சென்னை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனிக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது சுபேதார் தோட்டம். உதிரிப் பாட்டாளிகள் அதிகமாக குடியிருக்கும் பகுதி. ஜக்காரியா காலனி நடுத்தர வர்க்கம் வசிக்கும் பகுதி. சுபேதார் தோட்டத்தில் இந்து முன்னணி பெயர்ப்பலகை இருக்கும் இடத்தில் 6 அடி பிள்ளையார் சிலையும் அதற்கு முன்புறமாக 2அடி பிள்ளையாரும் வைக்கப்பட்டிருந்தது.
‘அது என்ன சின்னப் பிள்ளையார்’ என்று காவலுக்கு இருந்தவரிடம் கேட்டோம். அப்போது இரவு சுமார் எட்டரை மணி. “அது பணம் கொடுத்தா தலைமல கொடுக்கது சார்” என்றார். முழு போதையில் இருந்தவர் காய்கறி, பழங்கள், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தள்ளுவண்டியில் கொண்டு போய் அன்றாடம் வீதியில் விற்பாராம். வாய்ப்பு கிடைத்தால் சர்ச்சில் ஏதாவது தினக்கூலி வேலைக்கு கூப்பிட்டாலும் போய் வருவாராம். பாக்கு வேறு போட்டிருந்தார். குவாட்டர் பாட்டிலும் சிக்கின் பிரியாணியும் பிள்ளயார் வணக்கமும் ! நல்ல காம்பினேசன்

நாங்கள் பேசிக் கொண்டிருந்த ஒரு மணி நேரத்தில் பிள்ளையாரை சீண்டுவாரில்லை. போலீசாரும் அங்கு இல்லை.
“எனக்கு நாற்பத்தி இரண்டோ ஐந்தோ ஆகுதுங்க. இந்திரா காந்தி செத்தப்போ நான் பள்ளிக் கூடத்த விட்டேன்னா பாத்துக்கங்களேன்” என்றார்.
“அப்போ ப்ளஸ் டூ படிச்சீங்களா’ என்றோம்.
சிறுவர்கள்
ஒரு வார காலம் தூங்க தேவையில்லாத இரவு நேர கொண்டாட்டம்
‘நீ வேற ! அப்பாவுக்கு முடியல. ஆறாவதோ எட்டாவதோ படிக்கறச்சே செய்யாறுல அவரு அப்பாவாண்ட எடுத்துண்டு போயி வுட்டாரு. அப்பால வயசு ஆனவுடனே மெட்ராசுக்கு திருப்பி வந்துட்டேன். என் தம்பி மட்டும் இங்கதான் இருந்தான். இப்போ கழுத்துல ஜெயின்லாம் போட்டு ஒரு இரண்டு ஆட்டோவெல்லாம் வுட்டு, வட்டிக்கு விட்டுகுனு இங்கதான் சுபேதார் தோட்டத்துல ஒரு ஆளாயிட்டான்’ என்றார். ஒரு கிறிஸ்தவ பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டாராம்.
தான் தண்ணி அடிக்கவில்லை என்பதை சத்தியம் அடிக்காத குறையாக சொன்னார். இங்கு ஏன் சில பகுதிகளில் இருப்பதை போல பிள்ளையார்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லை எனக் கேட்டோம். ‘எங்க ஏரியால தலைவருக்கு போட்டியா யாரும் இன்னும் வரல. அதான் கட்சி சார்பா இது ஒன்னு மாத்திரம் இருக்கு. நீங்க சொல்ற மத்த ஏரியால யாரு பெரியவனு போட்டியாகி பெரிசு பெரிசா வச்சிருப்பாங்க’ என்றார்.
‘எத்தனை ஆண்டுகளாக இங்கு கொண்டாடுகிறீர்கள்?’’ என்று கேட்டதற்கு, ‘’இது பதினைந்தோ பதினொன்றோ சார். நான் இப்போ ஐந்து வருசமாகத்தான் இங்கு வருகிறேன். தலைவர் கண்ணுல பட்டு இரண்டு வருசம் தான் ஆகுது.’’ என்றார். ‘’ஊர்வலம் போவீர்களா?’’ என்று கேட்டோம். ‘’பின்ன நாங்க இல்லாமலா?’’ என்றார். மசூதி பக்கம் போகும்போது அதிகமாக முழக்கம் போடுவது, முசுலீம்களுக்கு எதிராக முழக்கம் போடுவது எல்லாம் தனக்கு பிடிக்காது என்றார். ‘உங்க தலைவர் ராமகோபாலன் அப்படித்தானே செய்கிறார்’’ என்று சொன்னோம். அது தவறுதான் என்று ஒத்துக்கொண்டார்.
‘’உங்களது மனைவி மக்களை கூட்டிக் கொண்டு கோவில் குளம் ஏதாவது இதுவரை போயுள்ளீர்களா?’’ என்று கேட்டோம். ‘’இல்ல சார். அதுக்கெல்லாம் துட்டு வேணாவா? இப்போ திருத்தணியே போறதுன்னா கூட ஈசிதான். ட்ரெயின சென்ட்ரல்ல பிடிச்சா போயிடலாம். சப்போஸ் அத விட்டுட்டா அரக்கோணம் போய் பஸ்ல போவணும். அதில் எதாச்சும் கடையாண்ட போயி பொண்ணோ ஒயிப்போ ஏதாச்சும் கேட்டா நம்மாண்ட காசில்லண்ணு வச்சுக்கோ, கடக்காரன் என்னா நெனப்பான் ‘தோடா! இதுக்கே வழியில்லாத இன்னாத்துக்கு கோவிலுக்கு வந்தே’னு பாப்பான். இதெல்லாம் தேவையா சார்.’’ என்றார்.
‘’இல்ல உங்க மனைவி கிறிஸ்தவர் ஆச்சே. இந்து கோவிலுக்கெல்லாம் வருவாங்களா?’’ என்று இழுத்தோம். ‘’அதெல்லாம் வருவாங்க சார். கூட்டிட்டு போக நமக்கு வசதி தான் இல்ல’’ என்றார். மகளை அரசுப் பள்ளியில் தான் படிக்க வைக்கிறார். இப்படி இரவெல்லாம் கண் விழிப்பதால் பணம் ஏதும் கிடைக்காது என்றும், சபரி மலைக்கு போவது போல இதுவும் ஒரு பக்தி அனுபவம் என்றார்.
ஜக்காரியா காலனியில் ஏன் பிள்ளையார் சிலை இல்லை என்று கேட்டோம். ‘சார் அவங்கல்லாம் வசதியான ஆளுங்க. சுபேதார் தோட்டத்துல இருக்கவுங்க நம்மள மாதிரி சாதாரண ஆளுங்க. நம்ம வருவோம். அவங்க ஏன் சார் வரணும்’ என்று சீரியசாகவே கேட்டார்.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு அம்பி இன்னும் சில தலைவர்களுடன் அங்கு வந்தார். நம்முடன் பேசிக் கொண்டிருந்தவர் எழுந்து நின்று கொண்டு மரியாதை செலுத்தினார். அவர்கள் வேறு ஒருவரை எதிர்ப்பாத்திருப்பார்கள் போலும், இவரை கண்டுகொள்ளவே இல்லை.
பிள்ளையார்
வட்டார சாதி, பணக்கார பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டு, பக்தி, பிள்ளையார் என்ற பெயரில் ஏற்பாடுகள் செய்கின்றனர்.
டுத்த பகுதி. அசோக் நகரில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஒருவர் துவங்கி வைக்க இருக்கும் விநாயகர் ஊர்வலத்திற்கான பிள்ளையார் பிளக்சை பார்க்க நேர்ந்தது. அதில் ‘ஊர்வலம்’ என்ற சொல் ‘ஊர்வளம்’ என்று இருந்தது. இந்த தவறை சம்பந்தப்பட்டவர்களிடம் சுட்டிக் காட்டினோம். ‘ஒரு தமிழன் என்ற முறையில் இதை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது பாஸ்’ என்று தள்ளாடியபடியே சொன்னார். உடனே பக்கத்தில் இருப்பவர் ‘ஆமா சார் லட்டுக்கு வரும் ல தான் சார் வரணும்’ என்று நம்மிடம் சொல்லி விட்டு, முன்னவரை அமைதியாக்கினார்.
டுத்து நுங்கம்பாக்கம் கக்கன் காலனியில் உள்ள செல்வ விநாயகர் சிலைக்கு முன் இருந்தோம். விநாயகரை சுற்றி ரூபாய் நோட்டுக்களால் மாலை கட்டிப் போடுவது தான் செல்வ விநாயகர்.
தலித் மக்கள் நிறைந்த இப்பகுதியில் இது ஐந்தாமாண்டாக கொண்டாடுகிறார்கள். விநாயகர் சிலை செய்யவே ரூபாய் இருபதாயிரம் வரை செலவாகி விட்டதாம். விநாயகர் ஊர்வலம் கிளம்பும் அன்று காலை அன்னதானம் போட இருப்பதாக குறிப்பிட்டனர்.
அங்கே வழக்கம் போல கானாப் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. சிறுவர்களில் முசுலீம் சிறுவர்களும் இருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு வார காலம் தூங்க தேவையில்லாத இரவு நேர கொண்டாட்டம். அங்கிருந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் எந்த வேலைக்கும் செல்லாத ஏரியாவின் சுகவாசிகள் என்பதை அவர்களது வாக்குமூலங்களே தெளிவாக்கின.
பிள்ளையாரை தூக்கிப் போக என்று தனியாக ஒரு பாடை வேறு வைத்திருந்தார்கள். அந்த பிள்ளையார் தினமும் அந்த ஏரியாவில் ஊர்வலம் போவாராம். தலித் இளைஞர்களை குறிவைத்து இந்து முன்னணி இயங்குவதற்கு இந்த ஏரியா நல்லதொரு உதாரணம்.
இந்து முன்னணி பிள்ளையார்
இந்து முன்னணி பிள்ளையார்
டுத்து நுங்கம்பாக்கம் ஜோஸ்யர் தெரு. இங்கு தலித், வன்னிய இளைஞர்கள் இணைந்து எட்டு அடி உயரமுள்ள பிள்ளையாரை வைத்திருந்தனர். அவர்கள் அனைவரும் அடிப்படை வேலைகளில் உள்ளவர்கள். அலுவலக உதவியாளர், செக் வசூலிப்பவர், கூரியர் பாய் என்ற வேலைகளை மாதமொன்றுக்கு நான்காயிரம் முதல் எட்டாயிரம் சம்பளத்தில் பார்த்து வருபவர்கள். ஆளுக்கு தலா எட்டாயிரம் போட்டு இந்த பிள்ளையாரை வைத்துள்ளனர். இந்தப் பகுதியில் தான் பெண்கள் ஓரளவுக்கு பிள்ளையாரை பார்க்க வந்தனர். இங்கு இந்த ஆண்டுதான் பிள்ளையாரை முதன்முறையாக வைத்துள்ளனர்.
எங்களை சந்தித்த இளைஞர் ராகேஷ் ஒரு கிறிஸ்தவர். அவரது தந்தை கிறிஸ்தவர், அம்மா இந்து. வங்கி ஒன்றில் செக் பணம் வசூலிப்பவராக இருக்கிறார். ‘’அடுத்த வாரம் அம்மன் திருவிழா. அதுவரைக்கும் சுத்தபத்தமா இருப்போம் சார்’’ என்றார். அவரிடமிருந்து மது வாடை ஆளையே தூக்கியது. அவரது நணபர் ஒருவர் வந்தார். தனியாக நடனக்குழு ஒன்று வைத்திருக்கிறாராம். அவரும் போதையில் இருப்பதை ஒத்துக்கொண்டார். அதனால் தான் மேடைக்கு அருகில் தாங்கள் போவதில்லை என்றும், பொறுப்பாளர் மட்டும் போவார் என்றார்கள். ‘இந்த ஒரு வாரம் மட்டுமாவது சுத்தபத்தமாக இருக்கலாமில்லையா?’’ என்று கேட்டோம். அதெல்லாம் வேலைக்காவாது சார். அதான் நாங்க கேரம் ஆடிண்டு காவல் இருக்கோமில்ல என்று கோரசாக சொன்னார்கள்.
றுநாள் திருவட்டீஸ்வரன் பேட்டை விநாயகர் அதாவது ராமகோபாலன் ஆரம்பித்து வைக்கும் மையமான விநாயகரை பார்க்கப் போகலாம் என்று முடிவு செய்தோம். திருவல்லிக்கேணி பகுதியில் 24 விநாயகர்கள் இருப்பதாக கேள்விப்பட்டோம். அதில் பெரும்பான்மை இந்து முன்னணி பிடிக்காமல் அதிலிருந்து வெளியேறிய ஆதிபராசக்தி பீடம் போன்ற ஏரியாவாசிகள் அமைத்திருப்பது. பெரிய தெருவில் இருக்கும் பிள்ளையார், ராமகோபாலன் குழு பிள்ளையாரை விட ஐந்து வயது மூத்தவர், 36 ஆண்டுகளாக ஊர்வலம் போகின்றவர் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். அதற்கு அருகில் உள்ள தெருவில் அன்று ஒரு சாவு நடந்திருந்த காரணத்தால் பிள்ளையாரை வெள்ளைத் துணி போட்டு மூடியிருந்தார்கள். பல இடங்களில் முதலாண்டு பிள்ளையாரை வைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லா இடங்களிலும் செல்வ விநாயகர் சிலைகள் தான் பத்து முதல் பன்னிரெண்டு அடிகள் வரை இருந்தன.
திமுக பேனர்
கருணாநிதி மகன் மு.க. தமிழரசு மற்றும் திமுக மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன் ஆகியோரிடம் நிதி பெற்று பிளக்சு பேனர்.
திருவட்டீஸ்வரன் பேட்டைக்கு போனோம். அதே தெருவில் இன்னொரு பிள்ளையாரும் இருந்தார். அங்கே பெரும்பாலும் தலித் இளைஞர்கள். ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வரை போட்டு வைத்ததாக கூறியவர்கள் நம்மிடமும் காசு கேட்டார்கள். ஆளை விட்டால் போதும் என்று மெயின் பிள்ளையாரை பிடித்தோம். மொத்தமே நான்கு பேர்தான் சிலையை சுற்றிலும் இருந்தார்கள். அதில் ஒருவர் அப்பகுதியின் தொகுதி பாஜக பொறுப்பாளர். பார்ப்பதற்கு பார்ப்பனரைப் போல இருந்தார். குறிப்பாக பேசும்போது இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நஞ்சு கக்கினார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
நாங்கள் பேச ஆரம்பித்த போது தனக்காக ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டவர் கடைசி வரை நம்மை உட்காரச் சொல்லவேயில்லை. அவரிடம் ஒரு மணி நேரம் பேசியதில் இருந்து சில கருத்துக்கள்.
அங்கே ஒரேயொரு ஏட்டையா மட்டும் தான் காவலுக்கு நின்று கொண்டிருந்தார். ‘மிகவும் பதட்டமான பகுதி என்று அரசு அறிவித்துள்ள இப்பகுதியிலேயே இத்தனை குறைவாக காவலர்களா?’’ என்று பாஜக காரரிடம் கேட்டோம்.
‘’சார்! எங்களைப் பொறுத்தவரை காவல்துறையே வரக் கூடாது. ராமனது அரசாட்சியில் கதவுகளே இல்லாமல் இருந்த்தாம். இல்லாமை இல்லாமற் போனதால் கதவே வீடுகளுக்கு தேவையில்லாமல் போய்விட்டதாக கம்பன் கூறுகிறான். அதுபோல இங்கு அமைக்கப்பட்டுள்ள பிள்ளையாரை ஒவ்வொரு முசுலீமும், கிறிஸ்தவனும் தன்னுடையதாக நினைத்து பாதுகாக்க முன்வர வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்’’ என்றார்.
‘’தமிழ் நாட்டை திராவிட இயக்க ஆட்சி வந்து தான் கெடுத்து விட்டது.’’ என்றவரிடம் ‘’அப்படியானால் கருணாநிதி மகன் மு.க. தமிழரசு மற்றும் திமுக மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன் ஆகியோரிடம் நிதி பெற்று பிளக்சு பேனர் போட்டு இங்கே சிலை வைத்துள்ளீர்களே!’’ என்று கேட்டோம். ‘’சார்! நாங்கதான் கருணாநிதியை பலமுறை ஜெயிக்க வைத்தோம். அன்பழகனையே எடுத்துக்கோங்க. அவர் வேட்பாளர் படிவத்தில் இந்து என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். அவர் என்ன கொள்கை பேசினாலும் அவர் இந்து தானே’’ என்றார்.
நாத்திகம் பேசும் எவரும் தம்மை இந்து என்றுதான் அரசு பதிவேட்டில் பதிய முடியும் என்றார். ‘’இல்லையே சார்! அப்படி மதம் இல்லாதவர்கள் என்று பதிய சட்டத்தில் புதிய ஜி.ஓ இருக்கிறதே’’ என்று சுட்டிக் காட்டினோம். ‘’பார்த்தால் படித்தவர் போல இருக்கீங்க. நீங்களே இப்படி வெவரமில்லாத இருந்தா மத்தவங்கள என்ன சொல்றது’’ என்று குறைபட்டுக் கொண்டார்.
போலீசு படை குவிப்பு
லீவு ரத்து செய்து போலீசு படை குவிப்பு
“எங்களை விட சாஸ்திரம், சம்பிரதாயம், வேதம், புராணம் பற்றியெல்லாம் கலைஞருக்கு நன்றாக தெரியும். அவர் தான் ராமனை திட்டுவதாக சொல்லிக் கொண்டு எங்களை விட அதிக தடவை ராம நாமத்தை உபயோகிக்கிறார். அந்த அளவுக்கு விவரமானவர்’’ என்றார். ‘’இந்து ஒற்றுமையை திராவிட இயக்கம் வந்து தான் சார் கெடுத்துட்டாங்க’’ என்றார்.
“சரி சார் இங்கே நம்ம ஜெயலலிதா ஒரு ராம பக்தை. மத்தியில் நம்ம மோடி. அப்புறம் ஏன் சார் பிள்ளையார் ஊர்வலத்தை மசூதி முன்னால எடுத்துட்டுப் போக தடை’’ என்று கேட்டோம்.
மோடி பெயரை கேட்டதும் குதூகலமானவர், “சார் நம்ம ஊர்ல இருக்கும் அம்மா உணவகத்தை பதினோரு ஆண்டுகளுக்கு முன்னரே குஜராத்தில் மோடி ஆரம்பித்து விட்டார். அதைப் பார்த்து அம்மா அடித்த காப்பிதான் இங்கு செயல்பாட்டில் உள்ளது’’ என்றார்.
இந்த பொறுப்பாளர் ஏதோ தனியார் வங்கியில் வேலை பார்ப்பதாக சொன்னார். எப்போதும் பான்பராக் மென்று கொண்டிருந்தார். மறுநாள் ஊர்வலத்தில் கடைசி வரையில் இவர்தான் இந்து முன்னணி கொடியை பிடித்த வண்ணம் வந்தார்.
“டாஸ்மாக் அடித்துக் கொண்டு உங்கள் தொண்டர்கள் இங்கு இருக்கிறார்களே’’ என்று கேட்டோம். “தனி மனிதன் திருந்துவது தான் சார் முதன்மையானது. அதனைத் தான் மோடி குஜராத்தில் செய்தார். என்னைக் கேட்டால் டாஸ்மாக்கை மூடக் கூடாது. ஏன் ஒருத்தன் தண்ணியடிக்கிறான். அவனுக்கு வயிற்றில் இடம் கொஞ்சம் மீதமிருக்கிறது. மோடி அவனுக்கு வயிறு முழுக்க சாப்பாடு கிடைக்க வழி செய்தார். இங்கும் அப்படி செய்து விட்டால் டாஸ்மாக் விற்பனை படுத்து விடும். ஆட்டோமெட்டிக்காக அரசு சாராய விற்பனையில் இருந்து விலகி விடும். இது தான் குஜராத்தில் நடந்தது’’ என்றார்.
’அதெல்லாம் சரி சார்! குஜராத்தில் கறி சாப்பிடுவது குறைவு தானே! அப்படியானால் உடல் வலி அதிகமாகி தொழிலாளிகள் மதுவை நாட வாய்ப்புள்ளதே’’ என்று கேட்டோம். ‘’இல்ல சார்! சைவ உணவில் தான் நல்ல தரமான புரத சத்து உள்ளது. இது சயின்டிஸ்டுகளே சொன்ன உண்மை. அதுனால நீங்க சொல்றது உண்மையில்ல’’.
“சரி சார்! தனி மனித ஒழுக்கத்த பற்றி சொல்றீங்க. ரெண்டு வருசத்துக்கு முன்னால பாஜக எம்.எல்.ஏ.க்கள் சிலர் கர்நாடகா சட்டசபையில் பிட்டு படம் பார்த்து மாட்டிக் கொண்டார்களே!’’ என்று இழுத்தோம். ‘’அதான் சார்! தனி மனிதன் திருந்த வேண்டும். கட்சிக்குள்ள வந்தாலும் தனி மனிதனை திருத்த நாங்க முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறோம். இருந்தாலும் அவர்களாக திருந்துவது தான் சரி. சட்டம் போட்டெல்லாம் திருத்த முடியாது’’ என்றார்.
“தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும் என்கிறீர்கள். அப்படி வருபவர்களை எந்த சாதியில் சேர்த்துக் கொள்வீர்கள்?’’ என்று கேட்டோம். ‘’அவங்க இந்துவா இருக்குறப்போ என்ன சாதியா இருந்தாங்களோ அந்த சாதி தான்’’ என்றார். ‘’அது இந்த தலைமுறையில் மாறியிருந்தால். மூணு நாலு தலைமுறைக்கு முன்னால் மாறியிருந்தா என்ன சாதின்னே தெரியாதே சார்’’ என்று கேட்டோம். ‘’சார் சாதி என்னாத்துக்கு கேக்குறீங்க. ரிசர்வேஷன். ரிசர்வேசனே தப்புங்குறதுதான் சார் பிஜேபி தரப்பு.’’ என்றார்.
“சாதின்னு வேண்டாம்னு சொன்னீங்கன்னா, அவங்க எங்க சார் பொண்ணு கட்டுவாங்க’’ என்று கேட்டோம். ‘’அதெல்லாம் தெரியாது சார். இந்துவாக மாறுவது தான் முக்கியம். அதுக்கும் சாதிக்கும் சம்பந்தமில்ல. அப்படிப் பாத்தா எல்லா மதங்களிலும் சாதிங்குறது, இந்து மதத்தை விட அதிகமாகத்தான் இருக்கு. கிறிஸ்தவர்களில் 1200 க்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கு. முசுலீம்களில் 800 க்கும் மேல. இந்துவில் ஒரு 126 சாதி மட்டும் தான்’’ என்றார். ‘’எப்படி.’’ என்று கேட்டதற்கு நாடுகள் வாரியாக பிரிந்து கிடக்கும் இனங்களையும் சாதிகளாக குறிப்பிட்டார்.
“தமிழில் அர்ச்சனை, பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களை உருவாக்கியிருக்கும் கருணாநிதியின் திட்டம் பற்றி..’’ என்று கேட்டதற்கு “தமிழில் அர்ச்சனை செய்வதை நாங்கள் வரவேற்கிறோம். அப்படியானால் மற்ற எல்லா மொழிகளையும் பயன்பாட்டில் இருந்து தமிழகத்தில் தூக்கியாக வேண்டும். அராபியாவில் உருவான உருதுவை இங்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால் மெக்கா, மெதினாவிலேயே சமஸ்கிருதம் தான் ஓதுகிறார்கள். சமஸ்கிருதமும் நமது இந்திய மொழிதானே! அதில் அர்ச்சனை செய்வதில் எந்த தவறும் இல்லை. நம்ம பார்லிமெண்டிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். இங்கிலீஷில் பேசினால் காரியம் நடக்காது. இந்தியில் பேசினால் காரியம் சீக்கிரம் நடக்கும். அது போலத்தான் இறைவன் சந்நிதியிலும். பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களைப் பொறுத்தவரை, இன்னார் இன்ன தொழில்தான் செய்ய வேண்டும் என்பது நமது மரபு. அந்தக் காலத்தில் பண்ணையார் பார்த்து அனைவருக்கும் தேவையானவற்றை கவனித்துக் கொள்வார். சம்பளம், கூலி என்று நம்மை அதற்கு அடிமையாக்கியவன் ஆங்கிலேயன். அப்படி பார்க்கையில் பிராமணர்கள் அர்ச்சகர் வேலையை பார்க்கிறார்கள். புனிதமான அந்த தொழிலில் அடுத்தவன் பிழைப்பில் மண் அள்ளிப் போடும் வேலை எதுவும் கிடையாது. எல்லாவற்றிலும் இருந்து எங்களை துரத்தி விட்டீர்களே. இதிலும் எங்களது பிழைப்பில் கைவைத்தால் நாங்கள் என்னதான் செய்வது?’’ என்று சற்று கோபமாகவே கேட்டார்.
‘’நாங்கள் ஆறு மாதங்களுக்கு முன்னரே வசூலை ஆரம்பித்து விடுவோம். எல்லோரும் பணமாக தர மாட்டார்கள். சிலர் எண்ணெய் தருவார்கள். சிலர் திரி மட்டும் வாங்கித் தர இயலும் எனச் சொல்லி அதனை வாங்கித் தருவார்கள். சிலர் கற்பூரம் வாங்கித் தருவார்கள். அனைவரது பங்களிப்புடன் தீபம் எரிகிறது அல்லவா, அந்த தீபம் தான் இந்து மத ஒற்றுமை’’ என்று குறிப்பிட்டார். ‘’நாளை இங்கு வந்தால் புகைப்படம் எடுக்க முடியுமா ஊர்வலத்தை’’ என்று கேட்டோம். ‘’சாத்தியமில்லை. முடிந்தால் பாருங்கள். கூட்டம் அதிகமாக இருக்கும்’’ என்று எச்சரித்தார்.
டுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை மதியம் சென்றோம். உட்கார்ந்திருந்தவர்கள், சுற்றி வேடிக்கை பார்த்தவர்கள் என எல்லோரையும் சேர்த்து பார்த்தால் ஒரு ஐம்பது பேர்தான் இருந்தனர். நாங்கள் போகையில் எச்.ராஜா தனது விஷத்தை கக்கிக் கொண்டிருந்தார். இந்துசமய அறநிலையத் துறை இந்து மதத்திற்கு மட்டும்தானா? இங்கே இந்துக்களுக்கு ஊர்வலம் போக உரிமையில்லையா? என்றும் கேட்டார்.
அடுத்து தரும்புரி மாவட்டம் பாப்பாரப்பட்டி ராமகிருஷ்ணா ஆசிரமத்தை சேர்ந்த ராமானந்த மகராஜ் சுவாமிகள் என்ற சாமியார் பேச ஆரம்பித்தார். சாமியார் ஏதாவது ஆன்மீகம் பேசுவார் என்று பார்த்தால் எச்.ராஜா பேசியதை விட அதிகமாக மதவெறிக் கருத்துக்களை பேசினார். “நமது காலண்டர் நட்சத்திரம், சூரியன், சந்திரன் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. ஆங்கில காலண்டர் என்பது இயேசு பிறந்தவுடன் துவங்குகிறதே தவிர அதற்கு சூரிய, சந்திர அடிப்படை கிடையாது’’ என்று ஒரு போடு போட்டார். ‘’காந்தி குல்லா போட்டு நோன்பு கஞ்சி குடிக்கவில்லை, நேருவும் அப்படி செய்யவில்லை, இதில் நேரு கம்யூனிச வாதியும் கூட. அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டுதான் முசுலீம்களின் நண்பர்களாக வலம் வந்தார்கள். எனவே நானும் அப்படி சொல்லிக் கொள்வதில் எந்த தவறுமில்லை என்று கேள்வி கேட்டவர்களிடம் பெருமையாக சொன்னாராம் மோடி” என்று இந்துத்துவ ஆட்சியின் ‘பெருமை’களை அளந்து கொண்டிருந்தார்.
ஊர்வலத்தில் மெயின் பிள்ளையாருக்கருகில் சில பக்தர்கள் பான்பராக்கோடு நிறுத்தியிருந்தனர். முன்னால் குத்தாட்டம் போட்டவர்கள் நல்ல போதையில் இருந்தனர். சேரிப் பகுதியில் இருந்து அழைத்து வரப் பட்ட பெண்களும், திருநங்கைகளும் கூட குத்தாட்டம் போட்டனர். ஏற்கெனவே திருவெட்டீஸ்வரன் பேட்டையில் முந்தைய நாள் மெயின் பிள்ளையாருக்கே குத்துப் பாட்டு போட்டுக் கொண்டிருந்தார்கள். ‘’இன்றைக்காவது பக்தியோடு இருக்க கூடாதா?’’ என்று அந்த இளைஞர்களிடம் கேட்டதற்கு ‘’சார்! இப்போ ராகு காலம் சார். அதுனால பிள்ளையாரு கண்டுக்க மாட்டாரு’’ என்று அதற்கொரு விளக்கம் தந்தார்கள் அந்த இளைஞர்கள்.
திருநங்கையுடன் ஆபாச ஆட்டம்
‘’மடையா மடையா.. பிள்ளையாருக்கே தடையா’’ என்பது போன்ற முழக்கங்கள் போலீசுக்கு எதிராக முன்வைக்கப்பட்டது. போலீசார் செம கடுப்பில் இருந்தாலும் அரசு தரப்பில் இவர்களை மென்மையாக அணுக சொல்லியிருப்பதால் நம்மிடம் தங்களது பிரச்சினைகளை எழுதச் சொல்லிப் புலம்பினர்.
ஊர்வலத்தை சரிசெய்ய முயன்ற எஸ்.ஐ ஒருவரை கூட்டம் அதிகம் இல்லாத இடத்திலேயே ஒரு இளைஞன் நெஞ்சில் கைவைத்து தள்ளினான். இது வேறு மக்கள் போராட்டமாக இருந்திருந்தால் நடப்பதே வேறு. இதைப் பற்றி ஏசியிடம் முறையிடப் போன அவருக்குதான் டோஸ் விழுந்தது தனிக்கதை.
யார் ஆடும் டான்சு சூப்பர் என்பதை காண்பிக்க ஒரு பிள்ளையார் சிலை வைத்திருக்கும் கோஷ்டியிலேயே சிலருக்குள் போட்டி. அதற்காக ஆளுக்கொரு டிரம்ஸ் செட் மட்டுமின்றி ஆடுவதற்கும் நபர்களை வெளியில் இருந்து கூட்டிக் கொண்டு வந்திருந்தனர். அதில் அவர்களுக்குள் முதலில் முட்டிக் கொண்டது தான் முதல் முக்கிலேயே நடைபெற்றது.
குத்தாட்டம் போடுவதில் போட்டி
ஒவ்வொரு இடம், பில்டிங், நபர்களை காட்டி இது யாருடையது என்று கேட்டு முழக்கமிட்டது ஒரு பார்ப்பன இளைஞர் கூட்டம். அதில் அவர்கள் அடிக்கடி கைகாட்டியது ஒரு மசூதியை நோக்கி. அப்போது கூட்டத்தின் கோஷ ஸ்ருதி அதிகரித்தது.
மசூதிக்கு அருகில் மதவெறிக் கூச்சல்
போலீசாரின் எண்ணிக்கை போதாது என்பதை நன்கு உணர முடிந்தது. ‘’இவனுக பண்ற காவாலித் தனத்தால பெண்கள் யாருமே சாமி கும்பிட வர்றதில்ல சார்’’ என்றார் அந்த தலைமைக் காவலர். ‘’கேட்டால் நெறய சொல்லலாம் சார்.’’ என்றவர் எஸ்.ஐ ஒருவரை கூப்பிட்டு தங்களது பிரச்சினைகளை சொல்லும்படி கேட்டுக் கொண்டார். ‘’இப்போ யாருக்கும் பெர்மிஷன், லீவு கூட கெடையாது சார். இப்போ என் வீட்ல விட்டுட்டு வர ஒரு மணி நேரம் கேட்டேன். கெடைக்கல. கொஞ்சம் இவர பாத்துக்க சொல்லிட்டி ஏசி ரவுண்டு வர்றதுக்குள்ள வரணும்னு அரக்க பரக்க ஓடியார வேண்டியதாயிட்டு சார்’’ என்றார்.
‘’ரெண்டு நாளைக்கு முன்னால இந்த ஏரியா இந்து முன்னணி பிரமுகரு ஒருத்தரு. போலீசு வண்டில ஏறி உக்காந்திருந்தாரு. நாங்களே அப்படி உக்கார மாட்டோம். அதுனால, ‘சார் அது போலீசு வண்டி. இறங்குங்க சார்’ என்று மரியாதையாகத்தான் சொன்னோம். ‘ஓகோ! அப்படியா. டேய்! இந்த போலீசு நாய்ங்களுக்கெல்லாம் போட்டிருக்கும் சேர்களையெல்லாம் தூக்கி அடுக்குங்கடா’ என்று சொல்லிவிட்டு இறங்குறார் சார். இதெல்லாம் கொஞ்சம் எழுதுங்க சார்’’ என்றார். இவரும் அதே பகுதியில் தான் முக்கியமான போலீசு ஸ்டேஷனில் எஸ்.ஐ ஆக இருப்பவர்.
மழையில் பிள்ளையாரை கவரால் மூடி ஊர்வலம் கூட்டிச் சென்றனர். ஊர்வலம் துவங்கும்போதே கழன்று கொண்ட பெரியவர்கள், மழையால் பாதியில் கழன்று கொண்ட இளைஞர்கள் என இவர்களை தாண்டி சிறுவர்கள் மற்றும் சிலருடைய உதவியால் தான் பிள்ளையார் பட்டினப்பாக்கம் வரை போக முடிந்தது. சில பகுதிகளில் இந்து முன்னணி பொறுப்பாளர்களின் குடும்பத்தினர் மூடிய கார்களில் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் யாரும் கீழே இறங்கவேயில்லை.
மசூதி வரும் இடங்களில் கோஷங்களும், ஊர்வலத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதும் அதிகமாக இருந்தது. இந்து முன்னணி தவிர்த்த சிலர் தனியாக ஊர்வலம் நடத்தினர். வாலஜா சாலையில் திடீரென போலீசார் குவியத் துவங்கினர். ஏதோ கலவரமோ என்று ஓடினோம். அங்கு ஆயிரம் விளக்கு மசூதிக்கு அருகில் உள்ள இளைஞர்கள் கொண்டு போகும் பிள்ளையார் ஊர்வலம் மட்டும் தனியாக ஒரு முப்பது நாற்பது பேருடன் போய்க் கொண்டிருந்த்து. அதன் உச்சியில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டிருந்த்து. ஊர்வலத்திற்கு மத்தியில் முன்னால் ஓடி பிளாட்ஃபார்மில் தங்களது கட்டுச்சோற்றை முடித்துக் கொண்ட அந்த இளைஞர்கள் ‘’நாங்க இந்து முன்னணியில இருந்து வெலகிட்டோம் சார். எங்க பிள்ளையார் மட்டும் தனியானவரு. தேசிய கொடிய மாட்டிதான் கொண்டு போவோம். கரைக்குறப்ப மட்டுந்தான் கழட்டுவோம்’’ என்றார்கள்.
ஜாம்பஜார் பகுதியில் இருந்து ஊர்வலத்தில் கலந்து கொண்ட இன்னொரு ஏரியாவாசியை அணுகினோம். அவர்தான் அந்த பிள்ளையாருக்கு பொறுப்பு. பெயிண்டராக இருந்து வருகிறார். “நாங்க முதல்ல பத்து வருசம் இந்து முன்னணி கூட தான் சார் வந்தோம். அவங்க ரூட்டு அதிகமாக இருக்கு. அதில வேற போற வழில கோஷம் போட்டு சண்ட இழுக்குறாங்க. அதான் ஒரு பதினைந்து வருசமா தனியா போக ஆரம்பித்து விட்டோம். நாளப் பின்ன பாத்து பழக வேண்டியிருக்கு இல்லையா’’ என்று எதார்த்தமாக கேட்டார். “அதுல வேற அப்போ வந்து அவங்க கூட்டம் போராட்டத்துக்கு ஆளுங்கள இட்டார சொல்றாங்க. எங்க பசங்களுக்கு இதெல்லாம் பிடிக்கல. நமக்கு தேவ பக்தி. அவ்ளோதான் சார்” என்றார். அவர்களும் குத்தாட்டத்துடன் தான்.
மொத்தமாக பார்த்த வரையில் இந்து முன்னணி சில பகுதிகளை தனது கலவரமூட்டல் காரணமாக இழந்து வருகிறது. புதிய பகுதிகளில் சென்று சிலைகளை நிறுவ முயற்சிக்கிறது. பெரும்பாலும் இளைஞர்கள், உதிரிப் பாட்டாளிகள், தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகப் பார்த்து தான் தேர்வு செய்கிறார்கள். குத்தாட்டம் தான் இளைஞர்களை கவர வழி என்பதால் ஆர்.எஸ்.எஸ் அதற்கும் அனுமதி அளிக்கிறது. ஓம் காளி ஜெய் காளி, இந்துஸ்தான் போன்ற கோஷங்கள் இங்கு எடுபடவில்லை. அதே நேரத்தில் கணேஷ் மண்டல் என்ற பெயரில் சேட் பசங்களுக்காக தனியாக ஒரு அமைப்பையும் இவர்கள் நிறுவி உள்ளனர். இவர்களும் இந்து முன்னணியில் உள்ள தமிழ் பசங்களும் இணைந்து இருப்பதை எங்கேயும் காண முடியவில்லை.
அதே போல மெயின் பிள்ளையார் பக்கம் இருந்த பார்ப்பன ஆதிக்க சாதியினர் அளவுக்கு பிற பிள்ளையார்கள் மத்தியில் அவர்களைக் காண இயலவில்லை. பிள்ளையார் ஊர்வலத்திலும் சாதி, இனம், வர்க்கம் இருப்பதை கண்கூடாக பார்க்கலாம்.
எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதற்காக சங்க பரிவாரங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன. பல இடங்களில் வட்டார சாதி, பணக்கார பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டு, பக்தி, பிள்ளையார் என்ற பெயரில் ஏற்பாடுகள் செய்கின்றனர். பக்தர்களை இழுப்பதற்கு பல இடங்களில் அன்னதானம் போடுகின்றனர். சில இடங்களில் மைக்கேல் ஜாக்சனே இடைவிடாமல் பாடிக் கொண்டிருந்தார். போலிசாருக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருப்பதில் பிள்ளையார் சிலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஏழைகள் பகுதியில் பணம் கொடுத்து சிலை வைப்பதோடு, ஊர்வலத்திற்கு ஆள் சப்ளையும் இவர்கள்தான். இவர்களை இந்துக்களாக புடம் போடும் வகையில் சங்க பரிவார உறுப்பினர்கள் இடையிடையே வந்து போகின்றனர். சில வருடங்களுக்கு பிறகு இந்த பிள்ளையார் சிலை ஊர்வலங்கள் மும்பை போல ஒரு சமூக ஆதிக்க நிகழ்வாகவும், வருடா வருடம் பிரச்சினைகளை கொண்டு வரும் மதவெறி தினமாகவும் மாறப்போவது உறுதி.
-    வினவு செய்தியாளர்கள்