
ஷீலா தீட்சித்

1998 முதல் 2013 வரை தில்லி முதல்வராக பொறுப்பு வகித்த ஷீலா தீட்சித்தின் மொத்த சொத்து மதிப்பு கடைசி ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது அவரது வேட்பு மனு மூலம் தெரிகிறது. இதற்கிடையில் சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஷீலா தீட்சித் தில்லி முதல்வராக இருந்தபோது குடியிருந்த அரசு மாளிகை குறித்த விவரங்களை அரசிடம் கோரியிருந்தார்.
அதற்கு பதிலளித்த மத்திய பொதுப்பணித் துறை, அவரது பழைய இருப்பிடமான 3, மோதிலால் நேரு மார்க் பங்களா நான்கு அறைகளை கொண்டது எனவும், அதில் 31 குளிர்பதன எந்திரங்களும் (ஏ.சி), 15 நீர் குளிர்ப்பிகளும் (டெஸர்ட் கூலர்), 25 சுடுநீர் கருவிகளும் (ஹீட்டர்), 16 காற்று சுத்திகரிப்பான்களும் (ஏர் ப்யூரிபையர்), 12 சுடுநீர் மின்கலன்களும் (கெய்சர்) இருந்த்தாகவும், இதற்காக மட்டும் அரசு தரப்பில் ரூ 16.81 லட்சம் செலவிடப்பட்டதாகவும் கூறியிருக்கின்றனர். தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்த பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக இருந்தவற்றை கழற்றி சில அரசு அலுவலகங்களில் பொருத்தியிருப்பதாக அரசு அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
இந்த பங்களா 3.5 ஏக்கரில் விரிந்துள்ளது. 1920-ல் கட்டப்பட்டது. தற்போது இதனை சீரமைக்க மாத்திரம் ரூ 35 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. கடும் மின்சார தட்டுப்பாடு தில்லியில் நிலவும் நிலையில் இத்தனை செலவில் இதெல்லாம் ஒரு முதல்வருக்கு அத்தியாவசியமான ஒன்றா? என்ற கேள்வி பல தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது. இதனை பரிசீலிக்கையில் சமூக பொருளாதார நிலைமையில் இரண்டாக பிளவுபட்டிருக்கும் தில்லியை ஒரு பறவைப் பார்வையிலாவது பார்ப்பது அவசியம்.
1920-களில் துவங்கி 17 ஆண்டுகளில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையில் 340 அறைகள் உள்ளன. இரண்டு லட்சம் சதுர அடியில் 70 கோடி செங்கற்கள், 30 கோடி மார்பிள்களோடு கட்டப்பட்டுள்ள இந்த மாளிகை உயரமான இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இப்பகுதியில் 1911-ல் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட்டது. 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. கட்டி முடிக்க அப்போதே 9 லட்சம் பவுண்டுகள் (அப்போதைய மதிப்பில் ரூ 2 கோடி) செலவானது. இதற்கருகில்தான் பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம், மத்திய அரசு அலுவலகங்கள் எல்லாம் அமைந்துள்ளன. ராஷ்டிரபதி பவனில்தான் முன்னர் வைசிராய்கள் இருந்தார்கள். இங்கு இரண்டு பூங்காக்களும் இருக்கின்றன.
7, ரேஸ் கோர்ஸ் சாலை என்பது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம், 12 ஏக்கரில் விரிந்து பரந்து இருக்கும் இதற்குள் ஐந்து பங்களாக்கள் உள்ளன. ராஜீவ் காலம் முதல் இதுதான் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகம் அமைந்துள்ள பகுதியாகும். தற்போது மோடி 5-ம் எண்ணுள்ள பங்களாவில் வசிக்கிறார். 7 ஐ அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருக்கும் இப்பகுதியில் உள்ள முதல் எண் ஹெலிபேடு (ஹெலிகாப்டர் தளம்) ஆகும். சப்தார்ஜங்க் விமான நிலையத்திற்கு 7-ம் எண் வீட்டிலிருந்து நேரடியாக போய் வர 1.5 கிமீ தூரத்திற்கு ஒரு தனிப்பட்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2010-ல் துவங்கப்பட்டு இம்மாத இறுதியில் முடிவடையும் என்று தெரிகிறது. இதில் உள்ள ஐந்து பங்களாக்களும் 1980-ல் கட்டப்பட்டவை.
1920-களில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், சவுத், நார்த் பிளாக்குகளில் அமைந்துள்ள அரசு தலைமைச் செயலகங்கள் இவற்றையெல்லாம் நிர்மாணித்தவர் எட்வின் லூத்தியன்ஸ். அதனால் இந்த பகுதிக்கே லூத்தியன்ஸ் பங்களா மண்டலம் என்று பெயர். 2800 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்திருக்கும் இம்மண்டலம்தான் உலகிலேயே ரியல் எஸ்டேட் துறை மதிப்பில் மிக உயர்ந்த விலையுள்ள நிலங்களை பெற்றுள்ள பகுதி.
தற்போது இங்கே சந்தை மதிப்பு சதுர அடி ரூ 6.25 லட்சம் என உயர்ந்துள்ளது. பெரும்பகுதி அரசு பங்களா என்ற அளவில் இப்பகுதியில் மாத்திரம் ஆயிரம் பங்களாக்கள் உள்ளன. தனியாரை பொறுத்தவரை ராஜன் மிட்டல் இப்பகுதியில் கடந்த ஆண்டு வாங்கிய பங்களாவின் மதிப்பு ரூ 156 கோடி. இந்தியா புல்ஸ்-இன் இணை நிறுவனர் ராஜீவ் ரத்தன் வாங்கிய ஒரு கிரவுண்டு நிலத்தின் மதிப்பு ரூ 220 கோடி. இப்பகுதியில்தான் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களது பங்களாக்கள் உள்ளன. கமல்நாத், மன்மோகன் போன்றவர்களும் இப்பகுதியில்தான் வசிக்கின்றனர்.

அவரவர் வாங்கும் ஊதியங்களின் தகுதிக்கேற்ப இது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் வகை பங்களாக்கள் 14 உள்ளன. ஒவ்வொன்றும் தலா 809.79 சதுர மீட்டரில் (சுமார் 8,700 சதுரஅடி) கட்டப்பட்டுள்ள இவற்றில் முன்புறம் நீண்ட புல்வெளியும், இரண்டு கார் நிறுத்துமிடமும், நான்கு வேலைக்காரர்களுக்கான தங்குமிடங்களும் இருக்கின்றன. ஏறக்குறைய ரூ 100 கோடி மதிப்புடைய இப்பங்களாவிற்கு அரசு செலுத்தும் வாடகை மாத்திரம் மாதமொன்றுக்கு பல இலட்சங்களைத் தாண்டுகிறது. இதில் இருப்பவர்களின் அடிப்படை சம்பள விகிதம் ரூ 90 ஆயிரத்திற்கும் மேல் என்கிறார்கள்.
இரண்டாவது வகையில் பத்து பிளாக்குகளாக 376 அடுக்கக குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொன்றும் 543 சதுர மீட்டர் (சுமார் 5,800 சதுர அடி) பரப்பளவுடையது. இதில் சிறப்பு மற்றும் கூடுதல் செயலர்கள் குடியிருப்பார்கள். மூன்று ஊழியர்கள் குடியிருப்பும், இரு கார் நிறுத்துமிடங்களும், புல்வெளிகளும் கொண்ட இந்த குடியிருப்பொன்றின் சந்தை மதிப்பு ரூ.60 கோடி வரை. அடுத்த மூன்றாம் வகையில் உள்ள 320 சதுர மீட்டர் (சுமார் 3,400 சதுர அடி) பரப்புடைய அபார்ட்மெண்டில் மூன்று அறைகளும், ஒரு விருந்தினர் அறையும், இரண்டு வீட்டுப் பணியாளர்களுக்கான குடியிருப்பும், ஒரு வாகன நிறுத்திடமும் இருக்கும். இக்குடியிருப்பின் சந்தை மதிப்பு ஏறக்குறைய ரூ 15 கோடி வரை இருக்கும். இவையனைத்திற்குமான வாடகையை உயரதிகாரிகளுக்காக அரசுதான் செலுத்தி வருகிறது.
ம

இதுதவிர தோட்ட வீடுகள் என்ற பெயரில் ஏராளமான பண்ணை வீடுகள் தில்லியின் சுற்றுப்புறங்களில் உள்ளன. சிவ்லிங் மந்திருக்கு அருகில் உள்ள அப்படி ஒரு பண்ணை வீட்டின் மாத வாடகை மாத்திரம் ரூ 4 லட்சம். இத்தாலிய மார்பிள் பதித்த வீடு 5,000 சதுர அடியில் இருக்கும். நீச்சல் குளம், செயற்கை நீர்வீழ்ச்சி, இரண்டு பயிற்சியளிக்கப்பட்ட உயர்தர நாய்கள், டால்பி முறையிலான வீட்டு திரையரங்கம், புல்வெளி என இந்தப் பட்டியல் நீள்கிறது. 24 மணி நேரமும் உயர் அழுத்த மின்சார உத்திரவாதமும் தரப்பட்டுள்ளது.
2013 நவம்பரில் பண்ணை வீடுகளின் குறைந்தபட்ச பரப்பளவை 2.5 ஏக்கருக்கு பதிலாக 1 ஏக்கராக குறைத்துக் கொள்ள டெல்லி வளர்ச்சி ஆணையம் உத்திரவிட்டதனால் 2,700 உரிமையாளர்கள் புதிய பண்ணை வீடுகளை துவங்கினர். சட்டர்பூர் பகுதியில் 90-களில் ஏக்கர் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் என இருந்த மதிப்பு இப்போது ரூ 25 கோடியை தொட்டுள்ளது. பெரும்பாலும் பணக்கார சீமான்களும், உயர்நடுத்தர பிரிவினரும்தான் இத்தகைய பண்ணை வீடுகளை சொந்தமாகப் பெற்றுள்ளனர். இங்கு மட்டும் 50 ஆயிரம் ஹெக்டேர் விளைச்சல் நிலம் பண்ணை வீடுகளாக மாற்றப்பட்டுள்ளது. இங்குதான் வார இறுதி நாட்களில் அரசு அதிகாரிகள், முதலாளிகள், தூதர்கள், கலைஞர்கள், பிரபலங்கள் கலந்துகொள்ளும் மது விருந்துகள் நடைபெறுகின்றன.
தெற்கு, மத்திய தில்லி மற்றும் துவாரகா பகுதியில் உள்ள பண்ணை வீடுகளை முதல் தர பண்ணை வீடுகளாக தில்லி மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பரப்பில் கட்டிடம் கட்டியதற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தவிர அவை இடிக்கப்படவெல்லாம் இல்லை. இதையே சாமானிய மக்களுக்கு அரசு பொருத்திப் பார்ப்பதில்லை. இடித்து தரைமட்டமாக்கிய பிறகுதான் விசாரணையே நடக்கும். இப்பகுதியில் ரூ.5 கோடி ஏக்கர் பரப்பு கொண்ட பண்ணை வீடு எனக் கிடைக்கும். இதில் ஓரளவு வெளிநாடு வாழ் இந்தியர்களும் முதலீடு செய்கின்றனர்.

தில்லியில் ஜே-ஜே காலனிகள் என்றழைக்கபடும் இந்த காலனிகளில் இருந்துதான் வீட்டு வேலைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் குறைவான ஊதியத்தில் வேலை செய்ய மேட்டுக்குடியினர் வாழும் தில்லிக்கு ஆட்கள் கிடைக்கிறார்கள். தில்லியின் நவம்பர் மாதக் கடுங்குளிரை, மைனசில் செல்லும் குளிரை அதற்குரிய ஆடைகளோ, காலணிகளோ இல்லாத காரணத்தால் தாங்க முடியாத அம்மக்கள் கூட்டம் கூட்டமாக தீ மூட்டி அதனை சுற்றி அமர்ந்திருப்பர்.
அதையும் மீறி குளிரை தாங்க முடியாதவர்கள் தமது கால்களை தீயின் நாக்குகளுக்கு குறுக்காக தொடர்ந்து ஆட்டுவதை நீங்கள் தில்லியின் நடைபாதையோரங்களில் அவ்வப்போது பார்க்க இயலும். நாதிர்ஷா படையெடுத்த போது கூட தில்லியில் ஏழைகள் இவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்களா என்று தெரியவில்லை. இந்த ஊரில்தான் 25 சுடுநீர் கருவிகளும், 16 சுடுநீர் கலன்களும் உடைய வீட்டில் ஷீலா தீட்சித் குடியிருந்திருக்கிறார்.

மேன்மக்கள் வசிக்கும் புதிய மோதி பாக் பகுதியில் தலா குடும்பம் ஒன்றுக்கு தினசரி 605 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. லூத்தியான்ஸ் தில்லி பகுதியில் இந்த அளவு 1,000 லிட்டர் வரை இருக்கிறது.
ஜே-ஜே காலனிகள் அரசால் சட்டப்படி அங்கீகாரம் பெறாத காரணத்தால் அதற்கு குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லும் வேலைகள் துவங்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்றில் ஒருவருக்கு தண்ணீர் முறைப்படி கிடைப்பதில்லை. மாறாக மாதமொன்றுக்கு ரூ 400-800 வரை வசூலித்துக் கொண்டு அரசு போட்டுத் தந்த ஃபோர்வெல் பைப்புகளில் தண்ணீரை எடுக்க அனுமதிக்கிறார்கள் தண்ணீர் மாபியாக்கள். இதுதான் காலனிகளின் நிலைமை. இதில் பண்ணை வீடுகளில் அடிக்கடி நல்ல நீர் மாற்றப்படும் நீச்சல் குளங்களையெல்லாம் இந்த மக்கள் நேரில் கூடபார்த்திருக்க மாட்டார்கள்.
தில்லியில் கடுமையான மின்தட்டுப்பாடும் நிலவுகிறது. அவ்வப்போது அங்குள்ள பெரிய ஷாப்பிங் மால்களில் இரவு பத்து மணிக்கு மேல் மின்சப்ளை இருக்காது என அரசு அறிவித்தாலும் ஜெனரேட்டர்கள் மூலம் அங்கே இருட்டு வந்து விடாது. உயர்நடுத்தர மற்றும் அதிகார வர்க்க மனிதர்கள் வசிக்கும் தில்லியின் மத்திய மற்றும் தென்பகுதிகளில் மின்சாரத்திற்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஏசி, ஹீட்டர், ஹெய்சர் என அறைக்கு ஒன்றுக்கு இரண்டாக பொருத்திதான் வாழ்கிறார்கள்.
இந்திரப் பிரஸ்தமாக இருந்து பின்னர் மொகலாயர் காலம், ஆங்கிலேயர் ஆட்சி வரை தில்லி ஆள்வோரின் தலைமை பீடமாக இருந்து வருவதால் இங்கே சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்திகள் மற்றும் அவர்களின் பரிவாரத்தினர் இப்படித்தான் அன்று முதல் ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர். இடையில் காலனியாக்க காலத்தில் ஆங்கிலேயர் அதை நவீன தில்லியாக மாற்றினர். ஆனால் ஆடம்பரமும், கேளிக்கையும், மர்ம பேரங்களும் மாறவில்லை. 47-க்குப் பிறகு இந்தியாவின் ஆளும் வர்க்க தலைமை பீடமாக தில்லி உறுதிபடுத்தப்பட்டது.
இப்படித்தான் காந்தியின் கதர் கட்சியில் எளிமைக்கு பேர் போன ஷீலா தீட்சித் ஒரு நட்சத்திர விடுதியை தோற்கடிக்கும் ஆடம்பரத்துடன் வாழ்ந்து வந்தார். இது அவரது சொந்த செலவில் அல்ல. மக்கள் வரிப்பணத்தில் சட்டப்படி அரசு ஒதுக்கிய செலவினத்திலிருந்தே ஷீலா தீட்சித் உள்ளிட்டோரின் மாளிகைகள் அலங்காரப்படுத்துகின்றன.
எனினும் இந்த மேட்டுக்குடி தில்லிக்கு கடுமுழைப்பு பரிசாரர்கள் தேவைப்படுகின்றனர். இத்தனை பெரிய மாளிகைகளை பராமரிப்பதற்கு உழைப்பாளிகள் வேண்டுமல்லவா? பீகார், உ.பி, வட கிழக்கு என எல்லா ஏழை மாநிலங்களில் இருந்தும் உழைக்கும் மக்கள் வந்து குவிகிறார்கள். புது தில்லி எனும் மாபெரும் எந்திரத்தின் பற்சக்கரங்கள் அவர்களை கடித்து கரும்பு சக்கை போல துப்புவதற்கு தயாராக இருக்கின்றன.
இதே மேட்டுக்குடி தில்லிதான் முழு இந்தியாவையும் ஆள்வதையும், ஆட்டிப் படைப்பதையும் செய்கிறது. அதனால் இந்த மேட்டுக்குடி தில்லி எனும் பேய் மாளிகைகள் அங்குள்ள உழைக்கும் மக்களுக்கு மட்டுல்ல ஒட்டு மொத்த இந்திய மக்களையும் எப்போதும் அச்சுறுத்துகின்றன. மக்கள் இந்த அச்சத்தை வெல்லும் வரை அங்கே மாளிகைகளில் இருந்து குடித்து கும்மாளமிடும் சிரிப்பொலி கேட்டுக்கொண்டுதான் இருக்கும்.
- கௌதமன். vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக