வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

தினமலர் மட்டும் செக்ஸ் வெறியாக வலிந்து எழுதுகிறது

ஓரிரு நாட்களாக தமிழ் ஊடகங்களுக்கு கிடைத்த சென்சேஷன் ஜாக்பாட்டாக அந்த கேரளத்துப் பெண் மாறிவிட்டார். செய்திகளை நீங்களும் படித்திருக்கலாம். கேரளாவைச் சேர்ந்த அந்த 25 வயது பெண்ணை செகாநாத் என்று தினமலர் குறிப்பிடுகிறது. மற்ற பத்திரிகைகள் சகானாஸ், சகானா என்றும் அழைக்கின்றன. இது குறித்த அனைத்து செய்திகளையும் படித்துப் பார்க்கும் போது தெரிய வருவது என்ன?
நம்பிக்கை மோசடி, பணத் திருட்டு, ஜேப்படி என்ற வகையினங்களுக்குள் மட்டும் வரும் இது ஒரு குற்றச் செய்தி மட்டுமே. அந்தப் பெண் சிலரையோ இல்லை பலரையோ – எண்ணிக்கை ஊகங்களாகவும் கிளுகிளுப்புக்காகவும் பெரிது படுத்தப்படலாம் – திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி பணம், நகைகளை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகியிருக்கிறாள். வழக்கமாக ஆண்கள்தான் பல திருமணங்களை செய்து கொண்டு பல பெண்களை ஏமாற்றியதை படித்திருக்கிறோம். இங்கு ஆணுக்குப் பதில் ஒரு பெண், அவ்வளவுதான். வினவில் கூட சமீபத்தில் மாற்றுத்திறனாளி பெண்களை ஏமாற்றி மணம் செய்து பணம் திருடிய ஒரு மோசடிப் பேர்வழியை எழுதியிருந்தோம்.

ஆனால் ஆண்கள் வரும்போது வெறுமனே குற்றச் செய்தியாக எழுதும் ஊடகங்கள் பெண்கள் என்றால் மட்டும் காம அரக்கியாக கொச்சைப்படுத்தி எழுதுகின்றன. இதில் தினமலர் முன்னணி வகிக்கிறது. இந்தச் செய்தி குறித்து தினமலர் வைத்திருக்கும் தலைப்பு:
‘செக்ஸ்’ வெறிக்கு திருமண பந்தத்தை கொச்சையாக்கி பெண்ணின் ‘திடுக்’ பின்னணி….
இந்தக் கட்டுரையில் தினமலர் குறிப்பிடும் சில வரிகளைப் பாருங்கள்:
” அவரது தாயின் நடவடிக்கை சரியில்லாததால், அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறார். ஆண்கள் பலருடன் நெருக்கமாகப் பழகிய செகாநாத், வீட்டிலிருந்து வெளியேறினார்”
” யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் இஷ்டத்திற்கு பல இடங்களில் சுற்றி, பல ஆண்களுடன் பழகி வந்த செகாநாத்,”
” செக்ஸ் வெறி பிடித்த செகாநாத், ஆடம்பரமாக வாழ வேண்டுமென்ற ஆசையில் திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தி விட்டார்”
“அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார். மொத்தத்தில் அவர் மீது சந்தேகமே வரவில்லை. ஜாலியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். திருமணமான பெண்கள் இளம் வயதில் அப்படித்தான் இருப்பார்கள் என நினைத்து நினைத்து நானும், அவரது ஆசைகளுக்கு ஈடு கொடுத்து வாழ்ந்தேன்”
“செக்ஸ் வெறி பிடித்து அப்பாவி இளைஞர்களை திருமண ஆசையில் வீழ்த்திய பெண்ணைக் கைது செய்ய கமிஷனர் திரிபாதி தனிப்படை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை, ஏமாந்த வாலிபர்கள் எழுப்பியுள்ளனர்”
மற்ற பத்திரிகைகள் காதல் வலையில் இளைஞர்களை வீழ்த்திய கேரள அழகி என்பதாக முடித்துக் கொள்ளும் – இதுவும் விமரிசனத்திற்குரியதே – போது தினமலர் மட்டும் அதை செக்ஸ் வெறியாக வலிந்து எழுதுகிறது.

அந்தப் பெண் முசுலீம் பின்னணி கொண்டவராக இருப்பது பார்ப்பன தினமலரின் போதையை வெகுவாக ஏற்றியிருக்கலாம். ஏனெனில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் சிறுவன் ரஞ்சன் இறந்து போன செய்தியை திருமதி ஒய்ஜிபி மற்றும் பிற அவாள் கோஷ்டிகள் சற்றும் மனம் தளரக்கூடாது என்று வெகுவெகு கண்ணியமான மொழியில் எழுதியதும் இதே தினமலர்தான்.
குற்றவாளியான இந்தப் பெண் தான் ஒரு அனாதை என்று பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து பொருட்க்ளை திருடி சென்றிருக்கிறாள். ஆண்கள் செய்யும் திருமண மோசடிகளும் இத்தகைய சென்டிமெண்ட்களோடும் இன்னும் பணக்காரன், ஐ.ஏ.எஸ் என்ற பில்டப்புகளோடும் நடக்கும். இது பாலினத்தால் சமூகத்தின் யதார்த்தம் பிரிந்து கிடப்பதற்கேற்ப நடக்கிறது, அவ்வளவுதான். ஆக ஒரு ஜேப்படி மேட்டரை ஏன் செக்ஸ் வெறி என்று வெறி பிடித்து எழுத வேண்டும்? ஒரு திருட்டுப் பெண்ணை நீலப்பட நாயகி போலவும், விலைமாது போலவும் ஏன் தூற்ற வேண்டும்?
அங்குதான் தினமலரின் வர்த்தக வெறி வருகிறது. இத்தகைய மோசடிகளை இப்படி எழுதினால்தான் அந்த பெண்ணிடம் ஏமாற வாய்ப்பில்லாத இளைஞர்கள் கனவில் அவளோடு வாழ்ந்து முக்கியமாக செக்ஸ் வைத்துக் கொண்டு திளைக்க முடியும். அப்படி எழுதினால்தான் மேட்டர் நன்றாக ஹிட்டாகும். கோபம் வரவேண்டிய ஒரு கற்பழிப்புச் செய்தியைக் கூட ஒரு நீலப்பட விவரணையாக எழுதுவதுதான் தினமலர் உள்ளிட்ட தமிழ் ஊடகங்களின் லேகிய ஊடக தந்திரம்.
தினமலரின் எழுத்தைப் படிப்பவர்கள் அந்தப் பெண் உடம்பு சுகத்திற்காகத்தான் பலரை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறாள் என்றே முடிவுக்கு வருவார்கள். ஆனால் அதுதான் நோக்கமென்றால் அந்தப் பெண் கேரளாவில் ஒரு வீட்டுப் பெண்ணாகவே வாழ்ந்து அடைந்திருக்க முடியும். மேலும் எத்தகைய நபராக இருந்தாலும் நாள் முழுக்க, வாழ்க்கை முழுக்க காமவெறி பிடித்து அலைய முடியாது. அது சாத்தியமும் அல்ல.
பார்ப்பனிய நரித்தனம் மட்டும் தினமலர் அல்ல. இத்தகைய ஆபாச வெறியை, பச்சையான ஆணாதிக்கத்தை, பகிங்கமான காசு வெறியையும் சேர்த்தால்தான் அதன் பரிமாணம் விளங்கும். இத்தகைய தினமலர்தான் கோவை என்கவுண்டருக்கு வாசகரிடையே அற உணர்ச்சி சாமியாடலை கிளப்பியது. ஆனால் இந்த இரண்டு மேட்டர்களையும் ஒரு வாசகன்தான் படிக்கிறான். ஆம். அந்த வாசகர்களது தரத்தை கீழே பாருங்கள். இவை கேரளப் பெண் மோசடி குறித்த தினமலரின் செக்ஸ் கட்டுரைக்கு வந்த வாசகர் கருத்துக்கள்:
“ஒரு மொக்க பிகரு கிட்ட ஏமாந்த மொக்க பயலுக”
“கேரளாவில் இது மாதிரி கேஸ் நிறைய உண்டு. நமக்குத்தான் இது புதுசு.”
“கேரளாவுல இதுக்கெல்லாம் ஸ்பெசல் கோர்ஸ் நடத்துறாங்களா என்ன…அங்க இந்த விசயத்துல ஆணும் பெண்ணும் கலக்கத்தான் செய்யுறாங்க…..இதுல ஆச்சரியம் என்னதுன்ன கேரளாவுல இவ மேல போலிஸ் கம்ப்ளயன்ட் எதுவும் இருக்குற மாதிரி தெரியல….ம்ம்ம் …தாராளமா மனசிருந்தா கேரளானு தெரிஞ்சிக்கோ…..”
“கண்டிப்பாக இவள் ஒரு வாழ தெரிந்த பெண் தான். இவளை இப்படியே விட்டு விடுங்கள் இன்னும் பல நூறு ஆண்கள் இன்பம் பெறுவார்கள்”
“இந்த மொக்க கிட்ட என்னத்த பார்த்து போனான்னு தெரியல நம்ம (காம) மன்னர்கள்.”
“அடடா சூப்பர் பெண், இவளை சந்திக்க விரும்புகிறேன்”
“பல ஆண்களிடம் தாம்பத்திய உறவு வைத்துள்ள இந்த பெண்ணிற்கு கண்டிப்பாக எயிட்ஸ் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது…மேலும் பல ஒழுங்கான அப்பாவி வாலிபர்கள் இந்த பெண்ணால் ஏமாந்து அவர்களும் இந்நோயிற்கு ஆளாவதை தடுக்க வேண்டும்… பெண்ணை பிடித்து விசாரித்து பின் எயிட்ஸ் மறுவாழ்வு இல்லத்தில் அடைக்க வேண்டும்…”
“(அவரது தாயின் நடவடிக்கை சரியில்லாததால், அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறார்.) தாயைப்போல பிள்ளை நூலை போல சேலை பழமொழி சரிதான்.”
_____________________________
இந்த தினமலர்தான் காவிக் கும்பலை ஆதரித்தும், பாசிச ஜெயவாக்கு பல்லக்கு தூக்கியும், கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும், மூவர் தூக்கை ஆதரித்தும், தீக்குளித்த செங்கொடி காதலுக்காக செத்தார் என்றும் இன்னும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை அவதூறு செய்திருக்கிறது. அவையும் இந்த செக்ஸ் மேட்டரும் வேறு வேறு அல்ல. இதுதான் தினமலர். இப்படித்தான் தினமலர்.
www.vinavu.com

கருத்துகள் இல்லை: