திங்கள், 20 ஆகஸ்ட், 2012

மெகந்தி அலர்ஜி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிப்பு

திருவல்லிக்கேணியில் ஐஸ்அவுஸ் பகுதியில் மெகந்தியால் அரிப்பு ஏற்பட்டஉசேனா கூறியதாவது:-
நாங்கள் ஐஸ்அவுஸ் யானைக்குளம் பகுதியில் வசித்து வருகிறோம். ரம்ஜான் பண்டிகைக்காக நிறைய பேர் மெகந்தி போட்டனர். 10 ரூபாய் கொடுத்து நாங்களும் மெகந்தி வைத்தோம். இதில் எனது மகள் நவ்ஷீன் (வயது6) உடல் முழுவதும் அலர்ஜியால் சிவந்து தடிப்பு தடிப்பாக காணப்பட்டது. உடனே பக்கத்தில் உள்ள 24 மணி நேர ஆஸ்பத்திரிக்கு சென்று காட்டினோம். பிறகு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு ஊசி போட்டு மருந்து கொடுத்தனர். இப்போது எனது மகள் குணமாகி விட்டாள்.


மும்தாஜ் (புளியந்தோப்பு):- நேற்றிரவு 7 மணி அளவில் எனது மகள் ரெஜினாவுக்கு மெகந்தி வைத்தேன். அவளுக்கு திடீரென்று கையில் அரிப்பும், கண்ணில் எரிச்சலும் ஏற்பட்டது. உடனே மிகவும் சோர்வாகி படுத்து விட்டாள். நான் பயந்து என் கணவரிடம் சொன்னேன்.


அவர் சென்னையில் நிறைய பேருக்கு இதேபோல் அலர்ஜி இருப்பதாக கூறினார். இதனால் நாங்கள் பயந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று ஊசிபோட்டுக் கொண்டோம். கண்ணில் மருந்து ஊற்றினார்கள். அதன்பிறகு சரியாகி விட்டது.

புளியந்தோப்பு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இதேபோல் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீன் கீதாலட்சுமி கூறியதாவது:-

மெகந்தி போட்டு உடல் ஒவ்வாமை காரணமாக நள்ளிரவு முதல் இன்று மாலை வரை 150 பேர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். டாக்டர்களும் உடனுக்குடன் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். 70 பெண்களுக்கு உடல் ஒவ்வாமை காரணமாக சிவந்து தடிப்பு ஏற்பட்டதால் அவில் என்ற மருந்து கொடுத்து சரிப்படுத்தி விட்டோம். இன்று காலையில் எல்லோரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.

இவ்வாறு டீன் கூறினார்

கருத்துகள் இல்லை: