புதன், 27 ஏப்ரல், 2011

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் சாய் பாபா கார்-நெகிழ்ச்சியுடன் கூறும் உரிமையாளர்

சத்ய பாபாவின் பழைய கார் அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளி கொடுப்பதாக, அந்த காரின் தற்போதைய உரிமையாளர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


மும்பை, பந்த்ரா பகுதியை சேர்ந்த டொயோட்டோ டெக் கார் சர்வீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இர்பான் மொகுல். இவரது வீட்டு கேரேஜில், நிறைய கார்கள் நிற்கின்றன. ஆனால், அங்கு நிற்கும் பழைய மாடல் ரோல்ஸ் ராய்ஸ் ஒன்றை அவர் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.

வேறு எந்த வின்டேஜ் காருக்கும் இல்லாத பெருமை இந்த காருக்கு உண்டு. ஆம். இந்த காரின் முதல் உரிமையாளர் சத்ய சாய்பாபா ஆவார். தற்போது இந்த காரை வைத்திருக்கும் மூன்றாவது உரிமையாளர் இர்பான் மொகுல். சாய்பாபா வைத்திருந்த இந்த கார் அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளி கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து இர்பான் மொகுல் கூறியதாவது:

"கடந்த 1972ம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து இந்த காரை சத்யசாய் பாபா வாங்கினார். இந்த கார் அனந்தபூர் பிரசாந்தி நிலையத்திலுள்ள சத்யசாய் உயர்கல்வி நிலையத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டது. பாபா வெளியில் செல்லும்போது, இந்த காரில்தான் செல்வார். லட்சக்கணக்கான மக்களுக்கு அருளாசியை இந்த காரில் இருந்து சாய்பாபா வழங்கியுள்ளார்.

பின்னர் 1984ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த விவேக் பர்மன் என்ற தொழிலதிபரிடம் இந்த கார் விற்பனை செய்யப்பட்டது. பாபாவிடம் இருந்த வரை ஏடிஏ9 பதிவு எண்ணை கொண்டிருந்தது. டெல்லியில் இந்த காருக்கு டிஎன்ஏ 8888 என்ற பதிவு எண் வழங்கப்பட்டது.

கடந்த 1996ம் ஆண்டு இந்த காரை எனது தந்தை அமன் மொகுல் வாங்கினார். ஆனால், இந்த காரின் விலையை பற்றி எனது தகப்பனார் யாரிடமும் கூறவில்லை. அவரும்கூட பாபாவின் பக்தர்தான். இந்த கார் வந்த நாள்முதல்எங்களது வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறோம்.
]
இந்த காரை நான் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவே கருதுகிறேன். எவ்வளவு விலை கொடுத்தாலும் காரை விற்க மாட்டேன். இதை விலைமதிக்கமுடியாத பொக்கிஷமாகவே கருதுகிறேன். இதை வைத்திருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்," என்றார்.

இர்பான் மொகுலின் சர்வீஸ் சென்டருக்கு கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் கார்கள் வருகின்றன. இந்நிலையில், சாய்பாபாவின் தீவிர பக்தரான டெண்டுல்கர் உங்களிடம் காரை விலைக்கு கேட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு,"இந்த காரை சச்சின் என்னிடம் கேட்கமாட்டார். ஏனெனில், இந்த கார் எங்கள் வளர்ச்சிக்கும், வியாபாரத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பது அவருக்கு(சச்சின்)தெரியும்,"என்று இர்பான் கூறினார்.

கருத்துகள் இல்லை: