திங்கள், 28 நவம்பர், 2011

Kingfisher வருமான வரியா.. அப்படீன்னா?: இது தான் மல்லையாவின் கிங்பிஷர்!


Vijay Mallya
மும்பை: கிங்பிஷர் ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 422 கோடி வருமான வரியைக் கூட கடந்த சில ஆண்டுகளாக அந்த நிறுவனம் வருமான வரித்துறையிடம் செலுத்தாமல் இருந்துள்ளது. மேலும் பிராவிடண்ட் பண்ட் (வருங்கால வைப்பு நிதி) அமைப்புக்கு செலுத்த வேண்டிய ரூ. 15 கோடியையும் செலுத்தவில்லை.
விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனம் பெரும் நிதிச் சிக்கலில் மாட்டித் தவிக்கிறது. இதற்கு விமானத்துறையின் விதிகளையும், எரிபொருள் விலை உயர்வையும் காரணம் சொல்லி வருகிறார் மல்லையா. ஆனால், கிங்பிஷர் அளவுக்கே கட்டணம் வசூலிக்கும் பிற விமான நிறுவனங்கள் இவ்வளவு பெரிய நஷ்டத்தை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு பல நூறு கோடி பாக்கி வைத்துள்ள இந்த நிறுவனம், கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியத்தையும் சரியான நேரத்தில் தரவில்லை.

இந் நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரியான ரூ. 422 கோடியைக் கூட வருமான வரித்துறையிடம் செலுத்தாமல் இருந்துள்ளது இந்த நிறுவனம். இது மாபெரும் விதிமீறல் ஆகும். இதுவே ஒரு சிறிய நிறுவனமாக இருந்திருந்தால், வருமான வரித்துறையினர் சில மாதங்களிலேயே நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.

ஆனால், மல்லையாவின் அரசியல் லிங்குகள் காரணமாக வருமான வரித்துறை இந்த விஷயத்தில் இத்தனை காலம் அமைதி காத்துள்ளதாகத் தெரிகிறது.

அதே போல வருங்கால வைப்பு நிதி, சேவை வரி உள்பட ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட ரூ. 15 கோடியையும் அந்த நிறுவனம் கட்டவில்லை.

இந் நிலையில் ஏன் வருமான வரியைக் கட்டவில்லை என்று கேட்டு ஊழியர்களுக்கு நோட்டீஸ்களை அனுப்ப ஆரம்பித்துள்ளது வருமான வரித்துறை.

பார்ம் 16 கேட்ட ஒரு பைலட்டுக்கு கிங்பிஷரின் மனிதவளப் பிரிவு கொடுத்த பதில், ''இந்திய வரிகள் சட்டத்தின்படி பார்ம் 16 என்று ஏதுமில்லை''.

இது எப்படி இருக்கு...?

கருத்துகள் இல்லை: