக்கப்படும் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவித்தது.

அதிகாலை பிரதான எதிர்கட்சித் தலைவர் ரணில் விகரமசிங்கவை சந்தித்த ராஜபக்ச தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறினார்.
முடிவுக்கு வந்தத ராஜபக்ச ராஜ்ஜியம்
கடந்த 30 ஆண்டுகளாக ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போர் ராஜபக்ச ஆட்சியில் முடிவுக்கு வந்ததால் அந்த நாட்டின் முடிசூடா மன்னனாக அவர் கொண்டாடப்பட்டார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் 1970-ல் முதன்முதலாக காலடி எடுத்து வைத்த ராஜபக்ச அரசியல் ஏணியில் சறுக்காமல் முன்னேறினார். 1994-ல் அமைச்சரானார். 2004-ல் பிரதமர் ஆனார். 2005-ல் முதல்முறையாக அதிபராகப் பதவியேற்றார். அவரது ஆட்சியில் 2009-ம் ஆண்டில் உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2010-ல் அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.
அந்த நாட்டின் அரசியல் சாசன விதிகளின்படி இரண்டு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும். அச் சட்டத்தில் திருத்தம் செய்து 3-வது முறையாக அவர் மீண்டும் போட்டியிட்டு தோல்வி கண்டுள்ளார்.
யார் இந்த சிறிசேனா
சில மாதங்களுக்கு முன்பு வரைகூட ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட எதிரணியில் வலுவான வேட்பாளர் இல்லை என்றே கூறப்பட்டது. ஆனால் கடந்த நவம்பரில் திடீரென காட்சிகள் மாறின.
ஆளும் இலங்கை சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் சுகாதாரத் துறை அமைச்சருமான மைத்ரிபால சிறிசேனா யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் சுமார் 35 கட்சிகள் இணைந்து மைத்ரிபால சிறிசேனாவை களத்தில் இறக்கின.
குறிப்பாக, முன்னாள் அதிபர் சந்திரிகாவின் வருகை, ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவு ஆகியவை எதிரணியின் பலத்தை மேலும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதிகளில் அதிக வாக்குப்பதிவு:

முன்னதாக, இலங்கை அதிபர் தேர்தல் அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது. பெரும்பாலான பகுதிகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. நேற்று மாலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடந்து வருகிறது.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. வானிலை சீராக இருந்ததால், வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை. சுமார் ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்களில் 67 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளைப் பதிவு செய்னதர்.

தமிழர், முஸ்லிம் வாக்குகள்:

“அனைத்துப் பகுதிகளிலும் அதிக அளவு வாக்குகள் பதிவானது. முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் வடமேற்கு மாகாணத்திலுள்ள புத்தளத்தில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே மொத்தமுள்ள 1,200 வாக்காளர்களில் 800 வாக்காளர்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இது மிகக் குறிப்பிடத்தக்க விஷயம்” என, சுதந்திரமான, நேர்மையான தேர்தல் இயக்க நிர்வாகி கீர்த்தி தென்னகூன் தெரிவித்துள்ளார். மசூதிகளில் உள்ள ஒலி பெருக்கி மூலம், வாக்குப்பதிவில் பங்கேற்க தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனிடையே, புத்தளம் பகுதியில் இடம் பெயர் முஸ்லிம்கள் சுமார் 10,000 பேர் வாக்களிக்காத வகையில் தடுக்கப்பட்டதாக, முன்னாள் அமைச்சர் ரிசார் பதியுதீன் குற்றம்சாட்டியுள்ளார். 20 பஸ்களை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த போதும் ஆளும் கட்சிப் பிரமுகரின் தலையீட்டால், சுமார் 10,000 முஸ்லிம்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில், அதிக அளவு வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு மையம் திறந்தவுடனேயே நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர் என தமிழ் தேசியக் கூட்டணி எம்.பி. சரவணபவன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் 61.15 சதவீத வாக்குகளும், மாத்தறை - 76, அம்பாந்தோட்டை 70, நுவரேலியா 80, புத்தளம் 78, பொலனறுவ 75, கோலை 70, கம்பஹா 65, காலி 79 சதவீத வாக்குகள் பதிவாகின.

மொத்தம் 19 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், ராஜபக்சவுக்கும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும் இடையேதான் கடும் போட்டி.

வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: வாக்குப்பதிவு நேற்று மாலை 4.30 மணிக்கு முடிந்தவுடன் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. பின்னர் இரவு 8 மணிக்கு மேல் வாக்கு எண்ணும் பணி நடந்தது. முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இரவு 10 மணி முதல் அறிவிக்கப்பட்டன.

விருப்ப வாக்கு முறை:

இலங்கை அதிபர் தேர்தல் விருப்ப வாக்கு முறையில் நடைபெறு கிறது. வாக்காளர்கள் அதிகபட்சம் மூவருக்குத் தமது விருப்ப வாக்குகளை அளிக்கலாம். 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். முதற்கட்ட வாக்கெடுப்பில் யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்கவில்லை என்றால், அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.

இதில் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளில் 2-ம் விருப்பத் தெரிவாக போட்டியில் நிற்கும் வேட்பாளருக்குரிய வாக்குகள் கணக்கிடப்பட்டு அவர்களின் முதலாம் கட்ட எண்ணிக்கையுடன் கூட்டப்பட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இதன் பின்னரும் யாரும் 50 சதவீத வாக்குகள் பெறாவிட்டால் 3-ம் விருப்ப வாக்கு கணக்கிடப்படும். இறுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் அதிபராவார்.
தொடர்புடையவை

கருத்துகள் இல்லை: