செவ்வாய், 8 ஜூலை, 2014

மதுரை பயணியின் ஏடிஎம் கார்ட்டை பறித்து பணம் எடுத்த போலீஸ் !

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தனியாக நின்று  கொண்டிருந்தவரை மிரட்டி, அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டைப் பறித்துச் சென்று பணம் சுருட்டிய போலீஸார் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயக்குமரேஷ். இவர், நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியில் இருந்து வருகிறார். இவர், கடந்த 28ல் விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் செல்லும் வழியில், மதுரை மாட்டுத்தாவணியில் இறங்கி நின்றார்.
அப்போது, அங்கே ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரிடம் ஏதோ தகவல் கேட்டாராம். அதில் அந்த இருசக்கர வாகனத்தில் வந்த பிரவீன், செந்தில்குமார், செந்தில் ஆகிய மூவருடனும் இவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.  அவர்கள் மூவரும், ஜெயக்குமரேஷை நோக்கி, “நீ என்ன திருநங்கையா? நாங்கள் மூவரும் போலீஸார். உன்னை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்று முட்டிக்கு முட்டி தட்டி... “ என்ற ரீதியில் மிரட்டி, அவரிடம் இருந்த பணத்தையும் ஏடிஎம் கார்டு முதலானவைகளையும் பறித்துக் கொண்டு சென்றுவிட்டனராம். அந்த நேரத்தில் ஜெயக்குமரேஷிடம் ஏடிஎம் கார்டு பின் நம்பர் கேட்டு வாங்கியுள்ளனராம்.
அதன் பின்னர் கடந்த சில தினங்களில் விளாங்குடி, சமயநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஏ.டி.எம்.மில் இருந்து, ரூ. 50 ஆயிரம் அளவுக்கு பணம் எடுத்துள்ளனர்..

பின்னர், மாத தொடக்கத்தில் சம்பள பணம் போடும் நேரத்தில் போலீஸில் புகார் சொல்லியுள்ளார். இந்நிலையில், அவர்கள் ஏடிஎம்மில் பணம் எடுத்தது அங்குள்ள கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து, விசாரணை மேற்கொண்ட மதுரை அண்ணா நகர் குற்றப்பிரிவு போலீஸார், கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மூவரும் தமிழ்நாடு 6-வது பட்டாலியனில் போலீஸாகப் பணி புரிகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது. dinamani.com

கருத்துகள் இல்லை: