புதன், 22 ஆகஸ்ட், 2012

தியேட்டர் உரிமையாளர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது

சென்னை: தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களின் நிலையெல்லாம் கவலைக்கிடமாக இருப்பதாக கவலையுடன் கூறியுள்ளார் திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்.
திருத்தணி என்று ஒரு படம். பரத்-சுனைனா நடிப்பில் ரொம்ப காலமாக தயாரிப்பில் உள்ள படம். பேரரசுதான் இயக்கியுள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா கமலா தியேட்டரில் நடந்தது. இயக்குநர் கே.பாக்யராஜ் ஆடியவை வெளியிட, திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் பேசுகையில்,
சினிமா தியேட்டர்களில் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. இது பற்றி திரை உலகின் அனைத்து பிரிவினரும் ஒன்று கூடி விவாதித்து ஒரு நல்ல தீர்வு காணவேண்டும்.

2012-ம் வருடத்தில் 150 படங்கள் திரைக்கு வந்துள்ளன. அதில் மூன்றே மூன்று படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. 2 படங்கள் சுமாராக ஓடியது. மீதி அத்தனை படங்களும் தோல்வி அடைந்தன. தியேட்டர் அதிபர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதனால் மிக விரைவில் திரையுலகினர் ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றார் பன்னீர்செல்வம்.
பின்னர் பேசிய எஸ்.ஏ.சி. கூறுகையில், இங்கே பன்னீர் செல்வம் பேசும்போது தியேட்டர் அதிபர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறினார். தியேட்டர் அதிபர்களுக்காவது தியேட்டர்கள் உள்ளன. ஆனால் தயாரிப்பாளர்களுக்கோ ஒரு வீடு கூட இல்லை.
தியேட்டர்களில் கூட்டம் குறைந்து கொண்டே வருவது உண்மைதான். இதற்கு தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகிய அனைத்து பிரிவினரும் ஒன்று கூடி ஒரு முடிவு எடுக்க கூடிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
150 படங்கள் இந்த வருடம் திரைக்கு வந்துள்ளன. அதில் 120 படங்கள் குறைந்த பட்ஜெட்டில் தயாரானவை. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் அவைகளை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும்.
இந்த படம் வெளி வருவதற்கு நடிகர் பரத் உதவி செய்திருப்பதாக கேள்வி பட்டேன். சில நடிகர்கள் தயாரிப்பாளர்கள் எப்படியோ போகட்டும், அவர்கள் செத்தால் கூட பரவாயில்லை என்று நினைக்கிறார்கள் என்றார்.
விழாவில் திரையுலகினர் நிறையப் பேர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: