ஞாயிறு, 6 ஜூலை, 2014

கட்டிட விதிமீறல் கண்துடைப்பு ஆய்வு ? இஞ்சினியர்கள் இல்லாத ஆய்வுக்குழு !

கோவை : கோவையில், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், விதிகளின்படி கட்டப்படுகின் றனவா என, உள்ளூர் திட் டக் குழுமமும், நகர ஊரமைப்பு துறையும் ஆய்வை துவக்கியுள்ளன. அதேவேளையில், கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராயும் குழுவில், வடிவமைப்பு இன்ஜினியர்கள் இல்லாதது, ஆய்வின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.சென்னை, போரூர் அருகேயுள்ள மவுலிவாக்கத்தில், 11 தளங்களுடன் கூடிய கட்டடம் சரிந்து, 61 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அடுக்குமாடி கட்டடங்களின் உறுதி தன்மை மீதான நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியதாகிவிட்டது. இதனால், மாநிலம் முழுவதும் நகர ஊரமைப்புதுறை, உள்ளூர் திட்டக்குழும அனுமதியுடன் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களை ஆய்வு செய்ய, நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். ஆய்வு என்ற பெயரில் பில்டர்களிடம் மீண்டும் வசூல் வேட்டைதான் வேறு எதுவும் உருப்படியாக நடக்கப்போவதி்ல்லை
கோவை நகரில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாக கட்டடங்களில் ஆய்வுப்பணியை அதிகாரிகள் துவக்கியுள்ளனர். ரேஸ்கோர்ஸ்சில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஆய்வு நடந்தது. உள்ளூர் திட்டக்குழும அனுமதி வழங்கிய 28 அடுக்குமாடி கட்டடங்களிலும், நகர ஊரமைப்பு துறை அனுமதி வழங்கிய 48 அடுக்குமாடி கட்டடங்களிலும் தொடர் ஆய்வு நடக்கிறது.

அனுமதி பெற்று, கட்டுமான பணிகள் துவங்கப்பட்டாலும், பல இடங்களில் விதிகள் மீறப்படுகின்றன. அரசியல் பிரமுகர்கள், லஞ்ச அதிகாரிகள் துணைபோகின்றனர். எனவே, தற்போது நடக்கும் ஆய்வு, கண்துடைப்பாகி விடக்கூடாது என்பதே, பலரின் ஆதங்கம். உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் கூறுகையில், 'முதற்கட்டமாக, 15 மீ., உயரத்துக்கும் அதிகமாக கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களில் ஆய்வு நடக்கிறது. விதிமீறல் காணப்படும் கட்டடங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.

கோவையை சேர்ந்த ஸ்டக்சரல் இன்ஜினியர் வெங்கடசுப்ரமணி கூறியதாவது:டிசைனில் தெரிவித்துள்ளவாறு, கட்டடம் கட்டினால், உறுதி தன்மையில் எந்த பிரச்னையும் ஏற்படாது. கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தில், உறுதி தன்மையை பரிசோதிக்க தொழில்நுட்ப முறைகள் உள்ளன.'கோர் கட்டிங்' முறையில், கான்கிரீட் பில்லரில், சிறிய பகுதியை வெட்டி எடுத்து, அதன் உறுதியை பரிசோதிக்கலாம். உறுதி தன்மையை உடனடியாக பரிசோதிக்க குறிப்பிட்ட உயரத்தில் இருந்து சுத்தியலை துாக்கி வீசும்போது, அது எகிறி விழும் வேகத்தை பொறுத்து, உறுதி தன்மையை தெரிந்து கொள்ளலாம்.'அல்ட்ராசானிக் பல்ஸ் அண்ட் வெலாசிட்டி' சோதனை செய்தால், கான்கிரீட் உறுதியாக போடப்பட்டுள்ளதா, காற்று துளைகளால் கான்கிரீட் பலமின்றியுள்ளதா என்பதை கண்டுபிடித்து விடலாம்.

கட்டடத்தின் பரப்பு, உயரத்திற்கு ஏற்ப, கான்கிரீட் பில்லரில் இரும்பு கம்பி உள்ளதா என்பதை அறிய 'ரிபார் ஸ்கேனிங்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.கட்டடத்தில் உறுதி தன்மை இல்லாவிட்டாலும், அந்த கட்டடத்தை உறுதியானதாக மாற்ற தொழில்நுட்ப முறைகள் உள்ளன. புதிதாக கட்டும் கட்டடங்களில், ஆய்வு செய்து உறுதி தன்மையை அறியலாம். அடித்தளம் எவ்வளவு ஆழத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது என்பதை குழி தோண்டி மட்டுமே ஆய்வு செய்ய முடியும். கட்டடங்களுக்கு உறுதி சான்று அளிக்கும் இன்ஜினியர்கள், கட்டுமான பணி நடக்கும் போது, தினசரி ஆய்வு செய்து, கான்கிரீட் கலவை, இரும்பு கம்பியின் தடிமனை உறுதி செய்து, சான்றளிக்க வேண்டும். அப்போது தான் விபரீதங்களை தவிர்க்க முடியும்.உள்ளூர் திட்டக்குழுமம், நகர ஊரமைப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது, பக்கத்திறவிடம், திறந்தவெளி இடம் விடப்பட்டுள்ளதா என்பதையும், தரை வியாபித பரப்பை மட்டும் ஆய்வு செய்கின்றனர். இதற்கும், கட்டடம் இடிந்து விழுவதற்கும் சம்பந்தம் இல்லை. அதனால், அனுபவம் வாய்ந்த ஸ்டக்சரல் இன்ஜினியர், ஆர்கிடெக்ட் மற்றும் சிவில் இன்ஜினியர் கொண்ட குழுவை அமைத்து, அவர்கள் மூலம் கட்டடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு, வெங்கடசுப்ரமணி தெரிவித்தார்.

உருப்படியாக நடக்குமா?



கோவையில், அடுக்குமாடி கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டாலும், கட்டட உறுதித்தன்மை குறித்து பரிசோதிக்கப்படுவதில்லை. விதிமுறைகளின்படி கட்டடம் கட்டப்படுகிறதா என்று மட்டுமே ஆய்வு செய்கின்றனர். கட்டடம் உறுதியாக கட்டப்படுகிறதா, அடித்தளம் எவ்வாறு உள்ளது, கட்டடத்தை தாங்கும் தன்மை கொண்டதா என, தொழில்நுட்ப ரீதியாக ஆராயப்படுவதில்லை. காரணம், நகர ஊரமைப்பு துறை மற்றும் உள்ளூர் திட்டக்குழுமத்தில், 'ஸ்டக்சரல் இன்ஜினியர்' பணியிடங்கள் இல்லை. இப்பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.இதற்கான இன்ஜினியர்களை நியமிக்கும்வரை, தனியார் 'ஸ்டக்சரல் இன்ஜினியர்கள் மற்றும் ஆர்கிடெக்ட்களை, அதிகாரிகள் குழுவுடன் ஒருங்கிணைத்து, ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்றனர், கட்டட நிபுணர்கள். dinamalar.com

கருத்துகள் இல்லை: