ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

Sai Baba மன்மோகன் சிங், சோனியா பிரதீபா பாட்டீல் இரங்கல்

டெல்லி: கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்ட ஆன்மீக குரு சாய்பாபா இயற்கை எய்தியதையொட்டி, குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது இரங்கல் செய்தியில், "உலகின் மிகச் சிறந்த ஆன்மீகத் தலைவர், சமூக சேவகரை இழந்தது இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு," என்று கூறியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் தனது இரங்கல் கடிதத்தில், "மறைந்த சத்ய சாய்பாபாவின் ஆன்மீக அறிவை ஆழமாக புரிந்துகொண்டவன் நான். சத்ய சாய் பாபா, ஒரு உலகில் இருக்கும் பல கோடி மக்களின் ஆன்மீக தலைவர்.

ஒழுக்கமான அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டியவர். அவருடைய போதனைகள் உண்மை, அமைதி, அன்பு, அகிம்சை போன்றவற்றை வலியுறுத்துவதாக இருந்தன.

பிரசாந்தி நிலையத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்வி, மற்றும் பொது சுகாதாரத்திற்கும் பல்வேறூ நிறுவனங்கள் மூலமு பல உதவிகளை செய்து வந்தார்.

ஒவ்வொரு மனிதருடைய கடமையானது அனைவரின் வாழ்க்கைக்கு தேவையானவற்றை நிறைவு செய்வதாகும் என்று நம்பினார். அவருடைய மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருடைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

சோனியா காந்தி...

சாய்பாபா மறைவுக்கு தனது ஆழந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும், தேசம் ஒரு சிறந்த ஆன்மீக குருவை இழந்துவிட்டதாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

சாய்பாபா மறைவுக்கு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளார் பாஜக தலைவர் எல் கே அத்வானி. தனது இரங்கல் செய்தியில், "சாய்பாபாவைப் போன்ற சிறந்த ஆன்மீகத் தலைவர்கள் இந்தியாவில் மிகச் சிலரே இருந்தனர். நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போதுதான் எனக்கு பாபாவின் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு அவரை பல முறை சந்தித்தேன். பாபா ஒரு மிகச் சிறந்த குரு மட்டுமல்ல, சமூக சேவகரும் கூட. அவரது மறைவு இந்தியாவை இருளில் மூழ்கடித்துள்ளது. அவரது இறுதி நிகழ்வில் நான் பங்கேற்பேன்," என்று கூறியுள்ளார்.

நரேந்திரமோடி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறுகையில், "உலகில் உள்ள ஆன்மீகத் தலைவர்களில் சாய்பாபா தன்னிகரற்றவர். மனித உலகத்துக்கு மருத்துவ சேவைகளையும், ஊரகப் பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் கல்வி வழங்கியும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர் ஒரு சிறந்த மனிதர். தனிப்பட்ட முறையில் அவரது அன்பு மற்றும் தெய்வகிருபையால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். அவரது பூத உடலுக்கு என்னுடைய அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தி:

அன்பையும், மனித நேயத்தையும் மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்ய தன் வாழ்நாளை அர்ப்பணித்த புட்டபர்த்தி ஸ்ரீசாய்பாபா, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

எண்ணற்ற இலவச கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும், இன்னபிற மக்கள் நலப்பணியாற்றும் அமைப்புகளையும் உருவாக்கி கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய மக்களுக்கும், உலகெங்கும் உள்ள ஏழை, எளியோர்க்கும் அரும் பணியாற்றியவர் புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா.

அவருடைய மறைவு மனித குலத்திற்கு பேரிழப்பு. புட்டபர்த்தி ஸ்ரீசாய் பாபாவை இழந்து வாடும் அவரது பக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:

சாய்பாபா தனக்கென மட்டும் வாழாமல் இந்த நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பல நற்பணிகளை ஆற்றியுள்ளார். அவர் பெயரால் இயங்கும் அறக்கட்டளை மூலம் கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் உலகமே பயன்பெறும் அளவிற்கு அவர் சேவை செய்துள்ளார்.

சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா ஆற்றிலிருந்து பெறப்படும் தண்ணீருக்கு பெரும் செலவில் சாய்பாபா கால்வாய் அமைத்து தந்தார் என்பதை தமிழ்நாடு என்றும் மறக்காது. அந்த அளவுக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதில் அவர் ஆர்வம் கொண்டவர்.

இவரது இழப்பு நமக்கும், நம்முடைய நாட்டிற்கும் ஈடு செய்யமுடியாத இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவரது மறைவால் துயருரும் அவர் மீது பற்று கொண்டோர் அனைவரும் ஆறுதல் அடையவும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தலைவர் சேதுராமன்:

ஆன்மீக துறையில் இருந்தாலும் ஏழை எளிய மக்களின் நலன் குறித்து மிக அதிக அக்கறைகாட்டி மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு திட்டங்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் பெரிய அளவில் நிதி உதவி செய்துள்ளவர் சாய்பாபா.

அவரது மறைவால் துயரப்படும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கும் அவரது நிர்வாகிகளுக்கும் எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடுமுழுவதிலுமிருந்து மேலும் பல தலைவர்கள், ஆன்மீகப் பெரியவர்கள் சாய்பாபா மறைவுக்கு அஞ்சலியும் இரங்கலும் செலுத்தி வருகின்றனர்.
English summary
Prime Minister Manmohan Singh, Congress President Sonia Gandhi and Senior Bharatiya Janata Party leader LK Advani joined millions of people in offering their condolences on the passing away of Sri Sathya Sai Baba. Gujarat Chief Minister Narendra Modi, All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) chief J Jayalalitha, Former Union home minister and Punjab Governor Shivraj Patil have paid their homage to the great spiritual leader Sai Baba.

கருத்துகள் இல்லை: