சனி, 25 ஆகஸ்ட், 2012

போதிதர்மர் / அத்தியாயம் 5 கடத்தல்காரன் தேவை





போதிதர்மரை தனது வாரிசாக அறிவித்த ப்ரஜ்னதாரா அவரை சீனாவுக்கு அனுப்பி வைக்க ஆசைப்பட்டார். அதன் காரணமாகவே ப்ரஜ்னதாரா இறந்த பிறகு போதி தர்மர் குருவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு சீனா சென்றார். உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க, ப்ரஜ்னதாரா ஏன் குறிப்பாக சீனாவுக்கு அனுப்ப முடிவெடுத்தார்? அதற்குக் காரணம் ஒருவர்.
கி.மு. 260. மேற்கில் இரான், ஆப்கானிஸ்தான் போன்ற தேசங்களையும், கிழக்கில் வங்கதேசம், பர்மா போன்ற நாடுகளையும், வடக்கில் பூடான், நேபாளம் போன்ற இமாலய நிலங்களையும், தெற்கே தமிழகம் தவிர்த்த பிரதேசங்களையும் உள்ளடக்கிய மாபெரும் ராஜ்ஜியத்தை கட்டி ஆண்டவன்.  தன் பதவியை நிலைநாட்ட போர் தொடுக்கத் தயங்காதவன். அரியணையைக் கைப்பற்ற உடன்பிறந்த அண்ணன்களையே காவு வாங்கியவன். தன் மீதுள்ள விசுவாசத்தை நிரூபிக்க தன் கீழ் இருந்த ஊழியர்களின் உயிரைக் பிடுங்கியவன். தன்னை எதிர்க்க நினைத்தவனை விரைந்து அழித்தவன். மொத்தத்தில் கொலை வெறிபிடித்தவன். செங்கிஸ்கானுடனும் ஹிட்லருடனும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டியவனை மஹா அலெக்ஸாண்டருடனும் அக்பருடனும் சேர்த்தது வைத்த நிகழ்வு, கலிங்கப் போர். அவன் என்று குறிப்பிடப்படவேண்டியவன் மரியாதைக்குரியவராக மாறியதற்குக் காரணம் இந்த இறுதிப் போர். அவர், சாம்ராட் அசோக கக்கரவர்த்தி.

திரும்பும் இடம் எங்கும் ஓலக்குரல். கண்ணுக்கெட்டிய தூரம்வரை குருதி வெள்ளம். தீப் பற்றி எரியும் கட்டடங்கள். செத்து மடிந்து கிடக்கும் யானைகள், குதிரைகள், மனிதர்கள். இறந்த போர்வீரர்களைச் சுற்றி நின்று கதறும் உறவுகள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை பலி வாங்கிக்கொண்டு அசோகருக்கு வாகை சூட்டியது கலிங்கத்துப் போர்க்களம்.
பார்ப்போர் மனதை பதைபதைக்கச் செய்யும் இக்காட்சிகளுக்கிடையே மன்னன் அசோகன் அமர்ந்திருந்தான். வல்லூறுகளும் பிணவாடையும் வெற்றி முழக்கங்களும் எதிரொலித்த சூழலில் அவனிடம் ஒரே ஒரு சிந்தனை! ‘வெற்றி யாருக்கு? எனக்கா இல்லை காலனுக்கா? வெற்றி எனக்குத்தான் என்றால் இத்தனை உயிர்களை இழந்தது எப்படி வெற்றியாகும்? ஒரு சாராரின் கண்ணீரும் ரத்தமும்தான் மற்றொரு சாரரின் வெற்றியைத் தீர்மானிக்கிறதா? ஒருவன் மடிந்தால் தான் மற்றொருவன் தழைக்க முடியுமா?’
இது போன்ற கேள்விகள் அசோகனைச் சல்லடையாகத் துளைத்தெடுத்தன. ‘மனத்தில் ஏன் இந்த அமைதியற்ற நிலை? இத்தனை பெரிய வெற்றி பெற்றும் துளியும் சந்தோஷமில்லையே. குற்ற உணர்வு பாடாகப் படுத்துகிறதே. இதையெல்லாம் அறிந்துதான் நம் பாட்டனார் சந்திரகுப்த மௌரியர் சமணராக துறவு மேற்கொண்டாரா?’
அப்போதுதான் ஞானோதயம் பிறந்தது. ‘ஆம், உலகை வெல்லத் தேவை அமைதி, போர் அல்ல!’ தெளிவடைந்தார் அசோக மாமன்னர். அமைதி வேண்டி புத்த மதத்தைத் தேர்ந்தெடுத்தார் அசோகர். பௌத்தத்துக்கு ஆற்றும் முதல் தொண்டாக புத்த பிக்குக்கள் சங்கத்தைக் கூட்டினார். வாய் மொழியில் இருந்த புத்த நூல்கள் அனைத்தும் பிரதி எடுக்கப்பட்டன. காலம் காலமாக மனப்பாடம் செய்து வைக்கப்பட்டிருந்த கருத்துகள் ஏட்டில் பொறிக்கப்பட்டன. பின்னர், மக்களிடத்தில் புத்தரின் கருத்துகளைக் கொண்டு செல்லும் பொருட்டு உலகின் நாலாப்புறமும் புத்தபிக்குகளை அனுப்பி வைத்தார். தவிர தனது மகன் மஹிந்தரையும், மகள் சங்கமித்திரையையும்கூட பௌத்தமதத் தொண்டுக்கு அர்ப்பணித்தார். இவ்வாறு தென்திசை நோக்கி வந்த மஹிந்தராலேயே தமிழ் நாட்டுக்கு பௌத்தம் அறிமுகமானது. பெரும்பான்மை வரலாற்றாசிரியர்களின் ஒருமித்த கருத்து இது.
ஆனால், இலங்கை புத்த மத நூலான மஹாவம்சம், மஹிந்தர் தமிழகத்தின் வழியாக அல்லாமல் இலங்கைக்கு நேரடியாக பறக்கும் தட்டில் பறந்து வந்ததாகக் கூறுகிறது. இலங்கைக்கு அவர் தமிழகம் வழியே மட்டுமே செல்ல வாய்ப்புண்டு என்பது சிந்திக்க தெரிந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனாலும் மகாவம்சம் இப்படிச் சொல்வதற்குக் காரணம் அக்காலத்தில் தமிழ் மன்னர்களுடன் சிங்களவர்கள் கொண்டிருந்த பகைமையின் விளைவாகக்கூட இருக்கலாம்.
இப்படியாக அசோகர் மூலமாக உலகெங்கும் அனுப்பிவைக்கப்பட்ட ஏராளமான புத்தத் துறவிகளுள் ஒருவரான மசிம் ஸ்தவீரா (Massim Sthavira) என்ற பிக்கு மூலமாகத்தான் பௌத்த மதம் சீனத்தை சென்றடைந்தது என்பது மேற்கத்திய ஆசிரியர்களின் கருத்து. அதே நேரம், சீன ஆசிரியர்களின் கருத்துபடி Fayuan Zhulin என்பவர்தான் சீனாவுக்கு பௌத்தத்தை எடுத்து வந்தார். இங்கு நமக்குத் தேவை பௌத்தம் அசோகர் காலத்திலேயே சீனாவுக்கு கடத்தப்பட்டு விட்டது என்பதே.
இப்படியாக, பௌத்தம் சீனத்துக்கு போய்ச் சேரும் முன்பே சீனாவில் கன்ஃபூஷியசின் தத்துவமும் மூதாதையர் வழிபாட்டு முறையும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. அன்றிருந்த நிலையில் பௌத்தம் உடனடியாக சீனர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சைவத்துக்கும் அசைவத்துக்கும் வேறுபாடு தெரியாத சீனர்களுக்கு பௌத்தம் சொல்லும் புலால் உண்ணாமை என்றால் என்னவென்றே தெரியவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடவுளை வணங்குபவர்களிடம் கடவுள் விமரிசனமற்ற பௌத்தம் தடுமாறியது. இதனால் அவர்களுக்கு ஏற்றாற்போல் தன்னை தகவமைத்துக்கொண்டு பல காலம் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை பௌத்தத்துக்கு ஏற்பட்டது.
கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் கடந்தன. கி.பி முதல் நூற்றாண்டில் ஹான் வம்சத்து மன்னன் மிங் ஆட்சிக்கு வந்தான். ஒரு நாள் மிங்கின் கனவில் ஒரு மனிதர் தோன்றி பிரகாசித்தார். முகம் சந்திரனைக் காட்டிலும் பல மடங்கு ஜொலித்தது. மிங்கின் அரண்மனையின் முன் நின்று அவனைப் பார்த்து புன்னகை சிந்தினார். விடிந்தவுடன், அரசன் தனது சபையோரிடம் தான் கண்ட கனவைக் கூறி அதற்கான விளக்கம் கேட்க, அமைச்சர்களும் ஜோதிடர்களும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். ‘அவர் இந்தியாவைச் சார்ந்த கௌதம புத்தராகத்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் அவர் தான் தற்போதைக்கு மிகவும் விழிப்படைந்தவராக பேசப்படுகிறார்’ என்று அரசனிடம் பதிலளித்தனர். விரைவில் இதுபற்றி இந்திய பௌத்த பிக்குகளுக்கு தகவல் பறந்தது.
இறுதியில், தன்னையும் தனது மக்களையும் பௌத்தத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லியே புத்தர் தன் கனவில் வந்தார் என்கிற முடிவுக்கு வந்த மன்னன் மிங் பௌத்தத்தை ஏற்றான்.
சீனாவில் பௌத்த மதத்தின் பொற்காலம் தொடங்கியது. மிகத் துரிதமாக மக்களைச் சென்றடையவும் ஆரம்பித்தது. சீனாவுக்கேற்றாற் போல் பௌத்தத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. அதற்கு தேராவாதம் அசைந்து கொடுக்காவிட்டாலும் மஹாயானம் தலையசைத்தது. மடமடவென புத்த விஹாரங்கள் எழுப்பப்பட்டன. பாளி மொழியிலிருந்து பௌத்த சமய நூல்களை சீன மொழிக்கு மொழிபெயர்க்க இந்திய பிக்குகள் இறக்குமதி செய்யப்பட்டனர். சீன, இந்திய பிக்குகளின் கைவண்ணத்தில் எழுந்த நூல்கள் சீன காகித்தில் எழுதி பத்திரப்படுத்தப்பட்டன.
புதிதாக பௌத்தத்தை ஏற்ற சீனா எப்படி இருக்கிறது என்று காண சீனாவுக்கு இந்திய பிக்குகள் அடிக்கடி சென்று பார்த்துவிட்டு வருவதும், பௌத்தத்தை பிரதானமாகக்கொண்ட இந்தியாவின் நாலந்தா பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களுக்கு சீன மாணவர்கள் வந்து பாடம் கற்றுச் செல்வதும் இயல்பாயின. அன்றிலிருந்து இந்தியாவிலிருந்து சீனாவுக்கும் சீனாவிலிருந்து இந்தியாவுக்கும் பௌத்த பிக்குகளும் மாணவர்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டனர்.
அப்படி இந்தியாவுக்கு வருகை புரிந்த சீன மாணவர்களுக்கு எடுத்துக்காட்டு யுவாங் சுவாங்  என்ற பௌத்த மாணவர். கி.பி. 600 வாக்கில் சீனாவிலிருந்து புத்தர் பிறந்த இந்தியாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டார் யுவான் சுவாங். இவரது குறிப்புகளின்படி தஞ்சையிலும் மதுரையிலும் காஞ்சிபுரத்திலும் அசோகர் கட்டிய பல புத்த மடங்கள் இருந்தனவாம். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அசோகர் காலத்து ஸ்தூபிகளும் காணப்பட்டனவாம். மேலும், மஹிந்தர் தங்கியிருந்தாகக் கூறப்பட்ட மடம் இவர் பார்க்கும்பொழுது சிதிலமடைந்த நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
அதேபோல், இந்தியாவில் இருந்து சீனா சென்ற பிக்குகளுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான் நம் போதிதர்மர். தொடக்கத்தில் சீனாவில் பௌத்தம் பரவியபோது, சீனர்கள் பெயரளவிலேயே பௌத்தர்களாக இருந்தனர். சடங்குகளும் சம்பிரதாயங்களும் அவர்கள் வாழ்கையை ஆக்கிரமித்திருந்தன. புனித நூல்களைப் பட்டு இழைகொண்டு எழுதி தங்கப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்து அதற்கு தினமும் பூப்போட்டு வணங்கினர். வருடத்தில் என்றாவது ஒருநாள் அதனை வெளியில் எடுத்து தூசு தட்டி வாசித்துவிட்டு அதனால் தங்களுக்கு நன்மை கிட்டும் எனும் மயக்கத்தில் இருந்தனர்.
புத்தரின் சிலை, வீட்டுக்கு வீடு கடவுள் சிலை போல் இருந்தது. புத்தர் சொல்லித்தராத வகையில் அந்த சிலையை புத்தராக எண்ணி தினமும் போற்றிப் பிராத்தனை செய்து வந்தனர்.
ஆனால், புத்தமதச் சடங்குகளையும் புனித நூல்களையும் போற்றிய அளவுக்கு புத்தரின் தேடலை அவர்கள் போற்றவில்லை. தியானத்தை மேலோட்டமாக புரிந்துகொண்டிருந்தனர். அது மகான்களுக்கான வேலை என முடிவுகட்டினர். தங்களுக்கு தியானம் அவசியமில்லை எனக் கருதினர்.
மொத்தத்தில், புத்த மதத்தின் உடலை மட்டும் தரிசித்து வந்த சீனர்களுக்கு அதன் உயிர் எனக் கருதப்பட்ட தியானத்தைக் கடத்திச் செல்ல அப்போதைக்கு ஆளில்லை. இந்தக் குறை சீனாவில் இருந்த பிக்குகளுக்கும் இந்தியாவில் இருந்த பிக்குகளுக்கும் பெருங்கவலை அளித்தது. இந்த நிலையில்தான் ப்ரஜ்னதாராவின் கண்களில் சிக்கினார் போதிதர்மர். சீனர்களுக்கு பௌதத்தின் உயிரான தியானத்தை, தேடலை, மெய்யறிதலை கொண்டுசேர்க்க சரியான நபர் போதிதர்மர்தான் எனும் முடிவுக்கு வந்தார். போதிதர்மரும் எந்த மறுப்பும் சொல்லாமல் புறப்பட்டார்.
ஆக, போதிதர்மர் சீனா சென்றது பௌதத்தின் ஆன்மாவாகிய தியானத்தை சீனர்கள் மத்தியில் ஏற்றி வைக்கத்தானே தவிர,  தமிழர் தற்காப்புக் கலையையும் மருத்துவத்தையும் பரப்புவதற்கு அல்ல. போதி தர்மர் ஒரு தமிழனாகச் சென்றார் என்று கூறுவதைவிட பௌத்தனாக அங்கு சென்றார் என்பதே பொருத்தம். அதைவிட பௌத்தத்தின் 28ஆம் சமயத் தலைவராக சென்றார் என்பது மிக மிகப் பொருத்தமானது.
போதிதர்மர் எப்படி, எந்த வழியில் சீனா சென்றார் என்பது பல முடிச்சுகளைக் கொண்ட ஒரு கேள்வி.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: