சனி, 3 டிசம்பர், 2011

சென்னை திரும்பினார் கனிமொழி... விமான நிலையத்தில் கருணாநிதி வரவேற்பு

சென்னை: 7 மாத இடைவெளிக்குப் பிறகு டெல்லியிலிருந்து சென்னை திரும்பினார் கனிமொழி எம்.பி. அவரை திமுக தலைவர் கருணாநிதி விமான நிலையத்துக்கு நேரில் போய் வரவேற்றார்.
2ஜி அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த மே மாதம் 20-ந்தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் சிறையில் 194 நாட்கள் இருந்த அவர் கடந்த மாதம் 28-ந்தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 5 பேர் ஜாமீன் பெற்றனர்.
29-ம் இரவு 7 மணி அளவில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் வழக்கு விசாரணை நடைபெறும் நாளில் டெல்லியில் இருக்க வேண்டும் என்பதால் அங்கேயே தங்கி இருந்தார்.
இன்று சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் 200 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பினார். காலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் கனிமொழி எம்.பி.யை சென்னைக்கு வழியனுப்பி வைத்தனர்.
கருணாநிதி
பிற்பகல் 12 மணி அளவில் கனிமொழி சென்னை வந்து சேர்ந்தும் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி விமான நிலையம் சென்று வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கனி மொழியை வரவேற்க விமான நிலையம் சென்றனர்.
கனிமொழி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். கனிமொழி விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் அவரை வரவேற்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
தி.மு.க. கொடிகளும் பேனருடன் இடம் பெற்றிருந்தன. 'மானமிகு கனிமொழி கருணாநிதி அவர்களே வருக, இயக்கத்தின் தியாகமே, ஏழைகளின் இதயமே வருக... வருக.., எறும்புக்கும் தீங்கு இழைக்காத உனக்கு இத்தனை துயரங்கள் எதற்கு?' என்பன போன்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

கருத்துகள் இல்லை: