வியாழன், 10 ஜூலை, 2014

வாடகை புகார்களை போலீசார் விசாரிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வாடகை தொடர்பான புகார்களை விசாரிக்க போலீசாருக்கு அதிகாரம் கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சுரேஷ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாமேம்பாலம் அருகே உள்ள வணிக வளாகத்தில் கடை வைத்துள்ளேன். இந்த வணிக வளாக கட்டிடத்தின் உரிமையாளர் பி.சையத் ஓமர் சஜித் என் மீது தேனாம்பேட்டை போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நான் அவருக்கு வாடகை தரவில்லை என்றும் என்னிடம் இருந்து வாடகையை வசூலித்து தரவேண்டும் என்றும் என்னை கடையில் இருந்து வெளியேற்றவேண்டும் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 161-ன் கீழ் எனக்கு நோட்டீசு அனுப்பி, விசாரணைக்கு வரும்படி அழைத்தார். நான் வழக்கறிஞருடன் சென்று புகாரை படித்து பார்த்தபோது அதில் எந்த கிரிமினல் புகாரும் இல்லை. சிவில் பிரச்சினை உள்ள இந்த புகாரின் அடிப்படையில் என்னை துன்புறுத்தக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.நமோநாராயணன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு கட்டிட உரிமையாளருக்கும், வாடகைக்கு இருப்பவர்களுக்கும் உள்ள சிவில் பிரச்சினை. இந்த புகாரை விசாரிக்க போலீசாருக்கு அதிகாரம் இல்லை. இதுபோன்ற புகார்கள் வந்தால், சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றுக்கொள்ளும்படி அறிவுரையை போலீசார் வழங்கவேண்டும். எனவே, மனுதாரரை போலீசார் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்று நீதிபதிகள் கூறியுள்ளார்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: