மனோஜ்கிருஷ்ணா
புரட்சி என்ற வார்த்தையை பலர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெறுமனே வாய் வார்த்தையாக மட்டுமே பயன்படுத்தியதையும் பயன்படுத்தி வருவதையும் நாம் அறிவோம். ஆனால் அந்த வார்த்தைக்குரிய உண்மையான பொருளுணர்ந்து அதைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்து சாதனைப் பெண்மணியாகத் திகழ்ந்தவர் ஒருவர் உண்டு என்றால் அவர் "தென்னிந்திய சினிமா ராணி' எனப் போற்றப்பட்ட மறைந்த டி.பி.ராஜலட்சுமிதான் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமிருக்காது.11-11-1911 அன்று பிறந்து நாடகம், சினிமா, இலக்கியம் உள்ளிட்ட கலையுலகின் அனைத்துப் பிரிவுகளிலும் கொடிகட்டிப் பறந்த டி.பி.ராஜலட்சுமிக்கு இது நூற்றாண்டு விழா. ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். சில துறைகளில் ஆண்களையும் விஞ்சி சாதனை படைக்கிறார்கள் என்றெல்லாம் நாம் சொல்லிக்கொண்டிருந்தாலும் உண்மையான கணக்கெடுப்பின்படி பார்த்தால் பெண் சுதந்திரம் என்பது இந்த 21-ம் நூற்றாண்டிலும் சொல்லிக்கொள்ளுமளவுக்கு இல்லை.
இந்தியாவில் 70 சதவீதப் பெண்கள் வீட்டுக்குள் கட்டுப்பெட்டியாகத்தான் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.இப்போதே இப்படி என்றால் நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலகட்டத்தில் பெண்களின் நிலைமையும் வாழ்வியல் சூழலும் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை சொல்லவா வேண்டும்?திருவையாறு சாலியமங்கலம் கிராமத்தில் பஞ்சாபகேச சாஸ்திரி-மீனாட்சி தம்பதியருக்கு மகளாப் பிறந்த டி.பி.ராஜலட்சுமி, மிகவும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்.அவருடைய தந்தை அந்தக் கிராமத்தின் கர்ணமாகப் பொறுப்பு வகித்தவர். டி.பி.ராஜலட்சுமிக்கு 7 வயதிலேயே பால்ய விவாகம் செய்து வைத்துள்ளனர் குடும்பத்தினர். ஆனால் அந்தத் திருமண பந்தம் விரைவிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. சிறுமியாக இருந்த டி.பி.ஆர்., பெற்றோருடன்தான் இருப்பேன் என வீட்டுக்கு வந்துவிட்டார்.இந்நிலையில் அவருடைய தந்தை திடீரென காலமாகி விடவே வருமானம் இன்றி குடும்பம் தத்தளித்தது. உற்றார் உறவினர் யாரும் உதவ முன் வரவில்லை. படித்துக்கொண்டிருந்த சிறுமி ராஜலட்சுமிக்கு அபார கேள்வி ஞானம். ஒரு முறை கவனித்தாலே தான் கேட்ட கீர்த்தனைகளை அட்சரம் பிறழாமல் நல்ல குரல் வளத்துடன் பாடுவார். வீட்டுக்கு அருகில் உள்ள சிலர், ""குழந்தையைப் பாட அனுப்பலாமே'' என அவருடைய தாயாரிடம் கூறியுள்ளனர். ராஜலட்சுமிக்கும் அதுதான் சரியாகப் பட்டது. ஆனால் வறுமையில் வாடிய குடும்பத்துக்கு உதவாத உறவினர்கள் "நம் வீட்டுப் பெண் மேடைகளில் பாடுவதா?' என வசை பாட மட்டும் மறக்கவில்லை. ஆனால் டி.பி.ஆரின் உறுதி, நிலை குலையவில்லை. தன் தாயாரிடம் மட்டும் சம்மதம் பெற்றார். அந்த நேரத்தில் அவருக்கு வாய்த்த ஒரே அதிர்ஷ்டம் - "தமிழ் நாடகவுலகின் தந்தை' என அழைக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்புதான். அவரிடம் "ராமனை விட்டு ஒரு நாள் ராஜ்யத்தில் ஒரு கணம் பூமியில் இருப்பதுண்டோ...' என்ற பாடலைப் பாடிக் காட்ட, அசந்துபோன சங்கரதாஸ் "இந்தத் துறையில் இனி உனக்குத்தான் முதலிடம்' என வாழ்த்தி ஆசீர்வதித்தார்.அவருடைய பயிற்சியாலும் டி.பி.ராஜலட்சுமியின் முயற்சியாலும் வி.எஸ்.சாமண்ணா ஐயரின் நாடகக் கம்பெனியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் நடித்த முதல் நாடகம் "பவளக்கொடி'. இதுதான் பின்னாளில் தியாகராஜ பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி நடிக்க அதே பெயரில் திரைப்படமானது. இதற்கிடையில் 1917-ல் ஆர்.நடராஜ முதலியார் தயாரித்த தமிழ் சினிமாவுலகின் முதல் மெüனப் படமான "கீசகவதம்' என்ற படத்தில் நடித்தார் டி.பி.ராஜலட்சுமி. அதையடுத்து நாடகங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்.கே.எஸ்.செல்லப்பா, கே.பி.மொய்தீன் சாகிப், கண்ணையா போன்ற ஜாம்பவான்களின் நாடகக் கம்பெனிகளில் ஏராளமான நாடகங்களில் கதாநாயகன், கதாநாயகி, இரட்டை வேடம் எனப் பற்பல கதாபாத்திரங்களில் நடித்துப் புகழின் உச்சிக்குச் சென்றார்.இந்நிலையில் தொழில் நிமித்தம் குடும்பத்துடன் திருச்சிக்கு இடம்பெயர்ந்தார். நாடகம் என்றால் வெறுமனே ஆடிப் பாடுவது என்றில்லாமல் தான் நடித்த நாடகங்கள் அனைத்திலும் தேச பக்திப் பாடல்களைப் பாடி மக்களிடையே சுதந்திர தாகத்தைத் தூண்டினார். அதே போல கர்னாடக சங்கீதப் பாடல்களையும் பாடி மக்களை ஈர்த்தார். தியாகராய கிருதிகளான "எந்தரா நீதானா...', சுரராகசுதா...' ஆகிய பாடல்களை ஹரிகாம்போதி, சங்கராபரணம் முதலிய ராகங்களில் டி.பி.ராஜலட்சுமியின் குரலில் கேட்ட ரசிகர்கள் மெய் மறந்தனர். அதே போல "இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை...', "ராட்டினமாம் காந்தி கைபாணமாம்...' போன்ற தேசபக்திப் பாடல்களும் வெகு பிரபலம்.இவற்றுக்காகவே இவருடைய நாடகங்கள் பல முறை மீண்டும் மீண்டும் அரங்கேறின. அதே சமயம் தேச பக்திப் பாடல்களைப் பாடியதற்காக பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சில முறை சிறை வாசத்தையும் அனுபவித்திருக்கிறார். நாடக உலகில் பல பிரபலங்களுடன் நடித்தபோதும் ராஜலட்சுமி-வி.ஏ.செல்லப்பா ஜோடி மிகவும் வெற்றிகரமான ஜோடியாக வலம் வந்தது.அவர் பணியாற்றிய நாடகக் கம்பெனிகளுடன் அந்தக் காலத்திலேயே இலங்கை, பர்மா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்கும் தனது நடிப்பால், பாடலால் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார். யாழ்ப்பாணத்தில் "ஹரிச்சந்திரா' நாடகத்தில் நடித்தபோது அதைக் காண காந்தியடிகள் வந்துள்ளார். நாடகத்தைப் பார்த்து மகிழ்ந்த காந்தியடிகள் வெள்ளை நிறத்தில் இருந்த ஒரு பொம்மைப் புலியை டி.பி.ராஜலட்சுமியிடம் பரிசாகக் கொடுத்து "இந்த வெற்றிப் புலியை வைத்துக்கொள்' என்று கூறியிருக்கிறார்.பரவசத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தான் அணிந்திருந்த வைர வளையலைக் கழற்றி "சுதந்திரப் போராட்ட நிதிக்காக இதை வைத்துக்கொள்ளுங்கள்' என்று கஸ்தூரிபாயிடம் கொடுத்திருக்கிறார் டி.பி.ராஜலட்சுமி.இவருடைய நாடகத்தைப் பார்த்த பல தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் ஏராளமான பதக்கங்களையும் பாராட்டுப் பத்திரங்களையும் கொடுத்துள்ளனர்.இந்தக் காலகட்டத்தில் அதாவது 1929-ல் சிலப்பதிகாரக் கதையை "கோவலன் அல்லது "பட்ங் ஊஹற்ஹப் அய்ந்ப்ங்ற்' என்ற பெயரில் ஏ.நாராயணன் என்பவர் மெüனப் படமாகத் தயாரித்தார். அதில் 18 வயதான ராஜலட்சுமியைக் கண்ணகியாக நடிக்க வைத்து மீண்டும் அவருடைய சினிமா சகாப்தத்தைத் தொடங்கி வைத்தார். ராஜலட்சுமியின் மூன்றாவது மெüனப்படம் "ராஜேஸ்வரி'. 1931-ல் வெளியான இந்தப் படத்தை ராஜா சாண்டோ இயக்கியிருந்தார்.தமிழ் சினிமாவின் முதல் குறும்படத்தில் நடித்த பெருமையும் ராஜலட்சுமியையே சாரும். மும்பையைச் சேர்ந்த சாகர் மூவிடோன் தயாரித்த "குறத்தி பாட்டும் நடனமும்' என்ற அந்தப் படம் நான்கு ரீல்களை மட்டுமே கொண்டது. இந்தப் படமும் 1931-ல் தான் வெளியானது.இதையடுத்து தமிழ் சினிமாவின் முதல் பேசும் படமான "காளிதாஸ்' படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தென்னிந்தியாவின் முதல் பேசும் பட நடிகை என்ற பெருமையையும் பெற்றார் ராஜலட்சுமி. இந்தப் படத்தை இம்பீரியல் டாக்கீஸ் தயாரிக்க எச்.எம்.ரெட்டி இயக்கியிருந்தார்.இதில் "காந்தியின் கைராட்டினமே' பாடலைப் பாடி திரை இசை என்ற ஒரு புதிய அத்தியாயத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் ராஜலட்சுமி. படம் மாபெரும் வரவேற்பைப் பெற ராஜலட்சுமியின் புகழ் மேலும் மேலும் பரவத் தொடங்கியது. "காளிதாஸ்' படத்துக்குப் பிறகு 1932-ல் "ராமாயணம்' படத்தில் டி.பி.ராஜலட்சுமி சீதை, சூர்ப்பனகை என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இந்தக் காலகட்டத்தில் ரசிகர்கள் அவருக்கு "சினிமா ராணி' என்ற பட்டத்தை வழங்கினர். அதுவே அவருடைய அடைமொழியாகிவிட்டது. அதன் பிறகு டி.பி.ராஜலட்சுமி இல்லாத படங்களே இல்லை எனும் அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. "சத்தியவான் சாவித்ரி', "கோவலன்', "வள்ளி திருமணம்', "அரிச்சந்திரா', "லலிதாங்கி', "குலேபகாவலி' என 1935 வரை பிஸியான நடிகையாக இருந்தார். இந்தப் படங்களையெல்லாம் ரசிகர்கள் பல முறை விரும்பிப் பார்த்தனர். இந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்களும் மக்கள் மனதில் நீண்ட காலம் நிலைத்து நின்றன. ("வள்ளி திருமணம்' படத்தில் நடித்த டி.வி.சுந்தரத்தைத்தான் பின்னாளில் திருமணம் செய்துகொண்டார்.) 1936-ம் ஆண்டு தன்னுடைய புகழ் கிரீடத்தில் மேலும் ஒரு மணி மகுடத்தைப் பதித்தார் ராஜலட்சுமி. கதை, வசனம், பாடல்கள் எழுதி, படத்தைத் தயாரித்து இயக்கி அதில் கதாநாயகியாகவும் நடித்து பல அவதாரங்கள் எடுத்ததுதான் அது! ஸ்ரீ ராஜம் டாக்கீஸ் என்ற பட நிறுவனத்தை நிறுவி "மிஸ் கமலா' என்ற படத்தை இயக்கி தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநர், இந்தியாவின் இரண்டாவது பெண் இயக்குநர் (இந்தியாவின் முதல் பெண் இயக்குநர் ஃபாத்திமா பேகம்) என்ற பெருமையைப் பெற்றார். இதில் டி.வி.சுந்தரம், சி.எம்.துரை ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர். படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் "வீர அபிமன்யு', "திரெüபதி வஸ்திராபகரணம்', "பாமா பரிணயம்', "சீமந்தினி', "பக்தகுமணன்', "தமிழ்த்தாய்', "உத்தமி' உள்ளிட்ட பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார். அதையடுத்து 1939-ல் "மதுரை வீரன்' என்ற படத்தை இயக்கினார். இதில் வி.ஏ.செல்லப்பா கதாநாயகனாக நடித்திருந்தார். 1950-ம் ஆண்டு ஜோசப் தளியத் இயக்கிய "இதயகீதம்' படம்தான் டி.பி.ராஜலட்சுமி நடித்த கடைசிப் படம். சினிமாவுலகில் 1931-ம் ஆண்டு முதல் 1950 வரை முன்னணி நடிகையாகவே வலம் வந்த டி.பி.ராஜலட்சுமியின் பல படங்கள் பல மாதங்கள் ஓடி வசூலில் சாதனை படைத்துள்ளன. தன்னுடைய படங்களில் பல புரட்சிகரமான வசனங்களையும் கருத்துகளையும் புகுத்தி ரசிகர்களின் ரசனைத் திறனை மேம்படச் செய்தவர். நாடகமானாலும் சினிமாவானாலும் ஒப்பனைக்காகத் தனக்கென எந்த ஓர் உதவியாளரையும் டி.பி.ராஜலட்சுமி வைத்துக்கொண்டதில்லை. தானே ஒப்பனை செய்துகொள்ளுவார். அதே போன்று தான் இயக்கிய படங்களின் படத்தொகுப்புப் பணிகளையும் அவர்தான் செய்வார். கலையுலகச் சேவைக்காக பல பதக்கங்களையும் கலைமாமணி விருதையும் பெற்றிருக்கிறார். "கமலவல்லி', "விமலா' என்ற இரு நாவல்களையும் எழுதியுள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக 1964-ல் மறைந்தார் டி.பி.ராஜலட்சுமி. வறுமையான குடும்பப் பின்னணியில் பிறந்திருந்தாலும் போராட்டம் இருந்தால்தான் வாழ்வில் சுவையும் வேகமும் இருக்கும். இல்லாவிட்டால் வெறும் உயிர்தான் இருக்கும். அதில் உயிரோட்டம் இருக்காது என்ற உண்மையை உணர்ந்துகொண்டு, தனியொரு பெண்ணாக, தான் எதிர்கொண்ட பல சோதனைகளைத் தன்னுடைய முயற்சியால் முட்டி எறிந்தவர். அதனால்தான் அவரது வாழ்க்கையில் எதிர்ப்பட்ட சோதனைகளில் உள்ள கொம்பு ("ú') நீங்கி சாதனைகளாக மாறின. பெண் என்று இல்லை... ஒவ்வொருவரும் டி.பி.ராஜலட்சுமியின் வாழ்க்கைப் பாடத்தை வழித்தடமாக ஏற்றுக்கொண்டு வீறு நடை போட்டால் விழுந்து விடும் இலைகளாக இல்லாமல் விழுது விடும் கிளைகளாகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பது மட்டும் நிதர்சனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக